மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: கோவை தொழில் துறையினர் வலியுறுத்தல்


பிரதிநிதித்துவப் படம்

கோவை: தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என அரசுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது. ஏற்கெனவே கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற தொழில்துறையினர் வலியுறுத்திவரும் நிலையில் எக்காரணம் கொண்டும் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தக் கூடாது என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சூரியஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா, தென்னிந்திய ஸ்பின்னர்கள் சங்கத்தின் (சிஸ்பா) துணைத் தலைவர் பிரதீப், மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால், தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி ஆகியோர் கூறியதாவது: நடப்பாண்டு கோடை காலத்தில் தினசரி மின் நுகர்வு வரலாறு காணாத வகையில் 21 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்தது. இருந்த போதும் தமிழகத்தில் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்பட்டது.

தமிழக அரசு மற்றும் மின் வாரியத்தின் நிர்வாக செயல்பாடுகள் மிகுந்த பாராட்டுக்குரியது. கடந்தாண்டு ஜூலை முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை எல்டிசிடி பிரிவை சேர்ந்த மின் நுகர்வோர் ரூ.3,920 மட்டுமே நிலைக் கட்டணம் செலுத்தி வந்த நிலையில், கடந்தாண்டு ரூ.17,300-ஆக உயர்த்தப்பட்டது. இதனால் தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

இத்தகைய சூழலில் ஏற்கெனவே பெறப்பட்ட ஒப்புதல் அடிப்படையில் இவ்வாண்டு ஜூலையில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் தமிழக அரசு மின் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது. ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ள நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

வருவாய் அதிகரிக்கும்: தொழில்துறையினர் மேலும் கூறும் போது, “வணிகவரி மூலம் மாதந்தோறும் ரூ.9,500 கோடி வருவாய் கிடைக்கிறது. மின் கட்டணத்தை குறைத்தால் தமிழக அரசுக்கு மாதந்தோறும் வணிக வரி மூலம் கிடைக்கும் வருவாய் தற்போது உள்ளதை விட மூன்று மடங்காக உயரும். எனவே, தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க ஆவண செய்ய வேண்டும்’’என்றனர்.