'ஜெய் பீம்’ படத்தை எதிர்ப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்களே!


நான்கைந்து வருடங்களுக்கு முன்பு அண்ணன் ’எவிடன்ஸ்’ கதிர் அவர்கள், பளியர் பழங்குடிகளைப் பற்றி வெளியான ஒரு சினிமாவுக்கு என்னை அழைத்துச் சென்றார். அதில் நண்பர் ஒருவரும் நடித்து இருந்தார். படம் முடிந்து வெளியே வரும்போது, அவர் என் முகத்தைப் பார்த்துவிட்டு அப்படத்தை குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

ஓரிரு தினங்கள் கழித்து, ”என்னம்மா படம் பிடிக்கலையா?” என்று கேட்டார். ”பழங்குடிகளை சண்டையிடுவோர்களாக, ஏதோ பழங்குடிகள் வாயிலாக புரட்சி நடக்கும் எனும் அதீத நம்பிக்கை ஊடாக வன்முறையைப் படம் முழுக்க வைத்திருக்கிறார்கள் அண்ணா. இதுபோன்ற சினிமாவினால் பழங்குடிகள் முன்னேற்றத்திற்கு எந்தவகையிலும் பயன் அளிக்காது. ஒரு வகையில் பின்னடைவையே தரும்‌. உண்மையில் பளியர் பழங்குடிகளோ அல்லது தமிழகப் பழங்குடிகளோ வன்முறையை ஒருபோதும் விரும்புவதில்லை. அது அவர்களின் இயல்பு” என்று நான் பதிலளித்தேன்.

இந்த ஆண்டுகூட 'காடன்' எனும் தலைப்பில் பழங்குடிகள் குறித்து ஒரு சினிமா வெளியாகி இருந்தது. டாப்சிலிப் அருகே உள்ள எருமைப்பாறை காடர் பழங்குடியின தலைவர் அண்ணன் சாத்துக்குட்டி போன் செய்து, "இவர்களெல்லாம் ஏன் நமது இனக்குழுவின் பெயர்களை வைத்து சினிமா எடுக்கிறார்கள்? அதுவும் நம்ம அனுமதி இல்லாமல், படம் முழுக்க வன்முறையை வைத்திருக்கிறார்கள். படத்தின் டிரைலரை பார்க்க சகிக்க முடியவில்லை" என்று ஆதங்கப்பட்டார்.

ஆனால், ’ஜெய் பீம்’ திரைப்படம் அப்படிப்பட்டதல்ல. பழங்குடிகளின் உயர்ந்த வாழ்க்கையையும், அவர்கள் காவல் துறை, அரசு இயந்திரங்களால் எவ்வாறு திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நீதி எவ்வாறு மறுக்கப்பட்டது. தொடர் செயல்பாடுகளால் பழங்குடிகளுக்கு எவ்வாறு நீதி கிடைக்கப் பெற்றது என நம்பிக்கை அளிக்கும் உலகத்தர சினிமா.

இதில் பழங்குடிகளின் வாழ்வியல் உயர்ந்த கண்ணோட்டத்தோடும் மிக நேர்த்தியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சமூகத்தின் அனைத்து தரப்பிலும் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. பழங்குடிகளுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்துள்ள ப(பா)டம்.

எனது வட இந்திய நண்பர்கள் பலர் தொலைபேசியில் அழைத்து, இந்தப் படம் குறித்து உருக்கமாக பேசினார்கள். அவர்களிடம், ”உங்களுக்குத் தமிழ்ப்படம் நன்றாகப் புரிந்து இருக்கிறதே!” என்றதற்கு ”இல்லை இந்தப் படம் இந்தியிலும் வெளியாகி இருக்கிறது” என்று கூறினார்கள். ஒரு சினிமா மாற்று மொழி பேசுகிறவர்கள் மனதில் கூட மாற்றத்தை உருவாக்குகிறது.

குறிப்பாகத் தமிழக அரசு இத்திரைப்படம் வெளியான பின்பு பழங்குடிகளின் உரிமைகள், முன்னேற்றத்திற்காக ஏராளமான முன்னெடுப்புகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது. இந்த முன்னெடுப்புகள் பெரும் அளவில் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தினை குறுகிய கண்ணோட்டத்தோடு, ஆதாயத்தோடு எதிர்ப்பவர்கள் சமூக நீதிக்கும், ஏன் பழங்குடிகளுக்கும் எதிரானவர்களாகவே இருக்க முடியும்.

கட்டுரையாளர்: பழங்குடி மக்களின் உரிமைக்கான செயற்பாட்டாளர்

x