சிறகை விரி உலகை அறி - 18


மக்னோலியா மலர்

ஒருவரை நண்பராக்குவதற்கு என்னவெல்லாம் நீங்கள் செய்வீர்கள்? புன்னகைப்பீர்கள், பாராட்டுவீர்கள், பரிசு கொடுப்பீர்கள், உதவி செய்வீர்கள், அடிக்கடிச் சந்திப்பீர்கள், மற்றவர்களிடம் பெருமையாகப் பேசுவீர்கள்.

நட்பு நாடி சீராகத் துடிக்க சீன நாடு சிற்பங்களைக் கருவியாக்கியுள்ளது. கலைஞர்களின் விரல்களென காட்சியளிக்கும் சிற்பங்களைக் கண்டு நட்புடன் கை குலுக்க நான் புறப்பட்டேன்.

அலைபேசி பையில் கிடந்தது. யாராலும் என்னைத் தொடர்புகொள்ள இயலாது. மற்றவரைத் தொடர்புகொள்ளும் தேவையும் எனக்குக் கிடையாது. சுவாசத்தை ஆழ உள்ளிழுத்து, முகமெல்லாம் புன்னகை பூச்சூடி சிறு குழந்தையாகி சாலையில் ஒவ்வொன்றையும் வியந்து பார்த்தேன். வியப்பினூடே சூங் சிங்-லிங் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தார்.

தன்னம்பிக்கை மிகுந்த சூங் சிங்-லிங்

தனது 22-வது வயதில் சூங் சிங்-லிங் திருமணம் செய்தபோது, கணவர் சன் யாட்-சென்னுக்கு வயது 49. தன்னைவிட 27 ஆண்டுகள் மூத்தவரான சன் யாட்-சென்னின் புரட்சிகர பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்ட சூங், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு தன் கணவரின் சார்பாகக் கடிதங்கள் எழுதினார். பத்தே ஆண்டுகளில் கணவரை இழந்துவிட்டாலும், சன் யாட்-சென்னின் தேசியவாதம், ஜனநாயகம், மக்கள் நலன் எனும் முக்கியமான 3 கொள்கைகளையும் மக்களிடம் கொண்டுசென்றார். 1927-ல், ‘பெண்கள் அரசியல் பயிற்சி பள்ளி’ தொடங்கி, நாட்டில் நடந்த புரட்சியில் பெண்கள் பங்களிப்பு நல்கவும், பெண்களின் விடுதலைக்காகவும், எண்ணற்ற உரைகளை நிகழ்த்தினார். பெண்ணிய அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டதுடன், பெண்களுக்கான சட்டங்கள் உருவாக உந்துசக்தியாகத் திகழ்ந்தார். சீனக் கலாச்சாரம், நில அமைப்பு, பொருளாதாரம், சமூக நலன் குறித்த நேர்மறையான எண்ணங்களை வெளிநாடுகளுக்கு அறிவிக்க 1952-ல் ‘China Reconstructs’ இதழ் தொடங்கினார். ‘சீனா டுடே’ எனும் பெயரில் இப்போதும் சீன, ஆங்கிலம், பிரெஞ்சு, அரபு, ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளில் பல நாடுகளில் அது மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

சூங் சிங்-லிங் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர் அல்ல. தன்னைச் சேர்த்துக்கொள்ளுமாறு பலமுறை வேண்டுகோள் வைத்தபோதும் அவரின் விருப்பம் நிறைவேறவில்லை. ஆனாலும், கட்சி மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் முறைப்படி அவருக்கு அறிவித்தார்கள். ‘மக்கள் சீனம்’ உதயமானபோது, 6 துணை அதிபர்களுள் ஒருவராக சூங் சிங்-லிங்கை நியமித்தார் புரட்சியாளர் மாவோ. இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கும் வந்தார் சூங். மற்றொரு நாட்டைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அல்லாத முதல் தலைவர் இவர்தான். மே 16, 1981 அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக முறைப்படி சேர்த்துக்கொள்ளப்பட்ட சூங், சீன மக்கள் குடியரசின் மதிப்புறு அதிபராகவும் (Honorary President) அறிவிக்கப்பட்டார். தன்னுடைய பல ஆண்டுகால விருப்பம் நிறைவேறிய மகிழ்வில், 2 வாரங்கள் கழித்து 1981,மே 29 அன்று சூங் சிங்-லிங் இறந்தார்.

பெய்ஜிங் பன்னாட்டு சிற்பப் பூங்கா

நாட்டை நேசித்தவரின் நினைவுகளில் நீந்திக்கொண்டே, பெய்ஜிங்கின் புறநகர் பகுதியான ஷிஜிங்ஷன் (Shijingshan) மாவட்டத்துக்குச் சென்று சேர்ந்தேன். இங்குதான், 2002-ம் ஆண்டு ‘பெய்ஜிங், முதல் பன்னாட்டு நகர்ப்புற சிற்பக்கலை கண்காட்சி’ நடந்தது. அதுவே, பெய்ஜிங் பன்னாட்டு சிற்பப் பூங்காவாக மாறியுள்ளது. உலகில் உள்ள சிற்பக் கலைஞர்களின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வளர்த்தெடுக்கவும், சிற்பப் பிரிவில் புதிய படைப்புகள் வருவதை ஊக்கப்படுத்தவும், மக்களுக்கும் கலைகளுக்கு இடையேயும், சீனாவுக்கும் உலக நாடுகளுக்கு இடையேயும் பிணைப்பு ஏற்படவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 30 ஏக்கர் பரப்பளவில் கலாச்சாரம், சூழலியல், இயற்கையின் அழகியல், கலை என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பல்கலைக்கழகமாக விளங்குகிறது.

கிழக்கு நகர்ப்புற மண்டலம், மேற்கு கிராமிய மண்டலம் என அமைந்துள்ள இப்பூங்காவில், கிழக்கு மண்டலத்தில் பட்டம் விடுகிறவர்களையும், வாடகைக்கு மிதிவண்டி வாங்கி ஓட்டுகிறவர்களையும் பார்க்கலாம். மரங்கள் சூழ்ந்த மேற்கு மண்டலத்தில், சீனாவின் பல்வேறு மாகாணங்களும், 40 நாடுகளின் புகழ்பெற்ற சிற்பிகளும் செதுக்கித் தந்த 200-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இருக்கின்றன. 2 மண்டலங்களையும் ‘கலை காட்சிக் கூடம்’ இணைக்கிறது.

இங்குள்ள சிற்பங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று, நிலைத்த சிந்தனை (Concrete): சிற்பத்தைப் பார்க்கும்போதே அது என்ன சொல்கிறது என்பது நேரடியாக நமக்குப் புரியும். மற்றொன்று, உருவிலா எண்ணம் (Abstract): பார்க்கிறவர்களின் கற்பனைத் திறன், உலக ஞானம், சமூகப் புரிதல் அனைத்தின் பயனாக வெவ்வேறு கோணங்களில் சிற்பங்கள் பேசும். விண்மீன்களைப் பார்த்துப் பழகிய நமக்கு, மண்மீன்களைப் பார்க்கும் அனுபவம் தருகின்றன இச்சிற்பங்கள்.

சிற்பத் திடல்

ஒவ்வொரு சிற்பத்துக்கும் அருகில் அதன் பெயர், சிற்பி மற்றும் அவரது நாட்டின் பெயர் பொறித்து வைத்துள்ளார்கள். அதை வாசிக்கும்போதே அந்தந்த நாடுகளின் மீது மரியாதை மலர்கிறது. அதோ அந்தச் சிற்பம், மங்கோலிய நாட்டு சிற்பி ஆங்கலாங் (Amgalang) செதுக்கியது. சிற்பத்தின் பெயர் ‘கானல் நீரில் தெரியும் ஒட்டகம்’. பாலைவனம் பார்த்திராத எனக்கு, பாலைவனக் கப்பலைக் கவிதையாகக் காட்டியிருந்தார் சிற்பி. சிறிது தூரம் நடந்தால், ஸ்வீடன் நாட்டு ரிச்சட் பிரிக்செலின் (Richard Brixel) கல் வண்ணம் தெரிகிறது. தீச்சுவாலையின் மீதேறி, தன்னை மறந்து காற்றில் நடனமாடும் மெய்யியல் அறிஞரின் சிற்பம் அது. கூட்டமாக வரும் மீன்கள் சுவரின் ஒருபுறம் மோதி மறுபுறம் பறவைகளாகப் பறக்கின்றன. அச்சிற்பத்துக்கு ‘இயற்கையின் கண்ணாடி’ எனப் பெயர் வைத்திருக்கிறார் சீன சிற்பி வே ஷயாமிங் (Wei Xiaoming).

3 பெண்கள் கைகளை உயர்த்தி, தங்களின் ஒரு காலை முன்பாகவும் மறுகாலை பின்பாகவும் முழுமையாக நீட்டி விரைந்து ஓடுகிறார்கள். சீன நாட்டு சிற்பி ஹான் மெய்லின் (Han Meilin) செதுக்கிய இந்தச் சிற்பத்தின் தலைப்பு, ‘சூரியனில்’. மேகத்தைப் போர்த்தியுள்ள பெண்ணின் சிற்பத்தை வடித்திருக்கிறார் ரஷ்யாவின் வியாஹெஸ்லாவ் கோவாலன்கோ (Viacheslav KovalenKo). ‘காலை நேரம்’ என்பது அதன் தலைப்பு. பெலாரஸ் சிற்பி விக்டர் கோபன் (Victor Kopaen) தான் செதுக்கிய சிற்பத்துக்கு ‘பேரார்வம்’ எனப் பெயரிட்டுள்ளார். காதலரின் நெஞ்சில் தன் முதுகு சாய்த்து கண்கள் மூடி மோன நிலையில் இருக்கிறாள் காதலி. தலைவியின் தலையுடன் சாய்ந்து தலைவன் தன்னை மறக்கிறான். இயற்கையின் வாசத்தில் தலைவி தன்னை இழக்கிறாள். ‘ஏதேன்’ எனும் படைப்பில் ஆதாம் மற்றும் ஏவாள் இருவரும் எதிரெதிர் திசையைப் பார்த்திருக்க, அவர்களுக்கு நடுவில் ஆப்பிள் பழம் இருக்கிறது. இது சீனாவின் கோ ஸின்காங்க் (Guo Xincong) படைத்தது.

‘தோற்றம்’, ‘பரிணாம வளர்ச்சி’, ‘இலைகளின் கனவு’, ‘வானதூதர்களின் நீரூற்று’, ‘சிம்பொனி’, ‘சூரியனின் நினைவுச் சின்னம்’ எனப் பல்வேறு தலைப்புகளில் சிற்பங்கள் பூங்காவை அலங்கரிக்கின்றன. ‘தாயின் அன்பு’ எனும் அழகிய சிற்பத்தைக் கனடாவைச் சேர்ந்த சிற்பி மா பெங்க் (Ma Peng) உருவாக்கியிருக்கிறார்.

பூங்காவின் மையத்தில் யுலன் மக்னோலியா தோட்டம் (Yulan Magnolia garden) உள்ளது. குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும்போது 9 வகையான, நூற்றுக்கும் மேற்பட்ட மக்னோலியா மரங்கள் பூத்துக் குலுங்கி, வண்ண மழைத் தோரணம் பொழிவதைக் கண்டு இதயம் சிலிர்த்துவிடுகிறது. சுத்தமான காற்றில் நுரையீரல் துடைக்க வருகிறவர்களுக்காக, சிறுவர்களுக்கு விளையாட்டுத் திடல், பெரியவர்களுக்கு உடற்பயிற்சி கருவிகள் இருக்கின்றன. மரங்கள், பூக்கள், சிறுவர்கள், பெரியவர்கள், சிற்பங்கள் அனைத்தையும் ரசித்துவிட்டு, இரவு தங்குமிடம் நோக்கிப் பயணித்தேன்.

(பாதை நீளும்)

கூகுளுக்கு வேலையில்லை

நம்மில் பலரும் பயன்படுத்துகின்ற கூகுள் தேடுபொறிக்கு சீனாவில் அனுமதி இல்லாததால் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா, கூகுள் பிளே, வாட்ஸ்-அப், யூடியூப் என எந்தச் செயலியையும் சீனாவில் நாம் பயன்படுத்த இயலாது. சீனர்கள் அதிகம் பயன்படுத்தும் ‘பைடு’ (Baidu) தேடுபொறி நமக்குப் பயன்படாது. எனவே, சீனாவுக்குச் செல்வதற்கு முன்பாக உங்களுடைய இந்திய அலைபேசி எண்ணுக்கு WeChat செயலியைத் தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். கூடுதலாக, வி.பி.என் (Virtual Private Network) எனப்படும் மெய்நிகர் தனியார் வலைப்பின்னல் செயலியையும் இந்தியாவில் இருக்கும்போதே நிறுவுவது நல்லது. பல்வேறு நாடுகள் இந்தச் செயலியை அங்கீகரித்துள்ளன. இலவசமாகவும், கட்டணமாகவும் இந்தச் செயலி கிடைக்கிறது. நம் தொலைபேசி எங்கே இருக்கிறது என்கிற தகவலை யாருக்கும் சொல்லாது என்றாலும், நாம் சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்தபோது நிறுவனங்கள் அனுப்பிய கடிதங்கள், உரையாடல்கள் அனைத்தும் நம் மின்னஞ்சலில் இருப்பதால் அதைப் பார்ப்பதற்கு வி.பி.என் செயலியை நிறுவுவது மிகுந்த பயனளிக்கும்.

x