இன்று (அக்.17) கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள். அவரைப் பற்றி எழுதலாம் என நினைத்தவுடன் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் தான் நினைவிற்கு வந்தார். ஈருடல் ஓருயிராக இருந்தவர்களாயிற்றே...
இவர்கள் இருவருக்குள்ளும் இருந்த உணர்வுகளின் சங்கமம்தான், காலத்தால் அழியாத ஏராளனமான பாடல்களை நமக்கு வழங்கியுள்ளது. கவியரசர் எழுதிய எத்தனையோ பாடல்களைப் புதுக்குரல்களை வைத்து மெல்லிசை மன்னர் பாட வைத்துள்ளார். ஆனால், சில பாடல்களை அவர் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களைப் பட்டியலிட்டால் ஆச்சரியப்பட வைக்கிறது. எத்தனை பாடல்கள்?
கண்ணதாசனிடம் இருந்த கதை சொல்லும் குணம் அவருக்குப் பாடல்களாகப் பிறந்தன. அவற்றை எம்எஸ்.விஸ்வநாதன் குரலில் கேட்கும்போது இருவரும் சேர்ந்து இந்த சமூகத்திற்கு திரைப்படத்தைத் தாண்டி எதையோ சொல்லியுள்ளனர் என்பது மட்டும் உண்மை.
தமிழ் சினிமாவில் உச்சஸ்தாயியில் அநாயாசமாகப் பாடக்கூடிய பாடகர் எம்எஸ்வி. அவர் பாடிய அத்தனை பாடல்களையும் தொகுக்கலாம். ஆனால், கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் என்பதால், அவர் இயற்றி எம்எஸ்வி பாடிய (அதில் பலர் இணைந்திருப்பார்கள்) பாடல்களை இன்றைய சிறப்புத் தொகுப்பாக வழங்கலாம் என நினைக்கிறேன்.
எம்எஸ்வி பாடிய காதல் பாட்டு
எம்எஸ்வி குரல் என்றவுடன் ‘ராரி... ராரி’ என ஒலிக்கும் அவரின் ஹம்மிங் நமக்கு ஞாபகத்திற்கு வரும். ஆனால், அவர் அற்புதமான டூயட் பாடல்களைப் பாடியவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதற்கு கவியரசு எழுதிய 2 பாடல்களைப் பட்டியலிடுகிறேன்.
1979-ம் ஆண்டு பி. மாதவன் இயக்கத்தில் ஜெய்சங்கர், கேஆர்.விஜயா, முத்துராமன் நடிப்பில் வெளியான படம் ‘நிலவே நீ சாட்சி’. இப்படத்தில் எம்எஸ்வி, எல்ஆர்.ஈஸ்வரி பாடிய அற்புதமான காதல் பாடல் இது. கவியரசரின் வரிகள் நம்மை மெய்மறக்க வைக்கும்.
‘நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால் தான் கிடைக்கும் ஓஹோஹோ...’
இலங்கை வானொலியில் நேயர் விருப்பத்தில் இடைவிடாது ஒலித்த இந்தப் பாடலை எம்எஸ்.விஸ்வநாதன் தான் பாடினார் என்பது பலருக்குத் தெரியாது.
1976-ல் மதுரை திருமாறன் இயக்கத்தில் ஜெய்சங்கர், கேஆர்.விஜயா நடிப்பில் வெளியான படம் ‘மேயர் மீனாட்சி’. மதுரை திருமாறன், கே.ஆர்.விஜயாவிற்காகப் பல படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். இந்தப் படம் பாடல்களுக்காகவே புகழ்பெற்றது என்றே சொல்லலாம்.
கவியரசர் வரிகளில் வாணி ஜெயராமுடன், எம்எஸ்வி பாடும் டூயட் இது....
‘இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு...’
கதை சொல்லும் பாணி
கறுப்பு வெள்ளை காலத் திரைப்படங்கள் பலவற்றில் கேரக்டர்கள் பாடுவதைவிட பின்னணியில் பாடல்கள் ஒலிப்பது வழக்கமாக இருந்தது. அப்படியான பல பாடல்கள் கவியரசரின் வரிகளில் அப்படங்களின் கதையைச் சொன்னது. அப்படியொரு படம் 1974-ம் ஆண்டு வெளியான ‘அக்கரைப் பச்சை’. என். வெங்கடேஷ் இயக்கத்தில் ஜெய்சங்கர், லட்சுமி உள்பட பலர் நடித்த படம்.
‘இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
என் வீட்டு கண்ணாடி
என் முகத்தை காட்டவில்லை
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை...’
கவியரசரின் தத்துவங்கள் தோய்ந்த வரிகளை எம்எஸ்வி குரலில் கேட்டுப் பாருங்கள். அப்படியே மெய்யுருகி போய்விடுவீர்கள். இதே போன்ற டைட்டில் பாடல் 1977-ம் ஆண்டு சிவாஜி கணேசன், மஞ்சுளா நடிப்பில் வெளிவந்த ‘அவன் ஒரு சரித்திரம்’ படத்தில் இடம்பெற்றது.
இந்தப் படத்தை இயக்கியவர் காலத்தால் அழியாத காதல் காவியமான ‘வசந்தமாளிகை’யை இயக்கிய கே.எஸ். பிரகாஷ் ராவ். கவியரசர் வரிகளில் எம்எஸ்வி பாடும் இந்தப் பாடலில் சரித்திரம் என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் சிவாஜி தான் ஞாபகத்திற்கு வருவார். அந்த பாடல்,
‘ஆயிரம் பொன்னை பூமியில் கண்டான்
அன்பை இந்த பூமியில் வைத்தான் அவன் ஒரு சரித்திரம்
தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்குத் தந்தான் அவன் ஒரு சரித்திரம்...’
வாழ்த்துப் பாடல்
இலங்கை வானொலியில் அதிக நாள் முதலிடத்தைப் பிடித்த பாடல் என்ற பெருமை நடிகர் ஜெய்சங்கர் நடித்த ‘டாக்சி டிரைவர்’ படத்திற்கு உண்டு. 1978-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெய்சங்கரை வைத்து பல படங்களை இயக்கிய என்எஸ்.மணியம்தான் இந்தப் படத்தையும் இயக்கினார்.
எஸ்பி.பாலசுப்பிரமணியம் பாடிய அந்த பாடல்,
‘இது ராஜகோபுரம் தீபம்
அகல் விளக்கல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம்
பனித்துளி அல்ல
தூங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க...’
இலங்கை வானொலியில் நேயர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லி அடிக்கடி இந்த பாடலை ஒளிபரப்பு செய்வார்கள். இந்தப் பாடலில் ஜெய்சங்கருக்கு எஸ்பிபி குரல் கொடுத்திருப்பார். திடீரென ஸ்ரீகாந்த் உள்ளே புகுந்து இந்த பாடலில் பாடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
அவருக்குக் குரல் கொடுத்தவர் நமது மெல்லிசை மன்னர்தான்.
‘வைரம் அவனது தங்கத்தின் மீது
மானவன் உன்னை நான் திருமகள் மாது
மங்கையின் அழகுக்கு இறை ஒன்று ஏது
மன்மதனே கண்டு மயங்கிடும்போது...’
கவியரசரின் தமிழில் சந்தம் பொங்கி வழியும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
ப்ரியாவிற்குப் போட்டி
இசைஞானியின் புகழ் ‘ப்ரியா’ திரைப்படத்தின் மூலம் பேசப்பட்டிருந்த காலமது. முதல் ஸ்டீரியோபோனிக் ஒலிப்பதிவில் இளையராஜாவின் பாடல்களை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது, இசை பொங்கி வழியும் கதையோடு படத்தை 1979-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கினார். 14 இனிய பாடல்களைக் கொண்ட அந்த படம் ‘நினைத்தாலே இனிக்கும்’.
கமல்ஹாசன், ஜெயப்பிரதா, ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்த இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. தெலுங்கில் 'அந்தமானிய அனுபவம்' என எடுக்கப்பட்டது. படத்தின் பெரும் பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருந்தது. தன்னாலும் இளமை கொண்டாடும் பாடல்களைத் தர முடியும் என மெல்லிசை மன்னர் நிரூபித்த படமிது. இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்காக மெல்லிசை மன்னர் பாடிய இந்த பாடலை எழுதியவர் கவியரசர்.
‘சம்போ... சிவ சம்போ’ பாடலில் ‘ரம்பம் ரபரபரப ரம்பம் ரபரிரிபரிரிரி’ என கஷ்டமான ஜதியை மிக அநாயாசமாக மெல்லிசை மன்னர் பாடியிருப்பார். கவியரசர் இப்பாடலில் இப்படி எழுதியிருப்பார்.
‘கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாள் இன்று
காலங்கள் போனாலோ தின்னாதே என்பார்கள்
மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு
மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு’
ரம் டம் த ரி த ரி... எனும் வரிகளைக் கேட்கும்போது கவியரசர் கண்முன் தெரிகிறார்.
பெண்ணின் பெருமை
பெண்ணின் பெருமையைப் போற்றி கவியரசர் எத்தனையோ பாடல்களை இயற்றியுள்ளார். 1967-ம் ஆண்டு ஜெமினி கணேசன், விஜயகுமாரி நடிப்பில் வெளியான ‘பெண் என்றால் பெண்’ படத்திற்கு இப்படி எழுதினார்.
‘பெண் என்றால் பெண்
தெய்வமும் கோவிலும் பெண்மையின் உள்ளமே
பகலிலே கதிரவன் இரவிலே வெண்ணிலா
இரண்டும் சேர்ந்து பெண்மையாய் வந்தது...’
இவ்வரிகளைப் பாடியவர் மெல்லிசை மன்னர்.
ஒரே பாடல் இரண்டு முறை பாடப்படுவது என்பது கறுப்பு வெள்ளை காலத்தில் இருந்து தொடர்கிறது. 1963-ம் ஆண்டு வெளியான ‘பார் மகளே பார்’ படத்தில் டிஎம்.சௌந்தரராஜன் குரலில் ஒலித்த அதே பாடலை மெல்லிசை மன்னரும் பாடியிருப்பார்.
‘பார் மகளே பார் பரந்த உலகினைப் பார்
பாசம் மலர்வது பார் பக்கம் துணையினை பார்
உரிமையில் ஒன்று உறவினில் ஒன்று
ஓரிடம் சேர்ந்தது பார்...’
இப்பாடலில் கவியரசர் இப்படி வரிகளை முடிப்பார்.
‘இரண்டும் உண்மை என்றே நினைத்தால்
இரண்டும் ஒன்றாகும்
இதில் ஒன்றே உண்மை என்றே நினைத்தால்
இரண்டும் தவறாகும்...’
இதனால்தான் அவர் கவியரசர்!
ஜெமினிக்கு விருது
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் இடத்திற்கு வர முடியாமல் போன தகுதி வாய்ந்த கலைஞன் என்றால் அது சி.எல்.ஆனந்தன். பாட்டு. நடனம், சண்டை என பன்முகத்திறமை கொண்ட அந்த கலைஞனை ஏசி.திருலோகச்சந்தர் கதாநாயகனாக்கிய படம் ‘வீரத்திருமகன்’. மெல்லிசை மன்னர்களின் பாடல்களால் புகழ்பெற்ற படமிது.
இப்படத்தில் படகில் செல்வது போன்ற அற்புதமாக படமாக்கப்பட்ட இந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பி.லீலாவுடன் இணைந்து மெல்லிசை மன்னர் பாடியிருப்பார்.
‘ஒன்றோடு ஒன்றை வைத்தான்
உண்மைக்குள் பொய்யை வைத்தான்
நன்மையில் தீமை வைத்தான்
நாடகம் ஆட வைத்தான்’.
இப்படி வரி முடியும்போது ‘ஓஹோ.... ஹோ... ஓஹோ.... ஹோ..’. என்ற அற்புதமான ஹம்மிங்கை எம்எஸ்வி பாடுவார்.
1970-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி நடிப்பில் வெளியான படம் ‘காவியத் தலைவி’. இப்படத்தை சௌகார் ஜானகியே தயாரித்தார். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஜெமினி கணேசனுக்குச் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது. இப்படத்தில் கவியரசர் எழுதிய தத்துவ வரிகளை மெல்லிசை மன்னர் பாடியுள்ளார்.
அந்தப் பாடல்,
‘நேரான நெடுஞ்சாலை ஓரிடத்தில் - இரு
கூறாகப் பிரிவதுண்டு
கூறாகப் பிரிந்தவை வேறிடத்தில் வந்து
நேராக இணைவதுண்டு... இணைவதுண்டு
தாயெனும் சுமைதாங்கி தான் சுமந்த மகளை
தாளாத இறக்கி வைத்தாள் தாளாது இறக்கி வைத்தாள்...’
1978-ம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் ‘இறைவன் கொடுத்த வரம்’. ரஜினிகாந்த், விஜயகுமார், சுமித்ரா, சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் விதவைகள் நிலை குறித்து கவியரசர் எழுதிய வரிகள் இவை.
‘வெள்ளை கலை உடுத்தும் கலைமகளை - நீ
விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ...’
இந்தப் பாடலை உயிர்ப்போடு பாடியவர் மெல்லிசை மன்னர் தான்.
பைத்தியத்திற்கு வைத்தியம்
1981-ம் ஆண்டு வி.சீனிவாசன் இயக்கத்தில் வெளியான படம் ‘கீழ்வானம் சிவக்கும்’. சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், சரிதா, மேனகா உள்ளிட்ட பலரும் நடித்த படம். தங்கையின் பெருமையை அண்ணன் பேசும் கவியரசர் வரிகளை மெல்லிசை மன்னர் பாடினார்.
‘எனக்கொரு விடிவெள்ளி என் வானிலே
என் கண்ணின் ஒளி வெள்ளமே
என் அன்புத் தங்கை
ஆதரித்தாள் அவள் என்னை ஓஓஓ
ஆதரவில் அவள் அன்னை...’
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் என்ற டயலாக்கை கேட்டவுடன் இது விசு படமான‘ குடும்பம் ஒரு கதம்பம்’ என உங்களுக்கு நினைவிற்கு வந்துவிடும். கதை, வசனம்தான் இந்தப் படத்திற்கு விசு. இயக்கியது எஸ்பி.முத்துராமன் . 1981-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விசு, பிரதாப் போத்தன், எஸ்வி.சேகர், சுஹாசினி நடித்திருந்தனர். ஒரு பஸ் டிக்கெட்டில் கதை எழுதுவது போல ஒரு பாடல் மூலம் படத்தின் முழு கதையையும் கவியரசர் எழுதியிருப்பார்.
அந்தப் பாடலைப் பாடியவர் மெல்லிசை மன்னர்.
‘குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதிமயங்கும் பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை குழந்தை ஒருபாதை
காலம் செய்யும் பெரும் லீலை!’
1980-ம் ஆண்டு வினோத், மேனகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சாவித்திரி. பரதன் இயக்கிய இந்த படம் வெற்றி பெறவில்லை. ஆனால், கவியரசரின் பாடல் காலத்தை விஞ்சி நிற்கிறது.
‘கன்னி இரவின் சாந்தியை முடித்து
காலையைக் காண் கதிரவன் எழுந்தான்
பொன்னென்னும் ஒளியில் மின்னிய அலைகள்
புது மணமகனை வருக வென்றழைத்தான்...’ என்ற பாடலை எம்எஸ்வி பாடியுள்ளார்.
1973-ம் ஆண்டு ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தின் முத்துராமன், கேஆர்.விஜயா நடிப்பில் வெளியான படம் ‘சொந்தம்’. 1973-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.சுசிலாவுடன் இணைந்து எம்எஸ்வி பாடிய நல்லதான் யோசிக்கிறீங்க பாடலும், எம்எஸ்வி தனித்துப் பாடிய ‘நிலமெங்கும் நீரோடி நெல் வெளையும் பாவனையில்’ பாடலை கவியரசர் எழுதியுள்ளார்.
பக்தியில் அரசியல்
தமிழ் சினிமாவில் தத்துவமோ, பக்தியோ யார் வேண்டுமானாலும் அப்படியான பாடலைப் பாடலாம். 1976-ம் ஆண்டு சோ இயக்கிய ‘உண்மையே உன் விலை என்ன?’ படத்தில் விகே.ராமசாமி பாடுவது போல அமைக்கப்பட்ட இந்தப் பாடலை கவியரசர் எழுதினார்.
‘முருகா முருகா முருகா
இத்தனை மாந்தருக்கு
ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா
சத்தியத் திருநாயகா... ’ - எம்எஸ்வி உச்சஸ்தாயில் பாடிய பாடல் இது. பாடலின் இடையே இப்படி எழுதியிருப்பார் கவியரசர்.
‘படைத்தாளும் உயிர்களுக்கு குருபீடமே
பெரும் பணத்தாசையே சிலரின் பலிபீடமே
படுத்தாலும் எழுந்தாலும் கண் முன்னமே
சிலருக்கு பதவி பதவி எண்ணம் ஒரு எண்ணமே...’
ஒரு பக்திப் பாடலுக்குள் அரசியலையும் குழைத்து கவியரசர் எழுதியிருப்பார்.
கோமல் சுவாமிநாதனின் மேடை நாடகமான ‘நவாப் நாற்காலி’ அதே பெயரில் 1972-ம் ஆண்டு திரைப்படமாக்கப்பட்டது. சிவி.ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி, நாகேஷ் நடித்தனர்.
‘பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து’ என திருமுறை வரிகளோடு பாடலை கவியரசர் தொடங்கியிருப்பார்.
‘மண்ணே மாமணியே
மழைப்பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே...’ என்ற இந்தப் பாடலை மெல்லிசை மன்னர் பாடியுள்ளார்.
1976-ம் ஆண்டு கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையர்கள் இயக்கத்தில் வெளியான படம் ‘வாழ்வு என் பக்கம்’. முத்துராமன், லட்சுமி நடித்த இப்படத்தின் கதை எழுதியவர் இயக்குநர் மகேந்திரன்.
‘திருப்பதி மலையில் ஏறுகின்றாய்
திரும்பும் பொழுதே நினைவு வரும்
திருச்செந்தூருக்கு போகின்றாய்
தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும்...’
என்ற கவியரசரின் இந்தப் பாடலை மெல்லிசை மன்னர் பாடியுள்ளார். இதே ஆண்டு ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பயணம்’. விஜயகுமார், ஜெயசித்ரா, ஸ்ரீகாந்த் உள்பட நடித்த படமிது.
வழக்கம் போல கதை சொல்லும் டைட்டில் பாடல். கவியரசரின் வரிகளில் ஒலிக்கும் அந்தப் பாடல்,
‘பயணம் பயணம் பயணம்
பத்துமாத நித்திரை கண்டு ஜனனம் - அது
எத்தனை நாளோ எங்கெங்கோயோ பயணம் - அது
எத்தனை நாளோ எங்கெங்கோயோ பயணம்.’
இந்தப் பாடலைப் பாடியவர் மெல்லிசை மன்னர்.
பட்டணம் போய் பிழைக்கப் போகிறவர்களின் கனவு நரகமாய் மாறிய நகரம் குறித்து கவியரசர் எழுதிய இந்த வரிகளை மெல்லிசை மன்னர் பாடும்போது அக்கறையுடன் அறிவுரை சொல்வது போலவே தோன்றுகிறது.
நரகம் நகரம்
இயக்குநர் கே.பாலசந்தர் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்கள் ஏராளம். 1977-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘பட்டினப்பிரவேசம்’ படத்தின் மூலம் மீரா, டெல்லி கணேஷ், ஸ்வர்ணா, சரத்பாபு, ஜெயஸ்ரீ உள்பட பலரை அறிமுகப்படுத்தியிருப்பார். ஜெய்கணேஷ், மீரா, சிவச்சந்திரன் உள்பட பலர் நடித்த இந்தப் படத்தின் பாடல்கள் காலத்தால் அழியாதவை.
அவற்றிற்குக் கவியரசரும், மெல்லிசை மன்னரும் உயிரூட்டி இருப்பார்கள். பட்டணம் போய் பிழைக்கப் போகிறவர்களின் கனவு நரகமாய் மாறிய நகரம் குறித்து கவியரசர் எழுதிய இந்த வரிகளை மெல்லிசை மன்னர் பாடும்போது அக்கறையுடன் அறிவுரை சொல்வது போலவே தோன்றுகிறது.
‘தர்மத்தின் கண்ணைக் கட்டி
நகரத்தில் ஆடவிட்டு
இதுதானே நாகரீகம் என்றான்
நம்பி எவன் எவனோ இங்கு வந்தான்...’
மதுரை திருமாறன் இயக்கத்தில் 1975-ம் ஆண்டு ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான படம் ‘தாய் வீட்டு சீதனம்’. சோகம் ததும்பும் வகையில் இந்தப் படத்தில் கவியரசர் எழுதிய வரிகளை மெல்லிசை மன்னர் பாடியிருப்பார்.
‘யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
தாழ்ந்தோறும் ஒரு நாளில் வாழ்வதுண்டு மகளே
தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு...’
பசியின் தொடர்ச்சி
1973-ம் ஆண்டு சிவாஜி கணேசன், பிரமிளா நடித்த ‘மனிதரில் மாணிக்கம்’ படத்தை சி.வி. ராஜேந்திரன் இயக்கினார். வசனத்தை தூயவன் எழுதினார். ‘மனமுள்ளவன் எவனோ அவனே மனிதரில் மாணிக்கம்’ என்ற ஒலிக்கும் பாடலை மெல்லிசை மன்னர் பாடினார்.
தமிழ் சினிமாவில் வறுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் துரை இயக்கத்தில் வெளியானவைதான். ‘பசி’ அதில் முக்கியமான படம். இப்படத்தை தொடர்ந்து 1980-ம் ஆண்டு அவர் இயக்கிய படம் ‘எங்கள் வாத்தியார்’. கதை நாயகனாக நாகேஷ் நடித்தார்.
இப்படத்தில் சங்கப்புலவரான சத்திமுத்தப் புலவர் வறுமை குறித்து பாடும் ‘நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன’ பாடலை கவியரசர் நினைவூட்டி எங்கள் வாத்தியார் படத்தில் ஒரு பாடலை எழுதியிருப்பார்.
‘என்றோ புலவன் பாடியதை நான்
இன்றே பாடுகிறேன் என்
வறுமையைப் போக்கும் அரசன் யாரோ
அவனை தேடுகிறேன் அவனை தேடுகிறேன்...’
நாகேஷுக்காக மெல்லிசை மன்னர் குரல் கொடுத்த இந்தப் பாடல் கண்ணீர் வரவழைக்கும்.
1979-ம் ஆண்டு கோபு இயக்கத்தில் முத்துராமன் நடிப்பில் வெளியான படம் ‘ஆசைக்கு வயசில்லை’. படத்தின் தலைப்பை வைத்து கவியரசர் எழுதிய
‘ஆசைக்கு வயசில்ல அதை அடக்கிய மனசில்லை
ஆறிலிருந்து நூறுவரை யாரை விட்டது ஆசை வலை’ என்ற பாடலை மெல்லிசை மன்னர் பாடியுள்ளார்.
நீண்ட நேரம் ஒலிக்கும் பாடல்
தமிழ் சினிமாவில் அதிக நேரம் ஒலிக்கும் பாடல் என்ற பெருமையை ஒரு பக்திப் பாடல்தான் பெற்றுள்ளது. கே.சங்கர் இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான ‘வருவான் வடிவேலன்’ படத்தில் தான் அந்த பாடல் இடம் பெற்றுள்ளது. ஜெய்கணேஷ், லதா, படாபட் ஜெயலட்சுமி நடித்த இப்படத்தில் மலேசிய பத்துமலை முருகன் கோயில் திருவிழாவில் எடுக்கப்பட பாடல் அது.
பத்தரை நிமிடங்கள் ஒலிக்கும் இந்தப் பாடலை பக்தி சொட்டும் வரிகளைக் கொட்டி கவியரசர் எழுதியிருப்பார்.
இந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன். பி.சுசிலா, எல்ஆர்.ஈஸ்வரி, பெங்களூர் ரமணியம்மாள் ஆகியோருடன் இணைந்து மெல்லிசை மன்னர் பாடியுள்ளார்.
‘பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்
தன்னை மறந்திருப்போம்...’
பக்தி ரசம் சொட்டும் இந்தப் பாடல் மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது. இப்படத்திற்காக மெல்லிசை மன்னர் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மூன்று நடிகர்களுக்கு ஒரே குரல்
இந்தக் கட்டுரையை ஒரு காதல் பாடலோடு நிறைவுசெய்யலாம் என நினைக்கிறேன். 1978-ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘சங்கர் சலீம் சைமன்’. விஜயகுமார், ஜெய்கணேஷ், ரஜினிகாந்த், மஞ்சுளா, லதா, எம்எஸ்.வசந்தி நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மெல்லிசை மன்னர். இந்தப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் அந்தக் காலத்தில் மிகப் புகழ்பெற்றது. எழுதியவர் கவியரசர்.
‘அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்னநடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா
எஹி தோ பியரு ஹே மொஹபத்துகி
நிசானி ஹே
தொட்டிலிட்ட போதே இது சொல்லி வைத்த உறவோ
சிந்தனை வளர்ந்ததென்ன சந்தன குடங்கள் என்ன
மானே நீ மயங்குவதென்ன’ என எஸ்.ஜானகி பாட
எஹிதோ பியர் கா நஷா ஹே
ஜோஆங்கோன் மே பஸா ஹே
என இந்தி வரிகளை பாடியவர் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன். இப்பாடலில் மூன்று நடிகர்களுக்கு எம்எஸ்வியும், மூன்று நடிகைளுக்கு எஸ்.ஜானகியும் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கவியரசரின் நினைவு நாள் அவருடைய நெருங்கிய சகாவான மெல்லிசை மன்னரின் குரலால் நிறைவுபெற்றுள்ளது.
கட்டுரையாளர்: எழுத்தாளர், பத்திரிகையாளர்