பாட்டு வாத்தியார்: பிறைசூடனுக்கு அஞ்சலி!


பாடலாசிரியர் பிறைசூடன் காலமாகிவிட்டார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் சினிமாவில் 2 ஆயிரத்துக்கும் மேல் பாடல்கள் எழுதியவர் அவர். பக்திப் பாடல்கள் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேலிருக்கும்.

1988-ல் டிபி.கஜேந்திரன் இயக்கிய 'எங்க ஊரு காவல்காரன்' படத்தில்தான் இசைஞானி இசையராஜாவிடம் அவர் பாடல் எழுதினார். இசைஞானி, எஸ்பி.சைலஜா, சுனந்தா பாடிய 'சிறுவாணி தண்ணி குடிச்சு நான் பவானியில்' என்ற பாடலை எழுதினார். அவர் பிறந்ததோ திருவாரூர் மாவட்டம் நன்னிலம். அவரது இயற்பெயர் சந்திரசேகரன்!

“விருது என்கிற எழுத்தை மாற்றிப் போடுங்கள். துருவி என வரும். ஒருவருக்கு விருது கொடுக்கப்படுவதற்கு முன்னர், அவரின் திறமைகளைத் துருவித் துருவி ஆராய வேண்டும். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. கவிஞன் என மக்களும், இலக்கிய உலகமும் என்னை ஏற்றுக்கொண்டதே பெரிய விருதுதானே?" என்று வினா எழுப்பியவர் பிறைசூடன்!

இதைத் தொடர்ந்து இசைஞானி இசையில் அதிகமான ஹிட் பாடல்களை எழுதிக் குவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராய் வீற்றிருந்தாலும், தன்னுடைய கவிதைச்செருக்கை விட்டுக்கொடுக்காத அவரின் ஆகிருதியைக் கண்டு பல நேரம் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருக்கிறேன். பாடல் பாடுபவர்களுக்கு பல உத்திகளைக் கற்றுத் தரும் புத்திசிகாமணி அவர்.

சினிமா என்பது கூட்டு உழைப்பு. வளைந்து கொடுக்காத அந்தக் கவிஞரின் ஞானச்செருக்குதான், அவருக்குக் கிட்ட வேண்டிய விருதுகளைத் தள்ளி வைத்தது என்றும் சொல்லலாம்.

உங்களுக்கு மிகப் பெரிய விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லையே ஏன் என்ற கேள்விக்கு இப்படி பதில் சொன்னார் பிறைசூடன்:

“விருது என்கிற எழுத்தை மாற்றிப் போடுங்கள். துருவி என வரும். ஒருவருக்கு விருது கொடுக்கப்படுவதற்கு முன்னர், அவரின் திறமைகளைத் துருவித் துருவி ஆராய வேண்டும். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. கவிஞன் என மக்களும், இலக்கிய உலகமும் என்னை ஏற்றுக்கொண்டதே பெரிய விருதுதானே?" என்று வினா எழுப்பினார்.

பத்திரிகையாளர் ராம்ஜி மூலம் எம்எஸ்.விஸ்வநாதனிடம் அறிமுகம் செய்யப்பட்டவர் பிறைசூடன். இயக்குநர் ஆர்சி.சக்தி இயக்கிய 'சிறை' படத்தின் மூலம் தனது பாடல் பயணத்தை அவர் தொடங்கினார். ஜெமினி ஒலிப்பதிவுக் கூடத்தில் 'ராசாத்தி ரோஜாப்பூ வெட்கம் ஏனோ' என்று அவரது முதல் பாடல் பதிவானது.

இதன் பின் 2 ஆண்டுகள் இடைவேளை. ஏஆர்.ரகுமானின் விளம்பரப் படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருந்தார். கவிஞர் வைரமுத்துவுடனான உரசலால் நிறைய கவிஞர்களுக்கு இசைஞானி வாய்ப்பு அளித்து வந்தார். வாலி, முத்துலிங்கம், நா.காமராஜன், மு.மேத்தா, பொன்னடியான், காமகோடியன், பிறைசூடன் என பல கவிஞர்களால் இளையராஜா கூட்டணியில் வெளியான பாடல்கள் அத்தனையும் முத்துகள்.

இந்தச் சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திய கவிஞர்களில் பிறைசூடன் முக்கியமானவர்.

‘சோலப் பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குருத்தே என் தாயி சோலையம்மா
கோடி திரவியமே வந்துது வந்துது ஏன்
கொள்ள போனது போனது ஏன்
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்
விட்டுச் சென்றது சென்றது ஏன்’

என இசைஞானியின் குரலில் ஒலிக்கும் சோகத்தைக் கேட்டு கண்ணீர் சிந்தாதவர் யார் இருக்கிறார்கள்? இந்த அற்புதமான பாடலுக்குச் சொந்தக்காரர் பிறைசூடன்தான்.

தத்துவவிசாரம் நடத்தும் அவரது கவிதைப்பாங்கும், சந்தமும் பல பாடல்களை வாலி என்றே நினைக்கத் தோன்றும். பண்பலையில் பாடல்கள் ஒலிபரப்பும்போதும், அவர்கள் போடும் வெட்டி அறுவையைக் குறைத்துக் கொண்டு இசையமைப்பாளர், பாடலாசிரியர் பற்றிக் கொஞ்சம் சொன்னால், படைப்பாளிகள் கெட்டுவிட மாட்டார்கள்.

‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி’

'உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்' படத்தில் இசைஞானி இசையில் எஸ்பி. பாலசுப்பிரமணியமும், சொர்ணலதாவும் இணைந்து பாடிய இந்த பாடல் இன்றளவும் கிராமத்து கீதமாகத் திகழ்கிறது. இப்பாடலை புனைந்ததும் பிறைசூடன்தான்.


நீரில் இருந்தால்தான் மீனுக்கு மதிப்பு. அதுபோல படங்களுக்கு சில பாடல்களால்தான் மதிப்பு. 'உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்' என்ற ஒரு படம். இசைஞானி இசையால் இன்றளவும் உயிர் பிழைத்துக் கிடக்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் முத்திரைதான்.

பிறைசூடன் எழுதிய

‘ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி’
என கே.ஜே.யேசுதாசும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய இந்தப் பாடல் மிகச் சிறப்பானது.

‘நதியின் வேகம் பருவ மோகம்
கடலைச்சேர மாறிப்போகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம்
இதழில் ஆரும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்’
- என பிறைசூடன் பாடலில் ஒரு சரணத்தில் எத்தனை ‘ம்’ போட்டிருக்கிறார் என நினைத்தால் மலைப்பாக இருக்கும்.

அதேபோல ஒரு படம் 'ஈரமான ரோஜாவே'. பாடல்களை நீக்கிவிட்டு படத்தைப் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. அப்படத்தில் இடம்பெற்ற 'சலசலக்கும் மணியோசை சலசலக்கும் குயிலோசை' படத்தில் நீரோடையும், ஹம்மிங் சத்தமும், புல்லாங்குழல் ஒலியும் மாய உலகில் அழைத்துச் செல்லும். இந்த இனிய பாடலை எழுதியவர் பிறைசூடன்தான்.

'கோபுரவாசலிலே' படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில் ஒலிக்கும்,

‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட’


... என்ற இந்தப் பாடலை எழுதியது கவிஞர் வாலி என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இப்பாடலில் உள்ள வரிகளைக் கவனித்தால் வாலியின் கவிதைப் புலமையோடு இருக்கும்.

‘பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ’


...இப்படியான வரிகளை வாலி மட்டுமல்ல பிறைசூடனும் எழுதுவார் எனத் தெரிந்துதான், இசைஞானி இப்படத்தில் இந்தப் பாடலோடு மற்றுமொரு பாடலையும் எழுத வாய்ப்பளித்தார்.

யேசுதாஸ், ஜானகி குரல்களில் ஒலிக்கும்,

'நாதம் எழுந்ததடி கண்ணம்மா நவரசம் ஆனதடி' பாடலில் தனது முத்திரையைப் பிறைசூடன் பதித்திருப்பார்.

நடிகர் ரஜினிகாந்த் படங்களுக்குத் தொடர்ந்து பாடல் எழுத இவருக்கு இசைஞானி வாய்ப்பளித்துள்ளார். எனது விருப்பப் பாடலான 'ராஜாதி ராஜா' படத்தில் இடம்பெற்ற 'மீனம்மா மீனம்மா' பாடலில் 'சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே' என்ற வரிகளை மனோ பாடும் வரிகளை இப்போது கேட்டாலும் ஒரு மயக்கம்.

இதைத் தொடர்ந்து 'அதிசய பிறவி' படத்தில் ' தா தந்தன கும்மிக்கொட்டு', 'பணக்காரன்' படத்தில் ' சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது', மாப்பிள்ளை படத்தில் ' வேறு வேலை எனக்கு இல்லையே', ‘பணக்காரன்’ படத்தில் ' நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்' பாடல்களை எழுதியவர் பிறைசூடன்.

தமிழில் மிகவும் வித்தியாசமான குரல்கள் என்றால் நிச்சயம் அது அருண்மொழி, ஸ்வர்ணலதா தான். இவர்கள் இருவரும் சேர்ந்து பாடினால் எப்படியிருக்கும்? 'செவ்வந்தி' படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய, 'புன்னைவன பூங்குயிலே பூமகளே வா கன்னித்தமிழ் காவிரியே தேன் மொழியே வா' என்ற இனிய பாடலுக்கு வரி கொடுத்தவர் பிறைசூடனேதான்.

‘வானத்து அம்புலியை வரவழைக்க வேணுமென்று

தனியாகத் தவமிருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்

எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா

அம்புலியும் பூமிதன்னில் உன் உருவில் வந்ததம்மா...’

இது 'என்னைப் பெத்த ராசா' படத்துக்காக பிறைசூடன் எழுதிய வரிகள் தான். மனோவும், சித்ராவும் இணைந்து பாடிய இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா.

‘உயிரே உயிரின் ஒளியே’, ‘நட்டு வைச்ச ரோஜாச்செடி’, ‘ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்’, ‘தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’, ‘நடந்தால் இரண்டடி’, ‘ஆட்டமா தேரோட்டமா’, ‘மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ’, ‘காதலுக்கு ராஜா’, ‘குண்டு ஒண்ணு வெச்சுருக்கேன்’, ‘மணிக்குயில் இசைக்குதடி’, ‘வெண்ணிலவு கொதிப்பதென்ன’, ‘இதயமே இதயமே’ என இளையராஜாவின் இசையில் அவர் எழுதிய பாடல்கள் நிறைய.

தமிழ் சினிமாவின் முதல் கானா பாடலை எழுதிய கவிஞரும் பிறைசூடன் தான். ஆதித்யன் இசையில் அமரன் படத்தில் கார்த்திக் பாடிய 'வெத்தல போட்ட சோக்குல' தான் அந்தப் பாடல்.

‘ஸ்டார்’ படத்தில் 'ரசிகா ஓ ரசிகா', தெனாலியில் 'போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே' ஆகிய பாடல்களை ஏஆர்.ரகுமான் இசையில் எழுதியுள்ளார். ஆதித்யன் இசையில் ‘வசந்தமே அருகில் வா’, ‘சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே’, ‘சக்கு சக்கு வத்திக்குச்சி சக்குன்னுதான் பத்திக்கிச்சு’, ‘தாழமடல் ஓல கொண்டு’ ஆகிய பாடல்களையும், தேவா இசையில் ‘சுண்டக்கஞ்சி, பல்லக்கு, முட்டிக்கிலாமா’ உள்ளிட்ட ஏராளமான பாடல்களையும் எழுதியுள்ளார்.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ‘இது நீ இருக்கும் நெஞ்சமடி’, வித்யாசாகர் இசையில் ‘வாராயோ தோழியே’, மரகதமணி இசையில் ‘உயிரே உயிரே இது தெய்வீக..’ என பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார்.

கவிஞானி பட்டம் பெற்ற பிறைசூடனை, ‘பாட்டு வாத்தியாரே' என்றுதான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அழைப்பார்! உண்மையில் மிகப் பொருத்தமான பட்டம்தான்.

பிறைசூடனின் மறைவு திரையுலகுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்துக்கும் பேரிழப்பு!

x