‘காளானையும் அசைவத்துல சேர்த்திருங்க எசமான்’


புரட்டாசி மாதம் பிறந்திருக்கிறது. இந்த மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் அசைவ உணவு சாப்பிடமாட்டார்கள். பெரும்பாலான தமிழர்கள் இந்த வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். அதனால், இந்த மாதத்தில் அசைவப் பொருட்களின் விலைகள் கணிசமாக குறையும். உதாரணமாக , ரூ.240 வரை விற்ற கோழிக்கறி தற்போது ரூ.180-க்கு கிடைக்கிறது. ஆயிரம் ரூபாய் வரை விற்ற ஆட்டுக்கறியின் விலை ரூ.700-க்கு இறங்கியிருக்கிறது. மீன்களின் விலையும் கிலோ ரூ.400 என்பதில் இருந்து ரூ.250-க்கு குறைந்திருக்கிறது.

இப்படியிருக்கும்போது, அசைவ உணவுப் பிரியர்கள் காளான் பக்கம் நாடிச் செல்வது அதிகரித்து இருக்கிறது. இதனால், காளான் விலை உயர ஆரம்பித்திருக்கிறது. இதை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் உலவுகின்றன. நடிகர் கருணாஸை வைத்து பதிவிடப்பட்ட ஒரு மீம்ஸ், எல்லா சமூக வலைதளங்களிலும் வைரலாகச் சுற்றி வருகிறது.

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் கருணாஸ் நிற்கிறார். நீதிபதி அவரைப் பார்த்து கேட்பதாக அந்த மீம்ஸ் தொடங்குகிறது.

‘ஆமா உங்க கேஸ் என்ன??

ஐயா... புராட்டாசி மாசம் வீட்டுக்காரி கறி சாப்ட மாட்டா. இந்த மாசம் கொஞ்ச காசு மிச்சம்னு சந்தோஷப் பட்டேனுங்கய்யா..

சரி நல்லதுதானே..!

கறி சாப்பிட வேண்டாம், சாப்பிடவும் கூடாது. அதனால காளான் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னா.

வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே.. அதில் என்ன பிரச்சினை?

காளான் கடைக்காரங்க, இதான் சாக்குனு விலைய கூட்டிட்டாங்க எசமான். 40 ரூபாயாக இருந்ததை 45 ஆக்கி இப்ப 50 ரூபா ஆகிருச்சி.

2 வாங்குனா 100 ஓவா
4 பேரு இருக்கிற வீட்டுல 2 காளான் வாங்குனா, 3 வேளைக்கு சரியா வருமாய்யா?
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம், விரதம் பேர்ல எதுக்கு ஐயா இதெல்லாம்?

சரி இப்ப அதுக்கு நாங்க என்ன பண்றது?

இல்ல, உங்க கால்ல விழுந்து கேக்குறேன் எசமான், பேசாம நீங்க காளானையும் அசைவத்துல சேர்த்துரச் சொல்லி தீர்ப்பு சொல்லிடுங்க ஜட்ஜ் ஐயா...’

என்ற வேண்டுகோளுடன் முடிகிறது அந்த மீம்ஸ். குடும்பத் தலைவனின் பொருளாதார இக்கட்டை உணர்த்துவதாக இருக்கும் இந்த மீம்ஸ், இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

x