சிறகை விரி உலகை அறி - 24


மார்பிள் சிம்மாசனம் மற்றும் விளக்குத் தொட்டிகள்

நம் பயணத்தின் பாதையில் பறவைகள் நம்மைக் கவனிக்கும், மரக்கிளைகள் காற்றில் தூதனுப்பும், சாலையோரக் கைகள் வழியனுப்பும். விழி மூடி உறங்காது, அலைபேசியிலும் தொலைக்காட்சியிலும் உழலாது உலாவும் கண்களுக்குக் காணும் காட்சியெல்லாம் கவிதைகள் படைக்கும். நல்ல சுற்றுலா நிறுவனங்களும் அப்படித்தான். முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, வழியில் இருக்கும் சின்னஞ்சிறு அதிசயங்களையும் ரசிக்கச் செய்வார்கள்.

பச்சை மாணிக்கக் கல்

சீனப் பெருஞ்சுவரைப் பார்த்துவிட்டு மிங் வம்ச கல்லறையை நோக்கிப் புறப்பட்டோம். வழியில், பச்சை மாணிக்கக் கற்களாலான (Jade) கலைப்பொருட்களின் விற்பனைக் கூடத்துக்குள் சென்றோம்.

டிங்லிங் கல்லறை மாடத்தின் முகப்பு

சவப்பெட்டிகளும், 26 மரக்கலன்களும்

முகப்பில் உள்ள ஐந்து கல்தொட்டிகள்

அரண்மனைக்குள்

கல்லறை அரண்மனைக்குள் இறங்குகிறார்கள்!

கல் பாதை

அரண்மனை உட்புறம்

சீன தேசிய அருங்காட்சியகத்தில் ‘பச்சை மாணிக்கக் கல் கண்காட்சி’ அரங்கை, முந்தைய நாள் பார்த்திருந்ததால் ஆர்வம் அதிகரித்தது. அருங்காட்சியகத்தில் மட்டுமே, புதிய கற்காலம் (ஏறக்குறைய 5,000 ஆண்டுகளுக்கு முன்பு) தொடங்கி ச்சிங் வம்சம் வரையிலான (கி.பி.1616 - கி.பி.1912) 80,000-க்கும் மேற்பட்ட பழங்கால பச்சை மாணிக்கக் கற்கள் இருக்கின்றன.

அருங்காட்சியகக் குறிப்பில், “ஏறத்தாழ 8,000 ஆண்டுகளுக்கு முன்பாக, கல் பளபளப்பாக்கும் தொழில் செய்யும்போது சீன முன்னோர்கள் அழகான கல்லைக் கண்டெடுத்தார்கள். அதுமுதல் தனித்துவமிக்க பச்சை மாணிக்கக் கல்லாலான சிற்பக்கலை பாரம்பரியம் தொடங்கியது. இக்கல்லைப் புனிதமானதாக, அழகியல் நிறைந்ததாகச் சீனர்கள் கருதினார்கள். தொடக்க காலத்தில் சமய பக்தி, செல்வம், அதிகாரத்தின் அடையாளமாக இந்தக் கற்கள் விளங்கின. ச்சின் மற்றும் ஹான் வம்ச ஆட்சிக்குப் பிறகு, இக்கல்லின் மீதான புனிதத்தன்மை குறைந்து நல்வினை மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது.

விற்பனைக்கூடத்தில் பெரிய கப்பல்கள், புத்தர் சிலைகள் உள்ளிட்ட எண்ணற்ற சிற்பங்களைப் பார்த்தேன். ஏதாவதொன்று வாங்க வேண்டும் என உள்ளூர முகிழ்த்த ஆசையால் பலவற்றைத் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொன்றின் விலையும் இது நமக்கானதல்ல என்பதைச் சொல்லி விரட்டியது. பந்துபோன்ற ஒரு கலைப்பொருள் கண்ணில்பட்டது. கறுப்பு வெள்ளை நிறமுள்ள கால்பந்தில் ஏதாவதொரு நிறத்தை மட்டும் வெட்டியெடுத்துவிட்டால் பிணைக்கப்பட்ட சங்கிலிபோல் இருக்குமல்லவா! அப்படி இருந்தது. கையில் எடுத்துப் பார்த்தேன். வெளிப்புறத்தில் எப்படி சங்கிலிபோல் தெரிந்ததோ அதேபோல உள்ளேயும் ஒன்றினுள் ஒன்றாக 4 அடுக்கு சங்கிலிப் பிணைப்பு இருந்தது. அருகில் வந்த விற்பனையாளர், “குடும்ப ஒற்றுமையை, பிணைப்பை விளக்குகின்ற கலைநுட்பம் இது. ஒரே கல்லில் செய்யப்பட்டது” என்றார். வாங்கினேன்.

13 கல்லறைகள்

மிங் வம்சத்தின் 16 பேரரசர்கள் (1368-1644) சீனாவை ஆண்டார்கள். அவர்களின் 3-வது பேரரசர் யாங்ல, தான் வாழும்போதே தன் கல்லறையை ஷயான்ஷா (Tianshou) மலையடிவாரத்தில் கட்டினார். இவரின் கல்லறையை மையமாக வைத்து இருபுறமும் மிங் வம்சத்தைச் சேர்ந்த மேலும் 12 பேரரசர்கள் தங்கள் கல்லறையை அமைத்தார்கள். 13 கல்லறைகளும் 120 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கல்லறைக்கும் இடையே அரை கிலோமீட்டர் முதல் 8 கிலோமீட்டர்வரை இடைவெளிகள் உள்ளன. மும்தாஜின் கல்லறைக்கு மேலே நினைவுமாடம் (தாஜ்மஹால்) எழுப்பப்பட்டுள்ளதுபோலவே, இவர்களின் கல்லறைக்கு மேலும் நினைவுமாடம் எழுப்பப்பட்டுள்ளது. இக்கல்லறைகளை உலகப் புராதனச் சின்னமாக 2003-ல் யுனெஸ்கோ அறிவித்தது.

மிங் வம்சத்தின் 13-வது பேரரசர் டெய்ஜாங் (Taichang 1563-1620). 10 வயதில் ஆட்சிப் பொறுப்பேற்று, 16 வயதிலேயே தன்னுடைய கல்லறையைக் கட்டத் தொடங்கி, 22 வயதில் கட்டி முடித்தவர். மிங் வம்சத்திலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்து 58 வயதில் அவர் மறைந்தார். டிங்லிங் (Dingling Tomb) எனப்படும் இவரின் கல்லறையை, 1959-ல் சீன அரசு அகழாய்வு செய்யத் தொடங்கியது. 44 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கல்லறையைப் பார்க்கச் சென்றோம்.

கல்லறை அரண்மனை

கல்லறை மாடத்தின் முகப்பில் 5 கல்தொட்டிகள் உள்ளன. சாம்பிராணி போட, பூக்கள் சூட, விளக்கு ஏற்ற அவற்றைப் பயன்படுத்தியுள்ளார்கள். தொடர்ந்து நடந்தோம். கல் பாதை பூமிக்குள் வழி நடத்தியது. ‘கல்லறை அரண்மனை’ எனும் வாக்கியம் வரவேற்றது. ‘இருட்டு அரண்மனை’ அல்லது ‘அமைதியாக ஓய்வெடுக்கும் இடம்’ என்கிற பெயர்களும் இவ்விடத்துக்கு உண்டு. வளைந்து வளைந்து பூமிக்குள் 27 மீட்டர் இறங்கினோம். கல்லறையில் 5 மண்டபங்கள் உள்ளன. சுரங்கப்பாதையைக் கடந்ததும் முகப்பு மண்டபம், மைய மண்டபம், பின் மண்டபம் உள்ளன. மைய மண்டபத்தின் வலப்பக்கமும் இடப்பக்கமும் ஒவ்வொரு மண்டபம் இருக்கிறது. முதல் 4 மண்டபங்கள் நேர்கோட்டு முறையிலும் பின்னால் உள்ள மண்டபம் கிடைமட்ட அமைப்பிலும் உள்ளன.

முகப்பு மண்டபத்தில் ஒன்றும் இல்லை. மைய மண்டபத்தில் மார்பிளால் ஆன 3 சிம்மாசனங்கள் இருக்கின்றன. அதன் முன்னால் விளக்குத் தொட்டிகள் 5 உள்ளன. வெண்கலக் குழலுக்குள் திரி உள்ளது. அதற்கு பெயர் ‘நித்திய விளக்கு’. எப்போதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும் என நினைத்திருப்பார்கள். கல்லறையை மூடிய பிறகு விளக்குகள் அணைந்திருக்க வேண்டும். எண்ணெய் அப்படியே இருந்தது. வலதுபுறமும் இடதுபுறமும் இருந்த மண்டபத்தின் மையத்தில் வெள்ளை மார்பிளாலான ‘சவப்பெட்டி திண்டு’ இருந்தது. அதில் பயணிகள் காணிக்கையாகப் பணம் போட்டார்கள்.

பின் மண்டபத்தின் நடுவில் பேரரசரின் சவப்பெட்டியும், அதன் இருபக்கமும் 2 பேரரசிகளின் சவப்பெட்டிகளும் உள்ளன. ஒரு சவப்பெட்டிக்குள் மற்றொன்று எனும் வகையில் ஒவ்வொருவரையும் இரண்டிரண்டு பெட்டிகளுக்குள் வைத்து அடக்கம் செய்துள்ளனர். பேரரசரின் தங்கக் கிரீடமும், தங்கத்தாலும் ஆயிரக்கணக்கான முத்துக்களாலும் செய்யப்பட்ட பேரரசிகளின் ஃபீனிக்ஸ் கிரீடங்களும் உள்ளே இருந்தன. சவப்பெட்டிகளைச் சுற்றிலும், அடக்கச் சடங்குகளில் பயன்படுத்தும் பொருட்கள் 26 மரக்கலன்களில் வைக்கப்பட்டிருந்தன. கிடைத்த பொருட்கள் அனைத்தும் அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்க, சவப்பெட்டி மற்றும் மரக்கலன்களின் மாதிரிகளே தற்போது பார்வைக்கு இருக்கின்றன.

தேநீர் சடங்கு

கல்லறைகளைப் பார்த்துவிட்டு, பெய்ஜிங்குக்குத் திரும்புகின்ற வழியில், தேநீர் சடங்கில் (Tea ceremony) பங்கெடுக்க வழிகாட்டி அழைத்துச் சென்றார். சீனாவில் தேநீர் குறித்த மிகப் பழமையான வரலாறு உள்ளது. கி.மு. 2732-ல், காட்டு மரத்தின் இலையொன்று கொதிக்கும் தண்ணீரில் விழுந்ததும் இனிமையான வாசம் பரவியதை, பேரரசர் ஷென் னாங் (Shen Nung) கவனித்தார். வெந்நீரைக் கொஞ்சம் குடித்துப்பார்த்தார். இதமான உணர்வு உடலெல்லாம் பரவியதை உணர்ந்தார். சீன மொழியில் ஜா (Ch’a) என பெயரிட்டார். இதற்கு, ‘ஆராய்ந்து பார்’ என்பது பொருள்.

அன்று தொடங்கி இன்றுவரை, சீன தேநீர் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. சீனாவில் ‘தேநீர் சடங்கு’ மிகவும் முக்கியமான நிகழ்வாகும். Green, Yellow, White, Red, Dark, Black, Oolong என பல்வேறு தேநீர் வகைகள் சீனாவில் கிடைக்கின்றன. தேநீர் இலைகளைப் பொடியாக்கி கலக்குவதில்லை. முழு இலைகளாகப் பயன்படுத்துகிறார்கள் அல்லது இலைகளை ஒன்றாக நசுக்கி மிட்டாய் அளவில் வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து கொஞ்சம் பிய்த்து தண்ணீரில் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும். நாங்கள் சென்ற கடையில், ஓர் இளம் பெண் வந்தார். மண் குடுவையில் உள்ள சுடுநீரில் சில இலைகளைப் போட்டு கொதிக்கவைத்த பிறகு, சிறிய மண் குவளையில் குடிக்கக் குடித்தார். அடுத்தடுத்து 7 வகையான தேநீர் சுவைத்தோம்.

தூக்கத்தில் சிந்திக்க மறந்த மூளை

பெய்ஜிங்கில் இருந்து, ஷியான் (Xi’an) நகருக்கு விமானத்தில் சென்று, இரவு 11.30 மணிக்கு இறங்கினேன். பொருட்கள் வைப்பறையைத் தேடி அலைந்தேன். 250 மீட்டர் தூரத்தில் உள்ள விடுதியில் தங்கிவிட்டு, காலையில் வந்து எடுத்துச் செல்லலாம் என நினைத்தேன். விமான நிலையத்தைவிட்டு வெளியேறிவிட்டால், பொருளை எடுப்பதற்காக மீண்டும் உள்ளே நுழைய முடியாது என்பதெல்லாம் தூக்கக் கலக்கத்தில் யோசிக்கவே இல்லை. நல்லவேளையாக, 10 மணிக்கே அடைத்துவிட்டார்கள். தப்பித்தேன். அவ்வளவு பெரிய விமான நிலையத்தில் எந்தத் திசையில் இறங்கிச் செல்வது என்கிற குழப்பம் வந்தது. காவலரிடம் சென்றேன். தங்கும் இடத்தை முன்பதிவுசெய்தபோதே சீன மொழியில் விடுதியின் முகவரியை ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து வைத்திருந்ததால், அதைப் பார்த்ததும், காவலரே விடுதிக்கு அழைத்தார். விடுதி ஓட்டுநர் வந்து அழைத்துச் சென்றார்.

(பாதை நீளும்)

பெட்டிச் செய்தி

மூன்று கல்லறைகள் எங்கே?

மிங் வம்சத்தின் 13 கல்லறைகள் ஷயான்ஷா மலையடிவாரத்தில் இருக்க, மற்ற 3 கல்லறைகள் எங்கே? நாஞ்சிங் நகரைத் தலைநகரமாகக் கொண்டே மிங் வம்ச ஆட்சி தொடங்கியது. முதல் 2 பேரரசர்கள் அங்கிருந்தே ஆட்சி செய்தார்கள். எனவே, முதல் பேரரசரின் (Zhu Yuanzhang) கல்லறை நாஞ்சிங் நகரில் உள்ளது. 2-ம் பேரரசரின் (Zhu Yunwen) ஆட்சி கலைக்கப்பட்டதால், அவரின் கல்லறை எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. சகோதர யுத்தத்தால், 7-வது பேரரசருக்கு (Zhu Qiyu) அவருடைய மூதாதையருடன் புதைக்கப்படும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

x