உடலைத் தொட்ட போலியோவை உள்ளத்தைத் தொட விடவில்லை!


இக்பால்

நாகர்கோவில் இக்பாலைப் பார்த்தாலே, நமக்குள்ளும் தன்னம்பிக்கை சுடர்விடுகிறது. மாற்றுத்திறனாளியான இவர் தன் கைகளுக்கு செருப்பை மாட்டிக்கொண்டு, தவழ்ந்துவந்து தன் கடையைத் திறக்கிறார். இருசக்கர வாகனத்தை மூன்றுசக்கர வாகனமாக மாற்றும் ஆல்ட்ரேஷன் கடை நடத்திவரும் இக்பால், இந்தத் தொழிலுக்கு வந்ததன் பின்னால் பொதுநோக்கும் இருக்கிறது.

தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளி என்பதாலேயே கல்வி தொடங்கி, பல விஷயங்களிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட இக்பால், தன்னைப் போல் இன்னொருவர் மனம் நோகக் கூடாது என்பதாலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றுசக்கர வாகனம் அமைப்பதைத் தொழிலாகக் கொண்டவர். இப்போது தன் தொழிற்கூடத்தில் இருவருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்திருக்கிறார் இக்பால். பணிகளுக்கு நடுவே ‘காமதேனு’ மின்னிதழுக்காக இக்பாலை சாவகாசமாகச் சந்தித்தேன்.

இளம்பிள்ளை வாதம் தந்த இன்னல்கள்

“நான் பிறந்த ஆறாவது மாதத்தில் எனக்குக் காய்ச்சல் வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துப் போய் ஊசி போட்டார்கள். ஆனாலும் காய்ச்சல் சில நாள்களுக்கு விடவே இல்லை. காய்ச்சல் குறைந்ததும், தொட்டிலிலிருந்து என்னை எடுத்துக் கீழேவிட்டார்களாம். ஆனால், என்னால் தரையில் காலை ஊன்றவே முடியவில்லையாம். எனக்கு விவரம் தெரியாத பருவத்திலேயே அடிக்கடி என் அம்மா இதைச் சொல்லிச் சொல்லி அழுவார். எனக்குப் போலியோ தாக்கியிருப்பதாக டாக்டர்கள் சொன்னதும், என் பெற்றோர் அவர்கள் சக்திக்கு உட்பட்டு பல இடங்களிலும் என்னை அழைத்துச் சென்று வைத்தியம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் ஒரு பலனும் கிட்டவில்லை.

ஆறாம் வகுப்பு படிக்கும்வரை தட்டுத்தடுமாறி நடந்துதான் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். என் உடன்பிறந்தவர்கள் என் புத்தகப் பையையும் சேர்த்து தூக்கிக்கொண்டு வருவார்கள். ப்ளஸ் டூ வரை படித்தேன். அப்போது பள்ளிக்கூடம் போகச் சிரமமாக இருந்ததால் மூன்றுசக்கர சைக்கிள் கேட்டு அரசிடம் விண்ணப்பித்தேன். எனக்கு இடது கால் மடங்கவே செய்யாது. அதனால் எனக்கு மூன்றுசக்கர சைக்கிள் ஓட்ட முடியாது என என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது” என்று தான் கடந்துவந்த கசப்பு அனுபவங்களை நினைவுகூர்ந்தார் இக்பால்.

பொதுநலன் கொண்ட வைராக்கியம்

பள்ளிக்கூடத்துக்குச் செல்வதில் இருந்த இடர்களே, இக்பாலைத் தன்னைப் போல் மாற்றுத்திறனாளிகளின் தடையற்ற நகர்தலுக்கும், இயங்குதலுக்கும் துணை செய்ய வேண்டும் எனப் பாதை காட்டின. இக்பாலின் தந்தை சைக்கிள் மெக்கானிக் என்பதால், அவரிடமிருந்தே இந்தத் தொழிலுக்கான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இப்போது அரசே நேசக்கரம் நீட்டுகிறது. அரசுப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், அன்றைய காலம் அப்படியல்ல. அதைப்பற்றி பேசத் தொடங்கினார் இக்பால்.

“குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாலகிருஷ்ணன் எனும் ஒரு பெரியவர் தொடர்ந்து போராடிவந்தார். அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வினால்தான் குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதையே வந்தது. பள்ளி, கல்லூரிகளில் சேரப்போனால், ‘உன்னால் எப்படி தினமும் வர முடியும்? உன்னால் எப்படி இந்தப் பணியைச் செய்ய முடியும்?’ என்றெல்லாம் சொல்லி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. இடம்பெயர்தலிலும், இடம் கொடுப்பதிலும் இருந்த இந்தக் கஷ்டமே என்னையும் பள்ளிப்படிப்போடு முடக்கிப்போட்டது.

பள்ளிக்கூடத்தில் மாற்றுத்திறனாளிக்கு மரியாதை இல்லாத சூழல் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. கடைசி டெஸ்க்கில் போய் உட்கார வைப்பார்கள். சாதிய ரீதியிலான தீண்டாமையைவிட கடுமையான கஷ்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இருந்தன. இப்போது 50 வயதைக் கடந்த மாற்றுத்திறனாளியிடம் அவரது பள்ளி, கல்லூரி அனுபவங்களைக் கேட்டுப்பாருங்கள். பாதிப்பின் வீரியத்தை உணர்ந்துகொள்ள முடியும். இன்று சமூகப்பார்வை மாறியுள்ளது. அரசும் ஏராளமான சலுகைகளைக் கொடுக்கிறது.

கல்விக்கூடத்துக்கு செல்ல இருந்த சிரமம்தான் என் உயர்கல்விக் கனவைச் சிதைத்தது. வீட்டில் முடங்கியிருந்த தருணங்களில் தொடர்ந்து யோசித்தேன். நம்மைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும். அதையே ஒரு தொழிலாகச் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். அப்படித்தான் இருசக்கர வாகனங்களை மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றுசக்கர வாகனமாக்கும் இந்த கடையைப் போட்டேன். இதுவரை நூற்றுக்கணக்கான வாகனங்களை மூன்றுசக்கர வாகனங்களாக மாற்றியுள்ளேன். பிறரின் துணையில்லாமல் சுயமாக அந்த வாகனங்களை இயக்கி பணிக்கும், கல்விக்கூடத்துக்கும் செல்வோரைப் பார்க்கையில் என் மனதுக்குள் அளவில்லா சந்தோஷம் ஊற்றெடுக்கும்” என்கிறார் இக்பால்.

விடுதலை உணர்வு

அதேநேரம் இந்தக் கனவுகளுக்கு உயிர் கொடுப்பது இக்பாலுக்கு ஒரு நொடியில் நடந்துவிடவில்லை. கடுமையான முயற்சிகளுக்குப் பின்னரே, அதெல்லாம் அவருக்குச் சாத்தியமானது. முதலில் தனக்காகவே ஒரு இருசக்கர வாகனத்தை ஆல்ட்ரேஷன் செய்தார்.

இப்போது இக்பால் இருசக்கர வாகனம் மட்டுமல்லாது, கார்களையும்கூட மாற்றுத்திறனாளிகள் ஓட்டும்வகையில் ஆல்ட்ரேஷன் செய்கிறார். அதைப் பற்றிப் பேசியவர், “ஒருவேளை நான் தொடர்ந்து கல்லூரிக்குப் போய் உயர்கல்வி படித்திருந்தால்கூட இவ்வளவு மன நிம்மதி அடைந்திருப்பேனா எனச் சொல்லத் தெரியவில்லை. இப்போது அந்தளவுக்கு சந்தோஷமாக இருக்கிறேன். காரணம், ‘இத்தனை ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தோம். ஒருவரின் துணையில்லாமல் வெளியிலேயே செல்ல முடியாத சூழலில் தவித்தோம். இப்போது இந்த வாகனத்தில் எங்கள் மனம்போல் சென்றுகொண்டிருக்கிறோம்’ எனப் பல மாற்றுத்திறனாளிகள் என்னிடம் சொல்லும்போது அவர்கள் முகத்தில் படரும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதுதான் என்னை உயிர்ப்புடன் இயங்க வைக்கிறது. லாபநோக்கத்திற்காகச் செய்யும் தொழில் அல்ல இது. இங்கே முழுக்க மனத் திருப்திதான் பிரதானம். அதைத் தாண்டி அன்றாட உழைப்புக்கான சிறிய கூலி கிடைக்கும். என்றாலும் இதில் கிடைக்கும் நிறைவு அளவிடவே முடியாதது” என நெகிழ்ந்தார்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

தமிழகம் மட்டுமல்லாது கேரளம், புதுச்சேரியில் இருந்தும் அதிகமான அழைப்புகள் இக்பாலுக்கு வருகின்றன. அப்படிவரும் அழைப்புகளின் பேரிலும் டூவீலரை, த்ரீவீலராக ஆல்ட்ரேஷன் செய்து கொடுக்கிறார். இக்பாலுக்குக் கல்வி கற்க முடியாத ஏக்கம் இன்னும் இருக்கிறது. அதை அவர் அப்படியே தன் மகன்களிடம் கடத்த, அவரது இருமகன்களுமே இப்போது எம்பிஏ பட்டதாரிகள்.

நிறைவாக நம்மிடம் பேசிய இக்பால், “முடியாது என இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. நாம் வேலை செய்வதற்கு நமது வயதோ, உடல்நிலையோ எப்போதுமே தடையாக இருக்கவே முடியாது. அதனால்தான் முன்னோர்கள், ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்றார்கள். நான் எனது உடலைத் தொட்ட போலியோவை உள்ளத்தைத் தொட விடவில்லை. அதேபோல் என்னைப் பார்த்து, யாரும் இரக்கப்படுவதும் எனக்குப் பிடிக்காது. அதனால் தன்னம்பிக்கையோடு ஓடிக்கொண்டே இருக்கிறேன். மனம் சோர்ந்துபோனால் உடல் முடங்கிவிடும். அதனால்தான் மனதை எப்போதும் ஆரோக்கியமாகவே வைத்திருக்கிறேன்” என்றார்.

கரோனா பெருந்தொற்று காலத்தில், வேலை இழந்த பலரும் மனம் சோர்வுற்று வீட்டுக்குள் முடங்கிக்கொள்வதைப் பார்த்துவருகிறோம். அதற்கு மத்தியில் இக்பால் போன்றவர்கள் நம்பிக்கை ஒளிக்கீற்றைப் படரவிடுகின்றனர் என்றால் அது மிகையாகாது!

x