காஞ்சிபுரம், திருபுவணம் பட்டுப்புடவைகளுக்கு நிகரான தரத்தில் அரியலூர் மாவட்டத்திலும் பட்டு நெசவு நடைபெற்று வருகிறது. இந்த பட்டு பற்றிய தகவல்கள் அதிகம் வெளியுலகிற்கு தெரியாமல் இருப்பதால் அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இப்பட்டினை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் அரியலூர் பட்டு நெசவாளர்களின் வாழ்வதாரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனையறிந்த அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி, அவர்களின் மீது அக்கறை காட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், தேவாமங்கலம், சின்னவளையம், உட்கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், படநிலை, மேலணிக்குழி, செங்குந்தபுரம், கல்லாத்தூர், விளந்தை, கூவாகம், கொடுக்கூர், ராதாபுரம், அகரம், இலையூர், மருதூர், சிறுகளத்தூர், உஞ்சினி, நல்லாம்பாளையம், கோடாலிகருப்பூர், உதயநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த தறியின் மூலமாக பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்து வருகின்றன. உலக தரத்திலான இந்த பட்டுப்புடவைகளின் விலையானது 3,400 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. அதிக விலையிலான பட்டும் கிடைக்கிறது.
இப்படி அரியலூர் மாவட்டத்திலும் பட்டுப்புடவைகள் தயாராகும் விபரம் ஆட்சியர் ரமணசரஸ்வதிக்கு கிடைத்ததும் ஒரு சுவாரசிமான தகவல்தான். அண்மையில் உறவினர் இல்ல விசேஷத்திற்காக பட்டுப்புடவை எடுப்பதற்கு காஞ்சிபுரம் சென்றிருக்கிறார் ஆட்சியர். அங்கு புடவைகளை எடுத்துக் காட்டிய ஊழியர்கள், இது அரியலூர் பட்டு, இது ஜெயங்கொண்டம் பட்டு என்று சொல்லியிருக்கிறார்கள். அப்புடவைகள் ஆட்சியருக்கு மிகவும் பிடித்துவிடவே அரியலூருக்கு மாற்றலாகி வந்தவுடனேயே பட்டு நெசவாளர்கள் குறித்து விசாரித்திருக்கிறார். இந்த சுதந்திர தினத்தன்று அரியலூர் பட்டுப்புடவை அணிந்தே தேசியக்கொடியை ஏற்றிவைத்திருக்கிறார்.
நல்ல தரமான பட்டினை உற்பத்தி செய்யும் அரியலூர் மாவட்ட நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரியலூர் பட்டினை உலகறியச் செய்ய முடிவு செய்த ஆட்சியர். அதற்கான செயலிலும் இறங்கியிருக்கிறார். முதல் கட்டமாக மாவட்டத்தின் இணையதளமான http://ariyalur.nic.in ல் இதற்கான தனிப்பிரிவை இணைத்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரால் தொடங்கிவைக்கப்பட்ட இப்பிரிவில், பட்டுப்புடவைகளின் புகைப்படங்கள், விலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புடவையைக் க்ளிக் செய்தால் பெரிதாகி அதன் விலை, தரம், உற்பத்தியாளர் விபரம் குறித்த தகவல்கள் திரையில் தெரிகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த பட்டுப்புடவைகளை தேர்வு செய்து அதிலுள்ள வாட்ஸ் - அப் எண்ணைத் தொடர்பு கொண்டு அதில் தெரிவிக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி தங்களுக்குண்டான புடவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பனையோலையிலான கைவினைப்பொருட்கள் உட்பட பல கைவினைப் பொருட்களும் இப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றையும் இதே முறையில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இதுதவிர, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இப்பொருட்களை மின் வணிகம் மூலம் விற்பனை செய்ய தனிப்பட்ட செயலி ஒன்றும் விரைவில் உருவாக்கப்பட உள்ளது. அதில் மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களையும் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மகளிர், நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் மற்றும் கைவினைப்பொருட்களின் வடிவமைப்பின் புகைப்படம், தயாரிப்பு குறியீடு, சிறப்பம்சம் மற்றும் அதன் விலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள முடியும். சுலபமாக அப்பொருட்களை வாங்குவதற்கும் இயலும்.
ஆட்சியரின் இந்த அக்கறையான நடவடிக்கையால் தங்களின் பட்டுக்கும், கைவினைப்பொருட்களுக்கும் உலகளாவிய வணிகத்துக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.