ஏறத்தாழ கடந்த ஒரு மாதமாகவே, தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 1,500 முதல் 1,700-க்குள்ளாகவே தொடர்கிறது. ஆகஸ்ட் 29-ம் தேதி 1,538 ஆக இருந்த பாதிப்பு, செப்டம்பர் 2-ம் தேதி 1,562 ஆகவும், 8-ம் தேதி 1,587 ஆகவும், 15-ம் தேதி 1,658 ஆகவும், 20-ம் தேதி 1,661 ஆகவும் இருந்தது.
இப்படி 1,600-ஐ மையமாக வைத்து கொஞ்சம் குறையும், ஒருசில நாட்களுக்கு 1,600-ஐக் கடந்து கொஞ்சம் கூடும். அப்படித்தான் கடந்த மூன்று நாட்களாக 1,700-ஐக் கடந்து போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது கரோனா பாதிப்பு எண்ணிக்கை. இந்நிலையில், இந்த 1,600 என்பது லட்சுமண ரேகையா, அந்த எண்ணிக்கை கூடவோ குறையவோ கூடாது என்று கரோனாவுக்கு யாரேனும் கட்டுப்பாடு விதித்துள்ளார்களா எனும் கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழுந்துள்ளது.
தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்
திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, நாள் ஒன்றுக்கு சுமார் 36 ஆயிரம் என்ற அளவுக்குக் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தமிழக அரசு விரைவான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, அது கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் வந்திருக்கிறது. அதனால் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தமிழகம் கிட்டத்தட்ட வழக்கம் போலவே இயங்குகிறது என்றே சொல்லலாம்.
மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம்; 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லலாம்; ஐடி நிறுவனங்களூம், அனைத்துத் தொழிற்சாலைகளும் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்; வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம் என்று கட்டுப்பாடுகள் இல்லாமல் தமிழகம் முழு வீச்சில் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஆலயங்கள் திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துகொண்டிருக்கின்றனர், பேருந்துகள் இயக்கப்பட்டு, அதில் பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமானோர் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். திருமணங்களுக்கு 50 பேர் வரை அனுமதி என்றாலும் குறைந்தது 500 பேரிலிருந்து 5,000 பேர் வரையிலும் கலந்துகொள்ளும் திருமணங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து வெகு சில மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்குத் தமிழகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
டாஸ்மாக் கடைகள், மீன்பிடித் தலங்கள், காய்கறிச் சந்தைகள் என்று எங்கெங்கும் மக்கள் கூட்டம். முகக்கவசம் கட்டாயம் என்றாலும் சாலையில் பார்த்தால் 40 சதவீதம் பேர் அதை அணியாமல்தான் செல்கிறார்கள். இன்னொரு 40 சதவீதம் பேர் அதைத் தங்கள் தாடையில் அணிந்துகொண்டிருக்கிறார்கள். மீதமுள்ள 20 சதவீதம் பேரே முறைப்படி மூக்கு, வாயை மறைத்து முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள்.
இப்படி எவ்விதமான கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்படாத நிலையிலும் 1,700 என்கிற எண்ணிக்கைக்குள் அது எப்படி கட்டுப்பட்டு இருக்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஒருவரிடமிருந்து 30 பேர் வரைக்கும் கரோனா வைரஸ் பரவும் என்று சொல்லப்படும் நிலையில் 1,500 பேர் என்ற எண்ணிக்கை அடுத்த 4 நாட்களில் குறைந்தது 5,000 என்ற எண்ணிக்கையை நோக்கி உயர வேண்டும். அது, அடுத்தடுத்து உயர்ந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அவ்வாறு நிகழாமல் தொடர்ந்து இதே எண்ணிக்கையில் இருந்துவருகிறது.
சந்தோஷத்துக்குரியதா, சந்தேகத்துக்குரியதா?
ஒருநாளைக்கு சராசரியாக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அன்றாட அறிக்கைகளில் தமிழக அரசு தெரிவிக்கிறது. மே மாதம் கணக்குப்படி இந்த அளவு பரிசோதனையில் தொற்று பாதிப்புடைய 30,000 பேர் வரை கண்டறியப்பட்டார்கள். தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவந்து 1,600 என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. கட்டுப்பாடுகள் இல்லாமல் மக்கள் ஏறத்தாழ இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இல்லாமல் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது என்பது மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயமா அல்லது சந்தேகப்பட வேண்டிய விஷயமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அதேநேரத்தில் ஆறுதல் அளிக்கும் விதமாக, கரோனாவின் தாக்கம் இப்போது உயிரைப் பறிக்கும் அளவுக்குத் தீவிரமாக இல்லாமல் குறைவான பாதிப்புக்களையே ஏற்படுத்துவதாக அறிந்துகொள்ள முடிகிறது. முன்பு பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1.5 சதவீதம் பேர் மரணமடைந்த நிலையில் இப்போது அது வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 21-ம் தேதியன்று 19 பேர் கரோனாவுக்குப் பலியாகிருந்தனர். அதன்படி பார்த்தால் நோயின் வீரியம் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்றே தெரிகிறது.
குறைந்துவிட்ட பரிசோதனைகள்
தற்போது பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படுவது அவர்களுக்கேகூட தெரிவதில்லை. மற்ற சளி காய்ச்சல் போலவே இதுவும் வந்துவிட்டுச் சென்றுவிடுகிறது. அதனால், அவர்கள் இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனைகளுக்கு வருவதில்லை. மிகத் தீவிரமான உடல் பாதிப்புகள் உள்ளவர்களே பரிசோதனைக்கு வருகிறார்கள். பரிசோதனைகளிலும் முன்புபோல தீவிரம் காட்டப்படுவதில்லை. மருத்துவமனைகளுக்குப் பரிசோதனைகளுக்காக வருகிறவர்களுக்கும், வேறு சிகிச்சைக்காகச் சேர்கிறவர்களுக்கும் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகின்றனவே தவிர, முன்பு போல காய்ச்சல் உள்ள அனைவருக்குமான கட்டாயப் பரிசோதனைகள் இல்லை.
ஆனால், கட்டுப்பாடாக இருப்பதற்கான காரணங்களாக மருத்துவத் துறையினரால் பல்வேறு அம்சங்கள் சொல்லப்படுகின்றன. “மக்களிடம் மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அதனால் நோய் பரவல் விகிதம் குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிக அளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, அதிலிருந்து தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி சமூகத்தில் உருவாகியிருக்கும். அதனாலும் கரோனா தாக்கம் குறைந்திருக்கலாம். முகக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு பரவலாகியிருக்கிறது. இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டுபவர்களே நோய் பரப்பும் காரணியாகவும் இருக்கிறார்கள்” என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,700-க்குள் வருகிறது என்பது நிலையானது அல்ல, குறைவானதும் அல்ல. கேரளாவில் தினமும் 20,000 என வருகிறது என்றால், அது ஏன் என்று கேட்க முடியுமா? அதுபோல இந்திய அளவில் 30,000 என்ற அளவில் இருக்கிறது என்றால் ஏன் அப்படி என்று கேட்க முடியாது. ஒரு மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கலாம். அதேநேரத்தில் இன்னொரு மாநிலத்தில் கூடுதல் எண்ணிக்கை இருக்கலாம். அதுபோலத்தான் நம் மாநிலத்திலும் கோவை, சென்னை, காஞ்சிபுரம், தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்படுகிறது. பல மாவட்டங்களிலும் குறைவாக இருக்கிறது. அதனால் எண்ணிக்கை என்பது 1,500 முதல் 1,700 வரை ஏற்ற இறக்கமாக இருக்கிறது.
ஒருநாளைக்கு 1,50,000 முதல் 1,80,000 வரையிலும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதில் ஒரு சதவீதம் பாதிப்பு உறுதிசெய்யப்படுகிறது. 0.9 ஆக இருந்த பாதிப்பு சதவீதம் தற்போது 1.1 ஆக உயர்ந்துள்ளது. அதனால் ஒரே அளவு எண்ணிக்கை என்பது சரியான கருத்தல்ல. சதவீத அடிப்படையில் மாறுபாடு இருக்கிறது.
ஒரு மாவட்டத்தில் குறைகிறபோது அந்த எண்ணிக்கை அளவுக்கு வேறு மாவட்டத்தில் அதிகமாகிவிடுகிறது. அதனால்தான் மொத்த எண்ணிக்கை அந்த அளவு இருக்கிறது. இதை 1,500-க்கும் கீழே கொண்டுவந்தால்தான், நோய் கட்டுப்பாடாக இருக்கிறது என்ற நிலை உருவாகும். அதைக் கொண்டுவருவதென்பது சவாலாகத்தான் இருக்கிறது. அதனால்தான் மக்களை மேலும் கவனத்துடன் இருக்குமாறு தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம்” என்றார் அவர்.
அரசு நடவடிக்கையோ, மக்கள் விழிப்புணர்வோ, நோய் எதிர்ப்பு சக்தி உருவானதோ... ஏதோ ஒருவகையில் கரோனா கட்டுக்குள் வந்து நாடு சகஜ நிலைக்குத் திரும்பினால் சந்தோஷம் தான்!