நாகர்கோவிலை அடுத்து இருக்கும் வல்லன்குமாரன்விளை கிராமமே களைகட்டியிருந்தது. அங்குள்ள கோயில் வளாகத்தில் பிரம்மாண்டமாக பந்தல் போடப்பட்டிருந்தது. சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கேட்கும்படி ஒலிபெருக்கி கட்டப்பட்டு, மின் அலங்காரத்தால் அந்தப் பகுதி முழுவதும் ஜொலித்துக்கொண்டிருந்தது. ஊர் மக்களின் உபயதாரர்கள் சேர்ந்து நடத்திய நவராத்திரி விழாவில், ஒரு முழுநாளையும் நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒதுக்கி கலைஞர்களை, அவர்களின் திறனைக் கொண்டாடித் தீர்த்தனர் கிராம மக்கள்.
குமரி மண்ணிலிருந்து உதயமான இந்த அரிய முயற்சிக்கு விதைபோட்டவர், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள்!
கரோனா காலத்தில் வருவாய் இழந்தவர்களில் நாட்டுப்புறக் கலைஞர்களும் அடக்கம். வில்லுப்பாட்டு தொடங்கி தோல்பாவைக் கூத்துவரை பல கலைஞர்களின் வாழ்வாதாரமே இதனால் முடங்கிப்போனது. இந்தச் சூழலில்தான், அவர்களின் வாழ்வை மீட்டெடுக்கும் அரிய முயற்சிக்குத் தோள் கொடுத்துள்ளனர் வல்லன்குமாரன்விளை கிராம மக்கள்.
குமரி மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்களின் அமைப்பான தென்குமரி நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம், செம்பவளம் ஆய்வுத்தளம், வல்லன்குமாரன்விளை உபயதாரர்கள் ஆகியோர் சேர்ந்து ஒருநாள் முழுவதும் இந்தக் கிராமியக் கலையை நிகழ்த்தியிருக்கிறார்கள். பாரம்பரியமான இந்தக் கலைகளை நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் தங்கள் குழந்தைகளோடு வந்திருந்து மணிக்கணக்கில் ரசித்தது இந்நிகழ்வின் இன்னொரு சிறப்பு!
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த தென்குமரி நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், வில்லுப்பாட்டுக் கலைஞருமான தங்கமணியிடம் இதுகுறித்துப் பேசினோம்.
“முதலில் இந்த வாய்ப்பைக் கொடுத்த வல்லன்குமாரன்விளை கிராம மக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அதேபோல், எங்களுக்கென்று ஒரு அமைப்பைத் தொடங்க ஊக்குவித்தவர் ஆய்வாளர் அ.கா.பெருமாள்தான். அவர் எங்கள் அமைப்பின் கவுரவ ஆலோசகராகவும் இருந்து வழிகாட்டுகிறார். கரோனா காலத்தில் எங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருந்தது. கிராமியக் கலை நிகழ்ச்சிகள் எங்குமே நடைபெறவில்லை. பொதுவாகவே பங்குனி மாதம் அறுவடை முடியும். சித்திரை மாதம் விவசாயிகள் மீண்டும் நடவுப்பணியில் ஈடுபடுவார்கள். முன்பெல்லாம் இப்படியான இடைவெளி பொழுதுபோக்க வசதிகள் எதுவும் இல்லை. அதனால்தான் இந்தக் காலத்தில் விவசாயிகளையும் மகிழ்விக்க கோயில்களில் கொடைவிழாக்கள் நடக்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கோயில்களில் கொடை விழாக்களோ, பெரிய அளவில் திருவிழாக்களோ நடைபெறவில்லை. அதனால் கிராமியக் கலைஞர்கள் பலரும் வேலை இழந்தோம். இத்தனை இடர்களுக்கு மத்தியில் இப்போதுதான் கிராமங்களில் சின்னச் சின்ன கலை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
மக்களுக்குக் கிராமியக் கலைகள் குறித்த புரிதலை உருவாக்கவும், அதைப் பரவலாக்கவும் தான் ஒருநாள் நிகழ்வினை நடத்த நினைத்தோம். அப்போதுதான் வல்லன்குமாரன்விளை கிராமத்தில் வில்லிசை நிகழ்ச்சி நடத்தக் கேட்டதும் இப்படியான என் விருப்பத்தைச் சொன்னேன். மேலும், ஒரு முழுநாளையும் நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒதுக்கும்பட்சத்தில், அதன் மூலம் நூற்றுக்கும் அதிகமான கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் எனச் சொன்னேன். உடனே நவராத்திரி 5-ம் நாள் விழாவின் உபயதாரர்களும் இதற்குச் சம்மதம் தெரிவித்தனர். அப்படித்தான் இந்த நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் ஒரே மேடையில் நிகழ்த்தப்பட்டன“ என்ற தங்கமணி, “நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அதிக அளவில் ‘கலைமாமணி’ விருது வழங்கி ஊக்குவிக்க வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே அடையாள அட்டை வழங்க வேண்டும்” எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
காலையில் மங்கள இசையோடு தொடங்கிய இந்நிகழ்வில், தொடர்ந்து நையாண்டி மேளம், சிலம்பக் கலைஞர்களிடம் பயிற்சி பெற்ற குழந்தைகளின் சிலம்பாட்டம், பஜனை, தப்பாட்டம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, தோல்பாவைக் கூத்து, செண்டை மேளம், பேண்ட் வாத்தியம் என வரிசையாக கலைநிகழ்ச்சிகள் வரிசை கட்டின. பொதுமக்களும் ஆர்வத்தோடு பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தனர்.
வல்லன்குமாரன்விளை ஊர்த் தலைவர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறும்போது, “வில்லிசைக் கலைஞர் தங்கமணி ஒருநாள் முழுவதும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கேட்டபோது, இது சாத்தியமா எனத் தோன்றியது. ஆனால், அடுத்தடுத்து அணிவகுத்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்வுகள் எங்களையும் பிரமிப்பில் ஆழ்த்திவிட்டன. இந்தக் கலைஞர்களுக்காக பாடுபட்டுவரும் ஆய்வாளர் அ.கா.பெருமாளுக்கும் ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செய்தோம். கிராமிய, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஏதோ எங்களால் முடிந்த சிறிய ஊக்குவிப்பாக இதைப் பார்க்கிறோம். இதேபோல் அனைத்து கிராமங்களும் முன்வர வேண்டும். என்னதான் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளையும், ஆர்கெஸ்ட்ரா போன்ற கேளிக்கைகளையும் நடத்தினாலும் சாப்பாட்டில் தொட்டுக்கொள்ள காய்கறிக் கூட்டு வைப்பதைப் போலவேனும், நாம் நம் கிராமியக் கலைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். இது நம் மண்ணின் கலை. இவர்கள் நம் மண்ணின் கலைஞர்கள். அந்த உணர்வோடுதான் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தோம். எங்கள் ஊர் மக்களும், உபயதாரர்களும் இதற்கு முழுக்க ஒத்துழைத்தனர்” என்றார் ராதாகிருஷ்ணன்.
“நாட்டுப்புறக் கலைகளுக்கான தேவை இன்னும் இருக்கிறது. இந்தக் கலைகள் உயிர்ப்புடன் இருக்க அனைவருமே தோள்கொடுக்க வேண்டிய நேரம் இது” என்கிறார் அ.கா.பெருமாள்.
அவர் நம்மோடு பேசிக்கொண்டிருக்கையிலேயே, தீயைக் கையில் வைத்துக்கொண்டு நடுத்தர வயது வாலிபர் ஒருவர் வேகமாகச் சுற்றுகிறார். முன்வரிசையில் வந்து அமர்ந்து குழந்தைகள் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அடுத்தடுத்து நடந்த மண்ணின் வீர விளையாட்டுகளும், கிராமியக் கலைகளும் அவர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டுசென்றன.
நிகழ்ச்சி தொடர்பாக அ.கா.பெருமாளிடம் பேசினோம். “நாட்டுப்புறக் கலைகளுக்கான தேவை இன்னும் இருக்கிறது. இந்தக் கலைகள் உயிர்ப்புடன் இருக்க அனைவருமே தோள்கொடுக்க வேண்டிய நேரம் இது. கரோனா காலகட்டத்தில் கலைஞர்கள் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. கலைஞர்களைப் பொறுத்தவரை அவர்களின் மாதாந்திர வீட்டுச்செலவுக்கு உண்டான தொகைக்கு நிகழ்ச்சிகள் கிடைத்துவிட்டால் போதும். அவர்கள் இந்தக் கலையில் தாக்குப்பிடித்து நிற்பார்கள். அதற்குண்டான ஏற்பாட்டைச் செய்யும்வகையில் அந்தந்தப் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற, கிராமியக் கலைகளை மீட்டுருவாக்கம் செய்ய வல்லன்குமாரன்விளையைப் போல் பிற பகுதிமக்களும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் நம் மண்ணின் கலைகளையும் வளர்க்கலாம். அதையே நம்பியிருக்கும் கலைஞர்களையும் காக்கலாம்” என்றார் அவர்.
வில்லுப்பாட்டில் பிட்டுக்கு மண் சுமந்த பெருமாளின் கதையைச் சொல்லி முடித்ததும், தோல்பாவைக் கூத்து தொடங்குகிறது. அதில் கம்பராமாயணம் நிகழ்த்தப்படுகிறது. கூட்டத்தில் பார்வையாளர் வரிசையில் இருந்த பெரியவர் மாசிலாமணி, “எங்களது சின்னவயதில் இதுமட்டும்தான் பொழுதுபோக்கு. சினிமா பார்ப்பதைவிட இது நன்றாக இருக்கும். இதன்மூலம்தான் அன்றைய காலங்களில் கதை சொல்லும் கலையும் வளர்ந்தது. இந்த நிகழ்வுகள் நம் அறிவுக்கூர்மைக்கும், கேட்டுத் தெரியும் ஞானத்துக்கும்கூட வழிகாட்டும். ஆனால், இன்றைய சின்னக் குழந்தைகள் செல்போனே கதி என இருக்கிறார்கள். இதில் அவர்களது பள்ளிக் கல்வியும்கூட செல்போனுக்குள் சங்கமித்துக் கிடக்கிறது. இப்படியான சூழலில் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியக் கலைகளைத் தெரிந்துகொள்ளவும் இது வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது” என்றார்.
வல்லன்குமாரன்விளையைப் போல் ஆரோக்கியமான முன்னெடுப்புகள் தமிழகம் எங்கும் பல்கிப் பெருகினால், முடங்கிக் கிடக்கும் கிராமியக் கலைகள் புத்துயிர் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை!