கிங் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி - 6


தனது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவுடன் கோலி...

இலங்கை அணிக்காக 1980-களில் 21 டெஸ்ட் போட்டிகளிலும், 63 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியவர் ரஞ்சன் மடுகல்லே. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, போட்டி நடுவராகச் செயல்பட்டு வந்தார். கண்டிப்புக்குப் பெயர்போனவராக இருந்த அவரிடம் இருந்து விசாரணைக்கான அழைப்பு வந்ததும் கொஞ்சம் கலங்கிப்போனார் கோலி. விசாரணையின்போது, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தோனி உள்ளிட்ட மூத்த வீரர்கள் முன்தினம் இரவில் அவருக்கு வகுப்பு எடுத்தனர்.

எச்சரிக்கையும் மன்னிப்பும்

அடுத்த நாள் காலையில் விசாரணைக்கு வந்த கோலியிடம், “கிரிக்கெட்டுக்கு மூலாதாரமாக விளங்கும் ரசிகர்களைப் பார்த்து நடுவிரல் காட்டியது தவறுதானே?” என்று கேள்வி எழுப்பினார் ரஞ்சன் மடுகல்லே.

அதற்கு கோலி, “ரசிகர்கள் அளவுக்கு மீறி இந்திய அணியைக் கிண்டலடித்தனர். அதனால் கோபத்தில் ஒரு கணம் என்னை மறந்து அப்படிச் செய்துவிட்டேன். நடந்த சம்பவத்துக்காக வருந்துகிறேன்” என்றார். போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களைப் பார்வையிட்ட ரஞ்சன் மடுகல்லே, நடந்த விஷயத்தில் ரசிகர்களுக்கும் பங்கு இருப்பதை உணர்ந்துகொண்டார். ரசிகர்கள் விராட் கோலியைத் தூண்டியது உண்மை என்பதை அறிந்துகொண்டதாலும், கோலி முதல் முறையாக இதுபோன்ற ஒரு தவறைச் செய்திருந்தார் என்பதாலும், அவரை எச்சரித்து மன்னித்துவிட்டார். விராட் கோலியின் மனபாரம் குறைந்தது. இதுபற்றி பின்னாளில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், “என் அனுபவமின்மையை கருத்தில்கொண்டும், நான் செய்த தவறுக்கு ரசிகர்களும் காரணம் என்பதாலும் ரஞ்சன் மடுகல்லே என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதே நேரத்தில் என்னை எச்சரிக்கை செய்து ஜென்டில்மேனாக நடந்துகொண்டார்” என்றார்.

ஆனால் இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் ஐபிஎல் தொடரின்போது வாங்கடே மைதானத்தில் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டது, கவுதம் காம்பீருடன் சண்டை போட்டது என்று கோலி மீது சர்ச்சைகள் தொடர்ந்தன. ஆனால் அவரது பேட்டில் இருந்து மின்னல் வேகத்தில் ரன்கள் பறந்த காரணத்தால், ரசிகர்கள் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்த நேரத்தில், 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் நடைபெற்றது. 2011-ல் உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியின் தொடர்ச்சியாக, சாம்பியன்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு அடுத்த கோப்பையை பெற்றுத்தந்தார் தோனி. உலகக் கோப்பை வென்றபோது அணியில் இருந்த முக்கிய வீரர்கள் பலரும் இல்லாமல், ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் என்று இளம் படையை வைத்து அவர் இந்தக் கோப்பையை வென்றார். தோனியின் துணை கேப்டனாக இருந்து இந்த தொடரிலும் கோலி முக்கியப் பங்கு வகித்தார்.

ஆசிரியருக்கு மரியாதை

2013 மற்றும் 2014-ம் ஆண்டின் தொடக்கத்திலும் கோலியின் ராஜ்ஜியம் தொடர்ந்தது. வெற்றி மீது வெற்றி தன்னைத் தேடிவந்த சமயத்தில், அதற்குக் காரணமான தனது முதல் குருநாதர் ராஜ்குமார் சர்மாவின் நினைப்பு அவருக்கு வந்தது. தனக்கு கிரிக்கெட்டின் அரிச்சுவடியைக் கற்றுத்தந்த ராஜ்குமார் சர்மாவுக்கு ஏதாவது குருதட்சணை கொடுக்க விராட் கோலி விரும்பினார். அதற்காக 2014-ம் ஆண்டு ஆசிரியர் தினத்தைத் தேர்ந்தெடுத்தார். அன்றைய தினம், தான் டெல்லியில் இருக்க முடியாமல் இருந்த சூழ்நிலையிலும் தனது சார்பாக அண்ணன் விகாஸ் கோலியை பயிற்சியாளரின் வீட்டுக்கு அனுப்பினார்.

ஆசிரியர் தினத்தன்று காலையில், விராட் கோலியின் அண்ணன் தன் வீட்டுக் கதவை தட்டியபோது ராஜ்குமார் சர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன விஷயம்?” என்று ராஜ்குமார் கேட்க, விகாஸ் எதையும் சொல்லாமல், தன் கையில் இருந்த செல்போனை ராஜ்குமாரிடம் கொடுத்தார். செல்போனின் மறுமுனையில் இருந்த விராட் கோலி, “ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்...” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவரது கையில் ஒரு சாவியைத் திணித்தார் விகாஸ் கோலி. அப்போதும் ராஜ்குமார் சர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்தச் சமயத்தில் ராஜ்குமார் சர்மாவை, அவரது வீட்டுக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனார் விகாஸ் கோலி. அங்கு புத்தம் புதிய ஸ்கோடா ராபிட் கார் நின்றுகொண்டு இருந்தது.

“இந்த காரின் சாவியைத்தான் நான் உங்களுக்குக் கொடுத்தேன். கோலி இதை உங்களுக்கு பரிசாகக் கொடுக்குமாறு கூறியிருக்கிறார்” என்று விகாஸ் கோலி சொல்ல, ராஜ்குமார் சர்மாவின் கண்கள் நிறைந்தன. உயர உயரப் பறந்தாலும், தன்னை மறக்காமல் இருக்கும் சீடன் கோலியை மனதுக்குள் வாழ்த்தினார். இந்தச் சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ள ராஜ்குமார் சர்மா, “கோலியின் பரிசைவிட, அவன் என்னை இன்னும் மறக்காமல் ஞாபகம் வைத்துள்ளான் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது” என்கிறார்.

சரிவும் உயர்வும்

எப்படிப்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரருக்கும் ஒரு சரிவு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சரிவுக்காலம் விராட் கோலிக்கும் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டில் மற்ற ஆண்டுகளைப்போல் அவரால் ஒரு கட்டத்தில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. அதிலும் அந்த ஆண்டில் இங்கிலாந்து தொடரில் மிக மோசமான முறையில் பேட்டிங் செய்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சனின் நிரந்தர இரையாகவே மாறினார்.

இந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் ஆடிய விராட் கோலி மொத்தமாகவே 134 ரன்களைத்தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவர் எடுத்த சராசரி ரன்களே 13.40தான். 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6 என ஒவ்வொரு இன்னிங்ஸிலும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தார். கோலியின் கதை அத்தோடு முடிந்தது என்று பலரும் பெட் கட்டினார்கள். அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று சிலர் குரல் எழுப்பினர். ஆனால் இம்முறையும் கேப்டன் தோனி, அவருக்குத் துணையாக இருந்தார். இதன் காரணமாக கோலியின் தலை தப்பியது.

அணியிலிருந்து வெளியேற்றப்படாமல் காக்கப்பட்டாலும் தன்னால் ரன்களைக் குவிக்க முடியாதது கோலிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சச்சினிடம் ஆலோசனை கேட்டார். பேட்டிங் பயிற்சியின்போது பல மணிநேரம் அவருடன் இருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார் சச்சின். விராட் கோலியும் தன் பேட்டிங் பயிற்சிக்கான நேரத்தை இரட்டிப்பாக்கினார்.

இங்கிலாந்தில் விட்டதற்கெல்லாம் சேர்த்து ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் வெளுத்து வாங்கினார். இத்தொடரில், 86.50 என்ற சராசரியுடன் தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். பேட்டிங்கில் விராட் கோலி நடத்திய வேள்வி வெற்றியில் முடிய, கேப்டன் பதவி அவரைத் தேடிவந்தது. டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் கோலியின் வாழ்க்கையில் மற்றொரு வசந்தமும் வீசியது. அந்த வசந்தத்தின் பெயர் - அனுஷ்கா சர்மா!

(சனிக்கிழமை சந்திப்போம்)

x