ஏழையின் கனவை நனவாக்கும் ஈர நெஞ்சம்!


பிரதீஷ்

சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் உழலுபவர்கள், அந்த இன்னல்களையும் தாண்டி மற்றவர்களின் துயர்துடைக்க தம்மாலான முயற்சிகளில் இறங்குவதுண்டு. குமரி மாவட்டம், தக்கலை அருகில் உள்ள ஆற்றுவிளாகத்தைச் சேர்ந்த பிரதீஷ் அப்படியான பெருந்தகையாளர்!

கொத்தனாராக வேலைபார்த்துவந்த பிரதீஷ், சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட வேலைக்குச் சென்றபோது 2-வது மாடியில் இருந்து தவறிவிழுந்து கோமாநிலைக்குப் போனார். ஒரு மாதத்துக்குப் பின்பு சுயநினைவு திரும்பியபோது, பிரதீஷின் மண்ணீரல் அகற்றப்பட்டிருந்தது. தொண்டையில் ஓட்டைபோட்டு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையால், 70 சதவீத பேசும் திறனையும் இழந்த பிரதீஷ், இந்தச் சூழலிலும் வாரம் ஒரு குளத்தைத் தானே இறங்கி சுத்தம்செய்கிறார். ‘இயற்கையுடன் ஒரு பயணம்’ எனும் பெயரில், இயற்கையை நேசிக்கும் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு அமைப்பு ஒன்றைத் தொடங்கி காவல் நிலையங்கள், சாலையோரங்களிலும் மரங்கள் நட்டுவருகிறார்.

சமூகசேவையே நோக்காகக் கொண்ட பிரதீஷ், பொருளாதார பின்புலம் எதுவும் இல்லாதவர். வாழ்வச்சகோஷ்டம் பகுதியில் இருக்கும் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் மகிசாசுர மர்த்தினி ஆலயத்தில் தற்காலிக காவலர் வேலை செய்கிறார். இந்த வேலைக்கு அறநிலையத் துறையில் இருந்து ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை. அதேநேரம் உள்ளூர் ஆலயக் கமிட்டியினர் கொடுக்கும் சிறிய தொகையில், வீட்டில் உப்பு, புளி, மிளகு மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு மீதம் இருக்கும் தொகையை சேவைக்கே செலவு செய்து வருகிறார். திருமணம் செய்துகொள்ளாமல், சேவையே பிரதானம் எனச் சுழன்றடித்து இயங்கிவருகிறார் பிரதீஷ். தெளிவாகப் பேச வரவில்லை என்றாலும், அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சேவையாற்றிவருகிறார்.

இவரைப் பற்றி ‘காமதேனு’ வார இதழிலும் விரிவான கட்டுரை வெளியாகியிருக்கிறது.

பெருந்தொற்றுக் காலத்திலும் பேருதவி

பிரதீஷின் சேவைகள் பெருந்தொற்றுக் காலத்திலும் தொடர்ந்தன. நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்போர் கரோனா தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் என பலரும் எச்சரித்த நிலையில், பிரதீஷ் தனக்கு மண்ணீரல் இல்லாவிட்டாலும் மனம் நிரம்ப சேவை குணத்தோடு கரோனாவுக்கு எதிராகக் களமாடினார். தானே உணவு தயாரித்து ஏழைகளுக்கு விநியோகித்ததோடு, துப்புரவுப் பணியாளர் அவதாரம் எடுத்து சாலையோரம் பிளீச்சிங் பவுடர் போடுவது முதல் சுத்தம் செய்வதுவரை பல பணிகளைச் செய்தார்.

தனக்குக் கிடைக்கும் மிகக் குறைவான ஊதியத்தில் மிச்சம் பிடித்து ஏழைகளுக்குக் காய்கறிகளை வீடு, வீடாகப் போய் வழங்கினார். அப்போது ஒரு மாற்றுத்திறனாளியின் ஏழ்மை நிலையைப் பார்த்த பிரதீஷ், இப்போது அவருக்காக தன் நண்பர்களின் பங்கேற்போடு வீடுகட்டி வருகிறார்.

லதா தன் மகள்களுடன்

கன்னியாகுமரி மாவட்டத்தின் செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி லதா. இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மோகனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் உடல்நலம் குன்றி, வீட்டிலேயே மாற்றுத்திறனாளியாக முடங்கிப்போனார்.

ஒருநாள், கரோனா காலத்தில் காய்கறிகள் வழங்கச் சென்ற பிரதீஷ் இவர்களின் இல்லத்தைப் பார்த்தார். சாதாரணமாக வீடுகளில் இருக்கும் பாத்ரூம் அளவிலேயே இவர்களது மொத்த வீடும் இருக்க இவர்களுக்கு உதவ முன்வந்தார் பிரதீஷ்.

லதா குடும்பத்துடன்

இந்த ஏழைக் குடும்பத்தின் நிலையை களியக்காவிளையில் இயங்கும் ஜே.சி.ஐ அமைப்பிடம் சொல்ல, அவர்களும் தங்களால் முடிந்த உதவியைச் செய்து இந்தப் பணிகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். இப்போது இந்தக் கட்டுமானப் பணிகள் விறுவிறுவென நடந்துவருகின்றது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பிரதீஷ், “கோமாவில் இருந்த நான் இறைவன் அருளால் மீண்டுவந்தேன். இறைவன் என் உயிரைப் பிடித்து நிறுத்தியிருக்கிறார் என்றால், மற்றவர்கள் பயன்படும்படி வாழவேண்டும் என்பதற்காகத்தான் எனத் தோன்றியது. அதனால் தான் சமூகசேவைகளில் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டேன். எனக்கென்று தனிப்பட்ட செலவு எதுவும் இல்லை. அதனாலும் இதில் முழுக்கவனம் செலுத்த முடிகிறது.

புது வீடு கட்டப்படுகிறது

மோகனின் வீட்டிற்கு உதவி செய்யச் சென்றபோது அங்கே கழிப்பறை வசதிகூட இல்லை. லதா, தன் இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு அதிகாலையில் வீட்டுப்பக்கம் இருக்கும் மறைவான தோட்டங்களுக்குக் காலைக்கடன் கழிக்கச் செல்வதாகச் சொன்னார். அதைக் கேட்டதும் மனதுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. இவர்களுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது. இவர்களுக்கென்று அவர்கள் குடும்பத்திடம் பேசியதில் ஒரு சென்ட் இடம் தந்தார்கள். ஆனால் அந்த இடம் முழுக்க பாறைகளால் நிரம்பியிருந்தது. உடனே இவர்களது இன்னொரு உறவினரிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன். அவர் அஸ்திவாரம் போட்டுத்தந்தார். கட்டிடம், வயரிங் உள்பட அனைத்து வேலைகளையும் நானும், என் ஃபேஸ்புக் நண்பர்களும் பார்த்துக்கொள்கிறோம். பலரும் உதவுகிறார்கள். நான் என் பங்களிப்பாகக் கட்டிட வேலையும் செய்கிறேன். ஒரு சேவையாக இலவசமாக முன்னாள் கொத்தனாராக இருந்து இந்த வீட்டைக் கட்டிக் கொடுக்கிறேன்.

கட்டுமானப் பணியில் பிரதீஷ்

மாடியில் இருந்து விழுந்த பின்பு கொத்தனார் வேலை நான் பார்க்கவே இல்லை. சேவை எனும் கண்ணோட்டத்திலேயே மீண்டும் செங்கல்லைப் பிடித்துள்ளேன். காலையில் 4 மணிக்கு கோயிலில் வேலைக்குப் போய்விடுவேன். 4.40-க்கு நடைதிறக்கும். காலை 11 மணிக்கு நடை மூடுவார்கள். மறுபடி மாலை 4.30-க்குத் திறப்பார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் இலவசமாகக் கட்டிட வேலை பார்க்கிறேன். ஆலயத்திலும் அறநிலையத் துறை பணி நிரந்தரம் செய்யவில்லை. இருந்தும் இறைத்தொண்டு என்பதால் தொடர்கிறேன். நான் வாழும் இந்த உலகுக்கு என்னால் முடிந்த சேவையைச் செய்யவே இப்படி முயற்சிக்கிறேன்” என்று சொல்லும் பிரதீஷ், “நாகர்கோவிலில் இதுவரை 70 முறைக்கும் மேல் ரத்ததானம் செய்து பலரது உயிரையும் காப்பாற்றிய சரலூர் ஜெகன் உள்ளிட்ட சிலருக்கும் இலவச வீடு கட்டிக்கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்” என்கிறார் உறுதியாக.

x