10 ஆண்டுகளுக்கு பின் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி; துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்க எதிர்பார்ப்பு


புதுடெல்லி: 18-வது மக்களவையில் இண்டியா கூட்டணிக் கட்சி எம்.பி.,களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பத்தாண்டுகளுக்கு பின்னர் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க உள்ளது. அதேபோல் துணை சபாநாயகரும் விரைவில் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்க்கட்சிகளிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அந்தப் பதவி காலியாக இருந்தது.

கடந்த 5-ம் தேதி கலைக்கப்பட்ட 17-வது மக்களவை முழுவதும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேபோல் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமலே இருந்தது. இந்தநிலையில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கப்பெற இருப்பதால் அனைவரின் பார்வையும் 18-வது மக்களவையின் மீதே உள்ளது. அதேுபோல், துணை சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. பொதுவாக துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கே செல்லும்.

நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த செயல்திட்டங்கள் வகுப்பதற்கான எந்த கூட்டத்தினையும் இண்டியா கூட்டணி இதுவரை நடத்திடவில்லை. என்றாலும், இந்த முறை துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அழுத்தம் கொடுப்போம், இம்முறை அந்தப் பதவியை காலியாக விடமாட்டோம் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவரொருவர் தெரிவித்துள்ளார்.

"பாஜக அரசு மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்கவில்லை. தற்போது அவர்கள் பாடம் கற்றிருப்பார்கள் என்றும் இந்த முறை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் நம்புகிறோம்" என திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 17-வது மக்களவையில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தது. ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவையில் முதல் முறையாக ஐந்து ஆண்டு முழுவதும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டவில்லை. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 93-ன் படி, மக்களவைக் கூடி சாபாநாயகர், துணை சபாநாயகர் என இரண்டு உறுப்பினர்களை விரைவில் தேர்வு செய்ய வேண்டும், என்றாலும் அதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை.

துணை சபாநாயகர் என்பது ஒரு அரசியலமைப்பு தேவை. என்றாலும், மத்திய மற்றும் மாநில சட்டயமிற்றும் மன்றங்கள் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்காமல் இருப்பது ஒரு கவலைக்குரிய போக்கு. உதாரணமாக, 2019 - 2024 வரையிலான மக்களவை பதவிக்காலம் முழுவதும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ராஜஸ்தானில் கடந்த சட்டப்பேரவையின் முழு ஐந்து ஆண்டு காலத்திலும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இந்தாண்டு இறுதியில் பதவி நிறைவடையுள்ள ஜார்க்கண்ட் சட்டப்பேரவையிலும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை" என்று பிஆர்எஸ் சட்டப்பேரவை ஆராய்ச்சியின், சட்டமன்றம் மற்றும் குடிமை ஈடுபாடு முயற்சிகளுக்களுக்கான தலைவர் சக்சு ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "அரசியலமைப்பு தேவை என்பதைத் தாண்டி, வழக்கப்படி பல சூழ்நிலைகளில் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கேச் சென்றுள்ளது. இந்த வழக்கம் ஜனநாயக நெறிமுறைகள் வலுப்படுத்தும் என்பதோடு மட்டுமில்லாமல், துணை சபாநாயகர் பதவியின் தொடர்ச்சியையும் உறுதி செய்கிறது. அந்தப் பதவி எப்போதும் காலியாக இருக்க முடியாது" என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 16-வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி 70 நாட்களுக்கு பின்னரே அதிமுகவின் தம்பி துறை மக்களவையின் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக, நாட்டின் 12-வது மக்களவையே நீண்ட நாட்களாக துணை சபாநாயகர் இல்லாமல் இருந்திருக்கிறது. மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி 269 நாட்கள் துணை சபாநாயகர் இல்லாமல் மக்களவை செயல்பட்டது என பிஆர்எஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசின் 12-வது மக்களவையின் பதவிக் காலம் 1998 மார்ச், 10 முதல் 1999 ஏப்ரல் 26 வரை 13 மாதங்களே நீடித்தது. 12-வது மக்களவையின் சபாநாயகராக 1998 மார்ச்-ல் ஜிஎம்சி பாலயோகி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தாண்டு டிம்பரில் தான் காங்கிரஸின் பி.எம். சயீது துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

x