'முள்ளும் மலரும்’, மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட அண்ணனாக ரஜினி நடித்த இந்தத் திரைப்படத்தில், அவருடைய தங்கையாக ஷோபா நடித்திருந்தார். திரைக்கதை அமைப்பதில் புதிய பாணியைக் கையாளக்கூடிய இயக்குநராக மகேந்திரனுக்கு இது முதல் படம்.
அதேபோல, துணை நடிகராக, வில்லனாக, 2 ஹீரோக்களுள் ஒருவராக, ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருந்த ரஜினி எதார்த்தமான பாத்திரத்தில் நடிக்கும் முதல் படம். துணிச்சலான முயற்சிக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு படத்தின் தயாரிப்பாளர் வேணு செட்டியாருக்கு இருந்தது.
உண்மையில், படத்தின் நாயகனாக ரஜினியை ஒப்பந்தம் செய்வதில் தயாரிப்பாளர் வேணு செட்டியாருக்கு விருப்பமில்லை. என்றாலும், ரஜினி இல்லையென்றால் படமே வேண்டாம் என்று மகேந்திரன் காட்டிய பிடிவாதமே, ரஜினியை காளியாக மாற்றியது. படத்தின் ஒளிப்பதிவை பாலுமகேந்திராவிடம் கொடுத்திருந்தார் மகேந்திரன். ரஜினிக்கு நாயகியாக முதலில் லதாவை அணுகினார்கள். பிறகு ஸ்ரீவித்யாவிடம் பேசினர். இறுதியாகவே படாஃபட் ஜெயலட்சுமி தேர்வானார்.
அதற்கு முன்னர் கே.பாலசந்தர், பாரதிராஜா போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்திருந்தாலும், ‘முள்ளும் மலரும்’ தனக்கு புதிய அடையாளத்தைக் கொடுக்கும் என்று நம்பினார் ரஜினிகாந்த். அதற்கேற்பவே அவருக்கான காட்சிகள், வசனங்கள் எல்லாம் அமைந்தன.
இங்கே ஆச்சரியம் என்னவென்றால், காட்சிகளின்போது சக கலைஞர்களைத் தமது அசாத்திய திறமையால் முந்திச்செல்லக்கூடிய பெருந்திறமை கொண்ட ஷோபா, படாஃபட் ஜெயலட்சுமி போன்றோர் இருந்தபோதும், ரஜினி தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பை அழகாகப் பயன்படுத்திக்கொண்டார். குறிப்பாக, சரத்பாபுவிடம் பேசும்போது, “கெட்டப்பையன் சார் இவன்” என்ற வசனத்தைப் பேசிவிட்டு, கண்கலங்கியபடி ரஜினி வெளிப்படுத்திய நடிப்பு அட்டகாசமாக அமைந்தது.
படம் நல்லபடியாக எடுக்கப்பட்டிருந்தும், திரையில் கவனம் பெறுமா, வசூலைக் கொடுக்குமா என்பதில் லேசான சந்தேகம் எழுந்தது. காரணம், அப்போது பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ தியேட்டர்களில் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
40 ஆண்டுகளுக்கு முன் விருதுபெற்றபோது கே.பாலசந்தரிடம் பேசத் துடித்த ரஜினிகாந்த், தற்போது தாதாசாகேப் பால்கே விருது பெற்றபோதும் பாலசந்தரையே நினைவுகூர்ந்திருக்கிறார்!
என்றாலும், ‘முள்ளும் மலரும்’ படத்துக்கு நூற்றுக்கு 61 மதிப்பெண்களை வழங்கிய ஆனந்த விகடன் இதழ், ‘பாசமலர்’ சிவாஜியின் இடத்தில் இப்போது ‘முள்ளும் மலரும்’ சிவாஜி ராவ் இருக்கிறார் என்று ரஜினியின் நடிப்பைப் பாராட்டியதோடு, மகேந்திரனின் எதிர்காலப் படங்களின் தரத்தை அளவிட முள்ளும் மலரும் படமே அளவுகோல் என்று எழுதியிருந்தது. ரஜினியின் மறக்கமுடியாத அட்டகாசம் என்று குமுதம் எழுதியது. ஆம், கல்கி இதழில் எழுத்தாளர் உமாசந்திரன் எழுதிய ‘முள்ளும் மலரும்’ நாவல் திரைப்படமாக வந்தபோது, அதைப் பாராட்டி ஆனந்த விகடனும் குமுதமும் எழுதியது கவனிக்கத்தக்க அம்சம்.
அதன் நீட்சியாக, படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பைப் பெற்றது. 1978-ல் வெளியான அந்தப் படத்துக்கு 1980-ல் எம்ஜிஆர் ஆட்சியில் தமிழ்நாடு அரசின் சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது. சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்துக்குக் கிடைத்தது. அதுதான் ரஜினிகாந்த் பெற்ற முதல் விருது.
“எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். செய்தியைக் கேட்டதும் அதைப் பாலசந்தரிடம் தெரிவிக்கத் துடித்தேன். இந்தப் பெருமை கே.பாலசந்தரையே சாரும்” என்றார் முதல் விருதைப் பெற்ற ரஜினிகாந்த்.
40 ஆண்டுகளுக்கு முன் விருது பெற்றபோது கே.பாலசந்தரிடம் பேசத் துடித்த ரஜினிகாந்த், தற்போது தாதாசாகேப் பால்கே விருது பெற்றபோதும் பாலசந்தரையே நினைவுகூர்ந்திருக்கிறார்! விருதுபெற்றபோது கே.பாலசந்தரிடம் பேசத் துடித்த ரஜினிகாந்த், தற்போது தாதாசாகேப் பால்கே விருது பெற்றபோதும் பாலசந்தரையே நினைவுகூர்ந்திருக்கிறார்!
கட்டுரையாளர்: எழுத்தாளர், ஊடகவியலாளர், ‘திராவிட இயக்க வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.