ஏனெனில் - 17: புத்தகங்களும் ‘செட் ப்ராப்பர்ட்டி’தானா?


திரைப்படக் காட்சிகளில் சுவரில் தொங்கும் நாட்காட்டிகள்கூட இன்றைக்கு விவாதப்பொருளாக மாறுகின்றன. கலை இயக்கத்தின் அரங்க அலங்காரங்களில் புத்தகங்கள் இன்னும் அந்த முக்கியத்துவத்தைப் பெறவில்லை என்பது ஆச்சரியம்தான். வாசிப்பதில் நேசம் கொண்ட ஒன்றிரண்டு இயக்குநர்களின் படங்களில் மட்டும் புத்தகங்கள் தலைகாட்டுகின்றன. ஆனால், கதாபாத்திரங்களின் தன்மையையோ கதைப் பின்னலையோ வெளிப்படுத்துவதாக அமைவது அரிதினும் அரிதாகத்தான் இருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் அவர் தோன்றும் முதல் காட்சியில் ‘மை ஃபாதர் பாலையா’ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பார். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடும் அவரது கதாபாத்திரத்தை அந்தப் புத்தகம் குறியீடாக உணர்த்தும். சிறுமை கண்டு பொங்கும் இளைஞனாக விஷால் நடித்த திரைப்படமொன்றில், தமிழருவி மணியனின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ புத்தகத்தைத் தனது பயணப் பையிலிருந்து அலமாரியில் அடுக்கிவைப்பதாக ஒரு காட்சி வந்ததாய் நினைவு. இன்று தமிழருவி மணியனின் புத்தகத்தை அப்படி காட்சிப்படுத்துவார்களா என்று தெரியவில்லை.

‘அவள் ஒரு தொடர்கதை’யில் நடிகர் சோமன் பரிசளிக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல், அதன் தலைப்பால் உறவுகளின் பிறழ்வுகளைச் சுட்டுகிறது. ‘காதலுக்கு மரியாதை’யின் ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ புத்தகம் வெறும் ‘செட் ப்ராப்பர்ட்டி’. அந்தப் பெயரில் புகழ்பெற்ற புத்தங்கள் எதுவும் இல்லை. எனினும், கதைக்கேற்ற தலைப்பு. ‘என்ன விலை அழகே’ பாடலில் குணாலும் சோனாலி பிந்தரேவும் ஜாகிர் உசேனைக் கேட்டுக்கொண்டு லியோ டால்ஸ்டாயின் ‘வார் அண்ட் பீஸ்’ படித்துக்கொண்டிருப்பார்கள். காட்சிக்கும் கதாபாத்திரங்களுக்கும் தொடர்புகள் எல்லாம் ஒன்றுமில்லை.

காதல் பாடல் மட்டும்தான். சரண் இயக்கிய ‘ஜே.ஜே’ படத்தில் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலைக் காட்டினாலும் நாவலுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாயகப் பாத்திரத்தின் முன்னெழுத்தையும் பெயரையுமே படத்தின் தலைப்பு குறிக்கிறது. இருந்தாலும் குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தோடு பூஜாவுக்கும் அமோகாவுக்கும் இடையில் மாதவன் தோன்றிய புகைப்படம் கவனத்தைப் பெற்றது. ‘தீராநதி’ இலக்கிய மாத இதழில் அந்தப் படத்தை வெளியிட்டு ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் ஜே.ஜே?’ என்று அடிக்குறிப்புகூட எழுதினார்கள்.

அண்மையில் ‘கெத்து’ திரைப்படத்தில் கதாநாயகி ஏமி ஜாக்சன், நூலகத்திலிருந்து புத்தகங்களைத் திருடி வீட்டில் சேகரித்துவைக்கும் பழக்கம் உள்ளவராகச் சித்தரிக்கப்பட்டிருப்பார். அவர் களவாடும் புத்தகங்களில் ஜெயமோகனின் புத்தகமும் ஒன்று. ஒருவேளை, அவர் ஜெயமோகனின் வாசகியாக இருந்தால் என்னாவது? ஜெயமோகன் எழுதுகிற வேகத்துக்கு அவரால் திருட முடியுமா என்று சந்தேகம் வந்தது.

தென்காசி பாலகுமாரன், புரியாத நாவல்களையும் படிக்கிற எழுத்தாளர் என்பதால் அவர் ஒரு விதிவிலக்கான பாத்திரமாக இருப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது. கடைசியில், அப்பாத்திரம் ஒரு சராசரி டிவி சீரியல் வசனகர்த்தாவாக மட்டுமே வந்துபோனது.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் திருச்சியில் கல்லூரி இளநிலை படித்துக்கொண்டிருந்தேன். பாலுமகேந்திராவின் ‘ஜூலி கணபதி’ அப்போது வெளியாகியிருந்தது. திருவானைக்காவில் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும்தான் அந்தப் படம் ஓடியது. மொத்த ஏரியாவுக்கும் ஒரே ஒரு பெட்டிதான். ஒரு மாதம் காத்திருந்து தஞ்சாவூரில் அந்தப் படத்தைப் பார்த்தேன். கதாநாயகன் ஜெயராம் ஒரு எழுத்தாளர். பெயர், தென்காசி பாலகுமாரன். படத்தில் அவர் தோன்றும் முதல் காட்சியில் கோணங்கியின் ‘பாழி’ நாவல் இருந்தது. ராயப்பேட்டையிலிருந்து ‘தி பார்க்கர்’ பதிப்பகம் வெளியிட்ட முதல் பதிப்பு அது. அதற்குக் கொஞ்ச காலத்துக்கு முன்புதான் 6 மாதங்கள் மெனக்கிட்டு அந்த நாவலை 2 தடவை முழுவதுமாகப் படித்திருந்தேன். பின்னாட்களில் நேரடிச் சந்திப்புகளில் கோணங்கியே சில குறிப்புகளைக் காட்டும்வரை அந்நாவலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தென்காசி பாலகுமாரன், புரியாத நாவல்களையும் படிக்கிற எழுத்தாளர் என்பதால், அவர் ஒரு விதிவிலக்கான பாத்திரமாக இருப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது. கடைசியில், அப்பாத்திரம் ஒரு சராசரி டிவி சீரியல் வசனகர்த்தாவாக மட்டுமே வந்துபோனது. அந்தப் படத்தை இன்று நினைத்துப் பார்க்கையில், ரம்யா கிருஷ்ணனின் நதிக்கரையோரப் பாடலைத் தவிர வேறொன்றும் நினைவுக்கு வரவில்லை.

பின்பு, சென்னையில் தொலைக்காட்சி கவியரங்கம் ஒன்றில் கலந்துகொண்டேன். அங்கு எழுத்தாளர் பாலுசத்யாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது அந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நினைவுகளைச் சொன்னார். எனது கேள்வியை அவரிடமே கேட்டுவிட்டேன். “அந்தப் புத்தகத்துக்கும் அந்த கேரக்டருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. காட்சியில் அந்தக் கேரக்டர் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று டைரக்டர் யோசித்தார். உடனே, எனது பையிலிருந்த புத்தகத்தைக் கொண்டுபோய் கொடுத்தேன்” என்று அதிரடியாக ஒரு பதிலைச் சொல்லி, என் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

திரைப்படக் காட்சிகளில் புத்தகங்கள் இடம்பெறும்போது புத்தகத் தலைப்பு என்னவென்று இப்போதெல்லாம் நான் பதறுவதில்லை. மர்லின் மன்றோ ‘உலிசியஸ்’ படிக்கும் அந்த வண்ணப் புகைப்படம்தான் என்னை வழிநடத்துகிறது. மர்லின் மன்றோவா, ஜேம்ஸ் ஜாய்ஸா என்றால் நான் எப்போதும் 2-வது தேர்வைப் பற்றி யோசிப்பதே இல்லை.

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

x