ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் வீட்டிலிருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவனை போலீஸார் தேடிக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை மொட்டைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்குமார். இவர் சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவரது இளைய மகன் (15 வயது சிறுவன்) வீட்டில் எந்நேரமும் ஆன்லைனில் விளையாட்டுகளை விளையாடி வந்திருக்கிறார். அதனால், பெற்றோர் சிறுவனைக் கண்டித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த சிறுவன், நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் மகன் வீடுதிரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், சிறுவனைத் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் மகன் கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர், வீட்டிலிருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூ.33 லட்சம், 213 பவுன் தங்கநகைகள் காணாமல்போயிருந்ததை அறிந்தனர். உடனே, சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வண்ணாரப்பேட்டை போலீஸார் உடனே 3 தனிப்படைகள் அமைத்து சிறுவனைத் தேடினர். சிறுவனின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வுசெய்ததில், தாம்பரம் பகுதியில் சிறுவன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். தனிப்படை போலீஸார் விரைந்து சென்று சிறுவனை மீட்டு நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், சிறுவனை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆன்லைன் கேம் விளையாட பெற்றோர் அனுமதி மறுத்ததால், வீட்டில் இருந்த பணம், நகையை எடுத்துக்கொண்டு விமானத்தில் நேபாளத்துக்கு தப்பிச்செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை எச்சரித்த போலீஸார் நகை, பணத்துடன் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.