கல்யாணச் சேலை... உனதாகும் நாளை!


ஆடை வங்கியில் நாசர்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால், ரொக்கத்தில்தான் பல திருமணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதே நிதர்சனம். அதிலும் ஊர் மெச்ச ஆடம்பரமாக நடத்தப்படும் திருமணங்கள் பலவற்றிலும் பெற்றோரின் துயர்மிகு கண்ணீர் கதைகளும் புதைந்திருக்கின்றன. இப்போதெல்லாம் மணப்பெண்களின் திருமண நாள் ஆடை என்பதே பெரும் செலவுபிடிக்கும் அம்சமாக மாறிவிட்ட நிலையில், மணப்பெண்களுக்கு இலவசமாக மணநாள் உடையை வழங்கி அசத்துகிறார், கேரளத்தைச் சேர்ந்த நாசர்!

திருமணம் இரு மனங்களை மட்டும் இணைக்கும் சடங்கு அல்ல. இரு குடும்ப உறவுகளையும் இணைக்கும் நிகழ்வு அது. அதனால்தான் மணநாள் பார்ப்பது தொடங்கி, மணமக்களைத் தேர்ந்தெடுப்பது வரை பார்த்துப் பார்த்துச் செய்கின்றனர். ஒவ்வொரு விஷயத்திலும் குறை நேர்ந்துவிடாமல் இருக்க அத்தனைப் பிரயத்தனப்படுகின்றனர்.

குறிப்பாக, பெண் குழந்தையைப் பெற்றவர்களுக்கு திருமணம் அதிக செலவு பிடிக்கும் சம்பிரதாயம்தான். அதிலும் கேரளத்தில் பெண் வீட்டார் படும்பாட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். இந்தியாவிலேயே அதிக அளவில் வரதட்சணைக் கொடுமைகள் நிறைந்த மாநிலமாக கேரளம் இருக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அம்மாநிலத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான், அண்மையில் ஒருநாள் உண்ணா நோன்பு இருந்தார். அதன்பின்னர் கேரளத்தில், சில ஆக்கபூர்வமான விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசுப் பணியில் இருப்பவர்கள் தங்கள் திருமணத்தின்போது, வரதட்சணை பெறவில்லை என பெண் வீட்டாரிடமிருந்து சான்றிதழ் வாங்கி தங்கள் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரியிலும் வரதட்சணை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தபின்பே மாணவர் சேர்க்கை நடக்கிறது. கோழிக்கோடு பல்கலைக்கழகம், ‘வரதட்சணை பெற்றால் பட்டத்தை ரத்து செய்ய சம்மதிக்கிறோம்’ என மாணவர்களிடம் உறுதிமொழியே எழுதி வாங்க ஆரம்பித்துவிட்டது.

சட்ட ரீதியாக வரதட்சணைக்குத் தடை போட்டுவிட்டாலும், திருமண நாள் செலவு என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாதுதானே!?

ஊரையே அழைத்து கல்யாணப் பந்தி போடுவது தொடங்கி, மணமகளுக்கான உடை, அலங்காரம், புகைப்படம், வீடியோ செலவுகள் என பந்தக்கால் நடுவதில் இருந்து பந்திவரை செலவுகள் வரிசைகட்டும். இவற்றுடன் மணமகளுக்கான ஆடை பெற்றோருக்குப் பெரும் சுமை. இப்படியான சூழலில்தான் மணப்பெண்களின் பெற்றோர்களுக்குப் பேருதவி செய்துவருகிறார் நாசர்.

கேரளத்தின் மலப்புரம் அருகில் உள்ள தூத்தூ கிராமத்தைச் சேர்ந்தவர் நாசர். சிறுவயதில் இருந்தே சமூக அக்கறை கொண்ட இவர், சவுதி அரேபியாவில் வேலை செய்துவந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தவர், கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் மீண்டும் சவுதிக்குச் செல்லவில்லை. கரோனா காலத்தில் தன்னைச் சுற்றியுள்ள பலரும் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படுவதைப் பார்த்து, தன்னால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளைச் செய்தார். ஏழைகளுக்கு வீடுகட்ட நிதியுதவி அளித்தார். இப்படித் தொடங்கிய பயணத்தில் இவரது அடுத்த மைல்கல் தான் ‘ஆடை வங்கித் திட்டம்’ !

அதுகுறித்து சொல்லத் தொடங்கும்போதே நாசருக்குள் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.

“திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான தருணம். அதனால்தான் விளிம்புநிலையில் இருப்போரும் கடன்பட்டேனும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாடிவிடுகின்றனர். கரோனா நேரத்தில் திருமணங்களின் கொண்டாட்டங்கள் சுருங்கிப் போயின. நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்துத் திருமணத்தை நடத்தினர். அரசே திருமணத்திற்கு 10 பேரை மட்டுமே அழைக்க வேண்டும் என உத்தரவு போட்டிருந்ததால், ஆடம்பரத் திருமணச் செலவுகள் இல்லை. ஆனாலும் மணப்பெண்ணுக்கான திருமண உடைச் செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. தங்களது திருமண ஆடை குறித்து ஒவ்வொரு பெண்ணுக்குமே ஒரு கனவு இருக்கிறது. ‘ஆள் பாதி... ஆடை பாதி’ எனப் பெரியவர்கள் சொல்வதைப்போல, மணநாளில் பெண்ணின் அழகை ஆடையும் தீர்மானிக்கிறது. ஆனால், மணநாள் உடைகளின் விலையோ மிக அதிகமாக இருக்கிறது.

அவ்வளவு விலை கொடுத்து வாங்கிய மணநாள் உடையை பெண்கள் அதன்பிறகு அதிகம் உடுத்திக்கொள்வதும் இல்லை. நூற்றில் 90 பெண்கள் தங்கள் மணநாள் உடையை அந்த ஒருநாளைத் தவிர்த்து உடுத்தியிருக்கவே மாட்டார்கள். சொல்லப்போனால் அது ஒரு ஆடம்பர உடை. வெகுசிலர் மட்டும் முகூர்த்தப் பட்டாடையை உணர்வுபூர்வமாக வீட்டில் வைத்து பாதுகாப்பார்கள். மாலையில் வரவேற்பு நேரத்தில் உடுத்தும் ஆடையையெல்லாம் பலரும் மீண்டும் பயன்படுத்துவதே இல்லை” என்கிறார் நாசர்.

இதையெல்லாம் யோசித்தவர் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீட்டிலேயே வைத்திருக்கும் மணநாள் உடைகளைச் சேகரித்து, அதைத் தேவைப்படுவோருக்குக் கொடுத்தால் என்ன என யோசித்தார். அப்படி உதயமானதுதான் ஆடை வங்கித் திட்டம்.

நீங்கள் விரும்பும் மாற்றத்தை உங்களிடமிருந்தே தொடங்குங்கள் என்பார்கள். நாசர் தன் கனவுத் திட்டத்தைத் தன் வீட்டிலிருந்தே தொடங்கினார். அதைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“முதலில் என் மனைவியின் திருமண நாள் ஆடையை வாங்கினேன். தொடர்ந்து, என் சகோதரிகள், உறவுக்காரப் பெண்களின் ஆடைகளையும் கேட்டுவாங்கினேன். எனது ஆடை வங்கித் திட்டத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டுவந்தேன். முதலில் என் வீட்டில் இதற்கென்று சின்னதாக ஒரு அறை ஒதுக்கினேன். இப்போது, எங்கள் தூத்தூ கிராமத்தில் தனியாகவே ஒரு சின்ன அறை எடுத்து இந்த ஆடைவங்கியை விசாலமாக்கிவிட்டேன். இதுவரை 155 பெண்கள் இங்கிருந்து மணநாள் ஆடை பெற்றுச் சென்றிருக்கிறார்கள்” என்கிறார் நாசர்.

முன்பெல்லாம் தூத்தூ கிராமத்தைச் சேர்ந்தவர்களும், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்தோரும்தான் வந்து ஆடைகளை வாங்கிச் சென்றனர். ஆனால், இப்போதெல்லாம் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்தும் நாசரின் ஆடை வங்கியை நோக்கி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

ஒருமுறை ஆடை கொடுத்துவிட்டால் அதைப் பயன்படுத்திய பின்பு திருப்பிக் கொடுக்கவேண்டும் என நாசர் கட்டாயப்படுத்துவதில்லை. அதேநேரம் சிலர் அந்த ஆடையைப் பயன்படுத்திய பின்பு, உலர் சலவை செய்து மடிப்புக் கலையாமல் திருப்பிக் கொடுக்கவும் செய்கின்றனர்.

“இப்போது எனது ஆடை வங்கியில் 636 மணநாள் உடைகள் இருக்கின்றன. இங்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 60 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆடைகள் இருக்கின்றன. அடுத்து இதேபோல் ஏழை மணமகன்கள் பயன்படும்படி அவர்களுக்கும் ஒரு ஆடை வங்கியைத் தொடங்கும் திட்டம் இருக்கிறது. என்னிடமிருந்து ஆடை வாங்கிச் செல்வோர், மணநாளில் மணமக்கள் இந்த ஆடையில் மேடையில் சிரித்தபடி நிற்கும் புகைப்படத்தையும் வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைப்பார்கள். அந்தப் புன்னகை விலைமதிக்க முடியாதது. ஒரு தபால்காரரைப் போல நான் இடையில் இருக்கிறேன் அவ்வளவுதான். இந்த நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்டு தங்களது மணநாள் உடைகளைக் கொடுத்து உதவும் அந்த நல்ல உள்ளங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று சொல்லும் நாசரின் முகத்தில் அத்தனைப் பெருமிதம்!

நாசரைப் போன்றவர்கள் நாடெல்லாம் பல்கிப் பெருகட்டும். ஏழைப் பெண்களின் திருமணம் இனிக்கட்டும்!

x