அன்று நெய்விளக்கு... இன்று ஆதனூர்!


ஆதனூர் முகாமில் புடவைகள் வழங்கப்படுகிறது

செப்டம்பர் 12-ல் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கு கிராமத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் 300 ரூபாய் மதிப்புள்ள புடவையை பரிசாக அளித்தார் அண்டர்காடு ஆசிரியை வசந்தா. அதைப் போலவே இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமிலும் ஆதனூர் ஊராட்சியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் புடவைகளை வழங்கி மகிழ்வித்திருக்கிறார்.

ஆதனூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்டர்காடு, ஆதனூர் மற்றும் கோயில்தாவு ஆகிய பகுதியிலுள்ள பொதுமக்களில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் (சுமார் 300 பேர்) ஆண், பெண் பேதமின்றி ஊக்கப்பரிசாக புடவையை அளித்தார் வசந்தா.

இந்நிகழ்வில் நாகை மாவட்ட துணை ஆட்சியரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான த.தெய்வநாயகி, பயிற்சி மாவட்ட ஆட்சியர் சௌமியா, வேதாரண்யம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் தொற்றாநோய் தடுப்பு அலுவலர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கரோனாவுக்கு எதிரான போரில் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் பரிசுகளை வழங்கி மக்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியையை அவர்கள் அனைவருமே பாராட்டினர்.

x