கிங் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி - 7


அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி...

பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாகக் கிரிக்கெட் வீரர்களும், அவர்களின் காதல்களும் உள்ளன. அந்தக் காலத்தில் பட்டோடி தொடங்கி, கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களில் சுமார் 75 சதவீதம் பேர் காதல் திருமணம்தான் செய்துள்ளனர். இந்த மன்மதன் அம்பு விராட் கோலியையும் விட்டுவைக்கவில்லை.

கிசுகிசுக்கள்

பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கரைப் பின்பற்றிய விராட் கோலி, காதல் விஷயத்தில் முன்னாள் கேப்டனான பட்டோடியைப் பின்பற்றினார். அவரைப் போலவே, ஆரம்ப காலகட்டங்களில் அடுத்தடுத்துப் பல பெண்களுடன் சேர்த்து கோலி கிசுகிசுக்கப்பட்டார். தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வந்த சாக்‌ஷி அகர்வால், மாடல் அழகியான சாரா ஜேன் தியாஸ், தென்னிந்திய நடிகைகளான சஞ்சனா கல்ராணி, தமன்னா பாட்டியா என்று பலருடன் விராட் கோலி சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், அவர்களைக் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் சில மாதங்களுக்கு மேல் அவை நீடிக்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில், பிரேசில் நாட்டு மாடல் அழகியும், நடிகையுமான இசபெல் லீட்டியுடன் சுமார் 2 ஆண்டுகள் நட்பில் இருந்தார் விராட் கோலி. ஒரு சில இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவந்த இசபெல் லீட்டியை விராட் கோலி திருமணம் செய்துகொள்ளப்போவதாகப் பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அதற்கு ஏற்றார்போல் அவர்களும் பல இடங்களில் இணைந்து காணப்பட்டனர். இருவரும் இணைந்து சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றதாகக்கூட செய்திகள் வெளியாயின. எனினும், 2013-ல் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர்.

முதல் சந்திப்பு

இந்தச் சூழலில்தான் 2013-ல் ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்காகச் சென்றபோது, அனுஷ்காவை முதல் முறையாகச் சந்தித்துள்ளார் விராட் கோலி. அது ஒரு ஷாம்பூ விளம்பரம். படப்பிடிப்புக்கு முதலில் சென்ற விராட் கோலி, அங்கு இருந்தவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்து சிரித்துக்கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் காரில் படப்பிடிப்பு தளத்தில் வந்து இறங்கியுள்ளார் அனுஷ்கா சர்மா.

பாலிவுட் நடிகைகளில் கொஞ்சம் உயரமான நடிகை என்று அனுஷ்காவைச் சொல்லலாம். அன்றைய தினம் படப்பிடிப்புக்கு வந்தபோது உயரமான ஹீல்ஸ் கொண்ட காலணியை அனுஷ்கா அணிந்திருந்ததால், இன்னும் உயரமாகத் தெரிந்தார். அதே நேரத்தில் விராட் கோலி அத்தனை உயரமானவர் கிடையாது. அனுஷ்காவைவிட ஒருசில அங்குலங்கள்தான் உயரமாக இருப்பார். காரில் இருந்து அனுஷ்கா இறங்கியதும், முதலில் அவரது உயரத்தைத்தான் கோலி கவனித்துள்ளார்.

2015-ல் நடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட தருணத்தில், அனுஷ்கா சர்மாவுடன் அளவளாவும் கோலி...

ஏற்கெனவே உயரமான பெண்ணாக இருந்த அனுஷ்கா, மிகப்பெரிய ஹீல்ஸ்களையும் அணிந்திருந்ததால், இன்னும் உயரமாகத் தெரிந்தார். அதனால் அவருக்குப் பக்கத்தில்தான் நின்றால் குள்ளமாகத் தெரிவோமோ என்று விராட் கோலிக்கு மனதில் பட்டுள்ளது. இதனால் ஜாலி மூடில், “இதைவிட உயரமான ஹீல்ஸ் செருப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லையா?” என்று அனுஷ்கா சர்மாவிடம் கேட்டுள்ளார் விராட் கோலி. ஆனால், அவர் எதற்காக அப்படி கேட்கிறார் என்று அனுஷ்காவுக்குப் புரியவில்லை. “என்ன கேட்டீர்கள்?” என்று திரும்பக் கேட்டுள்ளார். முதல் சந்திப்பிலேயே அனுஷ்காவைக் கிண்டலடித்துவிட்டோமோ என்று நினைத்த கோலி, “ஒன்றுமில்லை, சும்மா ஜோக்குக்காகச் சொன்னேன்” என்று பேச்சை மாற்றியுள்ளார். பின்னாளில், தினேஷ் கார்த்திக்குக்கு அளித்த பேட்டி ஒன்றில் இத்தகவலைச் சொல்லியுள்ளார் விராட் கோலி.

இருவருமே மத்தியதரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தங்கள் துறையில் முன்னுக்கு வந்தவர்கள். கோலியின் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கிய 2008-ம் ஆண்டில்தான், அனுஷ்காவின் திரையுலகப் பயணமும் தொடங்கியுள்ளது. இப்படிப் பல விஷயங்களில் தங்களுக்குள் ஒற்றுமை இருந்ததால், இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டது.

அன்றைய ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் ஜாலியாக கோலி பழகிய விதம் அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்துப் போனது. விராட் கோலி, அனுஷ்கா ஆகிய இருவருமே மத்தியதரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தங்கள் துறையில் முன்னுக்கு வந்தவர்கள். விராட் கோலியின் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கிய 2008-ம் ஆண்டில்தான், அனுஷ்காவின் திரையுலகப் பயணமும் தொடங்கியுள்ளது. இப்படிப் பல விஷயங்களில் தங்களுக்குள் ஒற்றுமை இருந்ததால், இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டது. ஒன்றாகச் சேர்ந்து வெளியில் சுற்றத் தொடங்கினர்.

கோபம் கொண்ட கோலி

2014-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பியதும், அனுஷ்காவின் வீட்டுக்கு விராட் கோலி சென்றது மிகப்பெரிய செய்தியானது. இதைத் தொடர்ந்து நியூஸிலாந்துக்கு இந்திய அணி ஆடச் சென்றபோது, விராட் கோலியை உற்சாகப்படுத்துவதற்காக அனுஷ்கா சர்மாவும் நியூஸிலாந்துக்குச் சென்றார். இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்றபோதும் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள டார்லிங் ஹார்பரில் நடந்த நிகழ்ச்சியில், இருவரும் ஒன்றாகப் பங்கேற்றது பலரது புருவங்களை உயர்த்தியது.

2014-ல் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இலங்கைக்கு எதிரான போட்டியில் அரை சதமடித்த கோலி, தனது காதலி அனுஷ்காவுக்கு ‘பிளையிங் கிஸ்’ பறக்கவிடுகிறார்...

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி, யுவராஜ் சிங்கின் திருமணம் என பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று, ‘ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம்’ என்பதை இருவரும் சொல்லாமல் சொன்னார்கள். 2014-ல் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இலங்கைக்கு எதிரான போட்டியில் அரை சதமடித்த பின்னர், பார்வையாளர் பகுதியில் அனுஷ்கா இருந்த இடம் நோக்கி ஒரு ‘பிளையிங் கிஸ்’ பறக்கவிட்டு தனது காதலைப் பகிரங்கப்படுத்தினார் கோலி.

இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த காதலுக்குத் திருஷ்டிப் பரிகாரமாக ஆங்காங்கே சில சிக்கல்களும் எழுந்தன. 2015-ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான அரை இறுதிப் போட்டியைக் காண அனுஷ்காவும் சென்றிருந்தார். இப்போட்டியில் விராட் கோலி குறைந்த ரன்களில் ஆட்டம் இழக்க, ரசிகர்கள் வரிசையில் இருந்துகொண்டு விராட் கோலியின் கவனத்தை அனுஷ்கா திசை திருப்பியதே இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

2016-ல் மும்பையில் நடந்த ‘டி20’ உலகக் கோப்பையிலும் இது மீண்டும் நடந்தது. இப்போட்டியைக் காண அனுஷ்கா செல்ல, குறைந்த ரன்களில் அவுட் ஆனார் கோலி. இதைத் தொடர்ந்து அனுஷ்காவையும் கோலியையும் பலரும் விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் அனுஷ்கா ட்ரோல் செய்யப்பட்டார். இதைப் பார்த்து பொங்கியெழுந்தார் கோலி.

(சனிக்கிழமை சந்திப்போம்)

x