மும்பை கால்வாயில் வீசப்பட்ட குழந்தையைக் காப்பாற்றிய பூனைகள்!


காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை

மும்பையின் பந்த் நகரில் உள்ள கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை, மும்பை காவல் துறையினர் காப்பாற்றியுள்ளனர். இதற்கு உதவியது அப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த பூனைகள். ‘கறுப்புப் பூனை படை’ வீரர்களல்ல. நிஜமான பூனைகள்!

பந்த் நகரின் கால்வாயில், துணியில் சுற்றப்பட்டு பச்சிளம் குழந்தை ஒன்று மிதப்பதைக் கண்டு அலறியடித்து கூக்குரல் எழுப்பியுள்ளன அங்கிருந்த பூனைகள். சத்தம்கேட்டுக் கூடிய பொதுமக்கள், குழந்தை குறித்தத் தகவலை பந்த் நகர் காவல் நிலையத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

மும்மை போலீஸின் டிவிட்டர் பதிவு

விரைந்துவந்த ‘நிர்பயா சிறப்புப் படை’ பெண் போலீஸார், குழந்தையைக் கால்வாயிலிருந்து பத்திரமாக மீட்டுள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அக்குழந்தை தற்போது நலமுடன் உள்ளதாக, மும்பை போலீஸார் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். குழந்தையைக் கைவிட்ட பெற்றோரை மும்பை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சுயநலம், சாதுரியம் என்று பட்டம் கட்டப்படும் பூனைகளின் இந்தச் செயல் மனிதநேயம் போல, ‘பூனைநேயம்’ என்று இருப்பதை மனிதக் குலத்துக்கு உணர்த்தியுள்ளது.

x