கோவையில் அதிகரித்து வரும் வாடகை இருக்கை அலுவலகங்கள்!


கோவை நவ இந்தியாவில் உள்ள இன்குபேஷன் மையத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள். (கோப்புப் படம்)

கோவை: கோவையில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவன தொழில்முனைவோர், ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அலுவலகத்தில் வாடகைக்கு இருக்கைகளை பெற்று பணிபுரியும் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமித வளர்ச்சி கண்டு வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, தற்போது 1,25,000 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 7,700 ஆக உயர்ந்துள்ளது. இதனால், 2-ம் நிலை நகரங்களில் வாடகை அலுவலகங்களின் (co working space) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து, ஸ்டார்ட் அப் நிறுவனம் நடத்திவரும் மோகன தீபா கூறும்போது, “இது போன்ற வாடகை அலுவலகங்களில் மாத வாடகை செலுத்தி இருக்கையை மட்டும் பெற முடியும். பராமரிப்பு கட்டணம், ஒட்டுமொத்த கட்டிடத்துக்கான வாடகை, மின் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட எந்த செலவுகளும் இல்லை. இதன்மூலம் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களை அதிகரித்தல், வணிகத்தை மேம்படுத்துதலில் கவனம் செலுத்த முடியும்” என்றார்.

வாடகை அலுவலகத்தின் நிறுவனரான அஜிமா கூறும்போது, “கோவையில் கடந்த 2023 முதல் இத்தகைய அலுவலகங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன. கோவையில் 4 அலுவலகங்களை நடத்தி வருகிறோம். 400-க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வருவோரும் இருக்கை பதிவு செய்து வருகின்றனர். சுமார் 3 ஆண்டுகள் இங்கு பணிபுரிந்து வர்த்தகம் விரிவடையும்போது, தனி இடத்துக்கு செல்கின்றனர். வசதிகளுக்கு ஏற்ப ஒரு இருக்கைக்கு ரூ.3000 தொடங்கி ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது. இத்துறையில் கோவை நகரம் அடுத்த 10 ஆண்டுகளில் நட்சத்திர அந்தஸ்தை பெறும்” என்றார்.

முதன்முதலாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக்கு இலவசமாக இன்குபேஷன் மையத்தை நடத்தி வரும் அம்பி மூர்த்தி கூறும்போது, “கோவையில் ஓராண்டில் வாடகை அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு நிறுவனத்துக்கு தேவையான தயாரிப்புகளை, இதர ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் பெறலாம். இதனால் இரு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் பலன் கிடைக்கும். பரஸ்பரம் இணைந்து ஒத்துழைத்திடும் சூழலை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

வடவள்ளியில் செயல்படும் வாடகை அலுவலகத்தின் நிர்வாகிசபினா கூறும்போது, “வடவள்ளியில் ஓராண்டுக்கு முன்பு அலுவலகம் தொடங்கப்பட்டது. 40 இருக்கைகள் உள்ளன. நாள் வாடகை, அலுவலக கூட்டங்கள், கருத்தரங்கம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கும் அலுவலகம் தருகிறோம்’’ என்றார்.

கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறும்போது, “தமிழகத்தின் மொத்தபொருளாதாரத்தில் 2-வது பெரிய வர்த்தக நகராக கோவை உள்ளது. ஐடி நிறுவனங்கள், பிபிஓ, ஆடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அதிகளவில் வருகின்றன. எல் அன்ட் டி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் உயர் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை கட்டி வருகின்றன. இதனால் கோவை நகரில் தற்போது வாடகை அலுவலகங்களும் அதிகமாகி வருகின்றன” என்றார்.

x