கேரளத்தில், தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு வரன் பார்த்து அதன் எஜமானர்கள் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்திருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். அதனால் தான் நல்ல மணமக்களைத் தேர்ந்தெடுக்க மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் ரொம்பவும் மெனக்கிடுகிறார்கள். அப்படித்தான் தம் வீட்டுப் பிள்ளைகளுக்கு இணையாக சிரத்தை எடுத்து, தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு வரன் பார்த்து திருமணம் முடித்துள்ளனர் இரு எஜமானர்கள்.
கேரளத்தின் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது வளர்ப்புச் செல்லமான ஆசிட் என்ற குட்டப்பு நாய்க்கு ஒன்றரை ஆண்டுகளாக வரன் பார்த்து, ஜான்வி என்னும் பெண் நாயை திருமணம் செய்துவைத்திருக்கின்றனர் ஷெல்லி - நிஷா தம்பதியினர். மல்லிகைப்பூவினால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் பட்டாடை உடுத்திய குட்டப்புவுக்கும், ஜான்விக்கும் கல்யாணம் நடைபெற்றது.
மணமேடையிலேயே எலும்புத்துண்டு வடிவத்தில் செய்யப்பட்டிருந்த கேக்கும் வெட்டப்பட்டது. 2 செல்லங்களின் கைகளைபிடித்துக் கொண்டு மாலையும் மாற்றினார்கள்.
இதுகுறித்து குட்டப்புவின் உரிமையாளர் ஷெல்லி கூறுகையில், “எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் எங்கள் வீட்டின் செல்லக்குட்டி குட்டப்பு தான். அவனுக்கு இப்போது 3 வயது. ஒன்றரை வருடமாக வரன் தேடித்தான் எங்க குட்டப்புவுக்கு ஏற்ற ஜோடியாக ஜான்வியைத் தேர்வு செய்தோம். 3 மாதங்களுக்கு முன்பே ஜான்வியை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஆனால், இப்போதுதான் முறைப்படி சொந்த பந்தங்களைக் கூப்பிட்டுத் திருமணம் முடித்துள்ளோம்.
வழக்கமான திருமணத்தைப் போலவே திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டும் செய்தோம். இதற்காகவே ரிசார்ட் ஒன்றும் புக் செய்து வெகுவிமர்சையாகக் கொண்டாடிவிட்டோம். தொடர்ந்து, மணமக்களுக்கு பிடித்த சிக்கன் பிரியாணி, சிக்கன் பொரிப்பு இவைகளையே வந்திருந்த அனைவருக்கும் உணவாகப் பரிமாறினோம்.’’என்றார் அவர்.
கேரளத்தில் கரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கிறது. சாதாரண திருமணங்களுக்கே கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், வசதியானவர்கள் கேளிக்கைக்காக இப்படியான கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் இதற்கு எதிர்க்குரலும் எழும்பியுள்ளது. ஆனால், இன்னும் சிலரோ, ‘இதுபோன்ற சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் தான் வாழ்வை அழகூட்டுகின்றன’ எனவும் பதிவிட்டுள்ளனர்.