‘இந்தக் குளம்தான் எனக்குச் சோறு போடுது’ மனம் தளராத மாற்றுத்திறனாளி கணபதி! !


கணபதி

குமரிமாவட்டத்தின் பறக்கை-சுசீந்திரம் இணைப்புச் சாலை அது. சாலையின் ஒருபுறத்தில் நீண்டுவிரிந்த குளம், மறுபுறத்தில் வயல்களும், தென்னந்த் தோப்புகளும் வரிசை கட்டுகின்றன. குறுகலான அந்த இணைப்புச் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். எதிரே, மூன்று சக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் தன் வாகனத்தை விட்டு இறங்கினார். அவர் வைத்திருந்த பெரிய வட்ட வடிவிலான வட்டையை உருட்டிக்கொண்டு, குளத்தைப் பார்த்து நடக்கத் தொடங்கினார்.

ஒரு கால் நடக்க முடியவில்லை. ஒரு கையால் காலுக்கு முட்டு கொடுத்து நடக்கிறார். அதன் இடையே இன்னொரு கையால் அந்த வட்டையைத் தள்ளிக்கொண்டே குளத்தின் ஏற்றம், இறக்கம் நிறைந்த கரையைக் கடக்கிறார். கால் நடக்கமுடியாவிட்டாலும், அந்த வட்டையை தண்ணீருக்குள் போட்டுவிட்டு, கைகளை தரையில் ஊன்றி ஒரே தாவுதான்... வட்டையில் ஏறி அமர்ந்துகொள்கிறார். தொடர்ந்து கைகளை தண்ணீருக்குள் பதித்து வட்டையை நகர்த்தி முன்னோக்கிச் செல்கிறார். குளத்தில் இருக்கும் தாமரை இலைகளைப் பறித்து விற்பனை செய்து தன் வாழ்வை ஓட்டிவருகிறார் கணபதி என்ற அந்த இளைஞர். எதார்த்தமாக நான் கண்ட அந்த காட்சிகள் அவரிடம் என்னைப் பேச வைத்தது.

“நான் 2-ம் வகுப்புப் படிக்கும்போது திடீர்ன்னு ஒருநாள் காய்ச்சல் வந்தது. இடது கால் வலித்துக்கொண்டே இருந்தது. திடீர் என காலை இழுத்துக் கொண்டது. அதன் பின்பு என்னால் மற்றவர்களைப் போல் நடக்க முடியவில்லை. எப்போதும் காலில் வலி இருந்துகொண்டே இருந்தது. இந்த வலியால் வீட்டுக்குள் முடங்கிப் போனேன். 5-ம் வகுப்போடு படிப்பையும் நிறுத்திவிட்டேன். தொடர்ந்து பைக் ஒர்க் ஷாப்பில் வேலைக்குப் போனேன். அங்கே எனக்கு வேலை சிரமமாக இல்லை. அதேநேரத்தில், நான் இருக்கும் பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நாகர்கோவிலுக்கு தினமும் பேருந்தில் சென்றுவருவது சவாலான விஷயமாக இருந்தது. தினமும் பேருந்து கூட்டத்தோடு வரும். அதில் ஏறி நின்றுகொண்டே செல்வதில் கடும் சிரமத்தை உணர்ந்தேன்.

குளத்தில் தாமரை இலை பறிக்கும் கணபதி

அப்போதுதான் இதற்கு மாற்றாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. எனக்குச் சொந்த வீடு இல்லை. குளத்தங்கரை புறம்போக்கில்தான் வசிக்கிறேன். அப்போதுதான் இப்போது பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு தடையிருப்பதால் தாமரை இலைகளுக்கு அதிக தேவை இருப்பதை உள்வாங்கினேன். உடனே, நாம் ஏன் இந்த குளத்தில் நிரம்பி இருக்கும் தாமரை இலைகளைப் பறித்து வியாபாரம் செய்யக்கூடாது என எனக்குள் தோன்றியது.

இந்தக் குளம் ஏலம் விடப்படவில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் தாமரை இலைகளைப் பறித்து விற்கலாம். சொந்தமாக ஒரு வட்டை வாங்கிவிட்டு தொழிலில் இறங்கினேன். இதிலும் சில சவால்கள் இருக்கிறது. ஒக்கி புயல் தாக்கியபோது, நான் இந்த குளத்தில் தாமரை இலை பறித்துக்கொண்டிருந்தேன். காற்றில் வட்டை கவிழ்ந்து குளத்துக்குள் விழுந்துவிட்டேன். அதன் பின்னர் கையாலேயே நீச்சல் அடித்து கரைக்கு வந்துசேர்ந்தேன். இதுவரை 2 முறை வட்டையில் இருந்து குளத்துக்குள் விழுந்திருக்கிறேன். தாமரை இலைகள் படர்ந்திருக்கும் குளம் இது. சிலநேரங்களில் இப்படி விழும்போது கொடி சுத்திக் கொண்டால் எளிதில் தப்பிக்க முடியாது. உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் அபாயமும் இருக்கிறது. தாமரை இலை பறிக்கச் செல்லும் பலர் அப்படி இறந்தும் இருக்கிறார்கள். இருந்தும் மனைவி, இரண்டு குழந்தைகளுக்குச் சோறுபோட வேண்டுமே!

பறிக்கும் தாமரை இலைகளை மலரகங்கள், இறைச்சிக் கடைகளில் கொடுத்துவிடுவேன். நான் பறித்து வரும் இலையை என் மனைவிதான் சாக்கில் அடுக்கிவைப்பார்கள். தினமும் 500 ரூபாய்வரை கிடைக்கும். நான் இப்போது நண்பர் ஒருவரின் மூன்று சக்கர வாகனத்தைத்தான் பயன்படுத்தி வருகிறேன். அரசு சொந்தமாக எனக்கு ஒரு மூன்று சக்கர வாகனம் கொடுத்தால் உதவியாக இருக்கிறேன். பலமுறை மனு கொடுத்தும் அது நடக்கவில்லை. அன்றாடம் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்னும் வைராக்கியத்தில், இந்தத் தொழில் செய்துவருகிறேன். இப்போதைக்கு இந்தக் குளம்தான் எனக்குச் சோறுபோடுது’’ என்றார் கணபதி.

x