மரம், செடிகளை அறிய 'கியூஆர் கோடு' - புதுச்சேரி தாகூர் அரசு கல்லூரியில் அசத்தல்


புதுச்சேரி: புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் வளர்க்கப்படும் 7 ஆயிரம் மரங்கள், செடிகள் குறித்த தகவல்களை அறிய 'கியூஆர் கோடு' வசதி அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. 1961-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் கல்லூரியில் தற்போது 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 20 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றுள்ள இந்தக் கல்லூரி வளாகத்தில் தரிசாக கிடந்த சுமார் 15 ஏக்கர் நிலத்தில் நகர்புற காடு வளர்ப்பு மற்றும் பசுமை வளாக திட்டத்தின் மூலம் இயற்கை சார்ந்த அரியவகை மர வகைகளும், செடி கொடிகளும் வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நகர்புற பசுமைக்காட்டில் புத்தர் தோட்டம், கரோனா நினைவு பூங்கா, வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் ஆகியோர் பெயர்களிலும் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி இயற்கை சார்ந்த திறந்தவெளியில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயிலும் விதமாக அமைதி வனமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வரின் முயற்சியால் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைப்புடன் வளாகம் முழுவதும் பசுமையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வனத்தில் 7 ஆயிரம் மரம், செடிகள் படர்ந்து விரிந்துள்ளன. மா, பலா, வாழை உள்ளிட்ட பழவகை மரங்களும் இவற்றுள் அடக்கம்.

முயல், வாத்து, புறா, பட்டாம்பூச்சி, மயில் போன்ற உயிரினங்களின் வாழ்விடமாகவும் இது உள்ளது. 20 வகையான பறவைகள், 30 வகையான பட்டாம்பூச்சிகள் இங்கு உலவுகின்றன. 120 வகையான மரங்கள் உள்ளன. கல்லூரி வளாகத்தில் பெய்யும் மழைநீரை சேமிக்க 6,045 சதுர பரப்பில் 101 அடி ஆழம் கொண்ட குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 12 மில்லியன் லிட்டர் நீரைச் சேமிக்கலாம்.

புதுச்சேரியில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தல இடமாக தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியை மத்திய அரசின் சுற்றுலாத்துறையும், புதுச்சேரி அரசும் வரவேற்றுள்ளது. மேலும் புதுச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தையும் சுற்றுலாத்துறை தங்களது வெப்சைட்டில் பதிவிட்டு உள்ளது.

மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், உள்ளூர் நகரவாசிகள் என அனைவரும் தினமும் பார்வையிடும் இடமாக இக்கல்லூரி வளாகம் உள்ளது. இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், வருகின்ற பார்வையாளர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள மரம், செடிகளை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக கல்லூரியின் தாவரவியல் துறை சார்பில் ‘கியூஆர் கோடு’ அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகத்தில் உள்ள 7 ஆயிரம் மரம், செடிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் ‘கியூஆர் கோடு’ வைக்கப்பட்டுள்ளது. மரம் மற்றும் செடிகளில் உள்ள கியூஆர் கோடை செல்போனில் ஸ்கேன் செய்தால் அந்த மரம் மற்றும் செடியின் இனம், நன்மைகள், பயன்கள், அவற்றின் அறிவியல் பெயர்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் காண முடியும் என்கின்றனர் பேராசியர்கள், துறை மாணவர்கள்.

இதுமட்டுமின்றி இங்கு வரும் பறவைகளின் உணவுக்காக சமூகவியல் துறை சார்பில்,பல மரங்களில் தானியங்கள் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரின் இந்த முயற்சிக்கு முதல்வரின் பாராட்டு சான்று, சிஎஸ்ஆர் தேசிய விருது, சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது உள்ளிட்டவை கிடைத்துள்ளன. இதன்மூலம் புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்னோடி நிறுவனமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

x