சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருபவர், பிரபல நாட்டுப்புறப் பாடகரான புஷ்பவனம் குப்புசாமி.
இவரது வீட்டின் 2-வது தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில், சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி சரவணன்(30) என்பவரும் கடந்த ஒரு வாரமாக வேலை பார்த்து வந்துள்ளார்.
சரவணன், நேற்று கலவை தூக்கும் இயந்திரத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பணிமுடிந்ததும் சுவிட்ச்சை ஆப் செய்யாமல், இயந்திரத்தை நகர்த்திச் செல்லும்போது மின் ஒயர் இயந்திரத்தில் சிக்கியதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் சரவணன். சக ஊழியர்கள் அவரை மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சரவணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த அபிராமபுரம் போலீஸார், சரவணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.