சமீபகாலமாக சுகாதார ரீதியாக அடுத்தடுத்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறது கேரளம். ஒருபக்கம் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையாமல் கொடூரம் காட்டி மிரட்டிக்கொண்டிருக்க, கொசுக்களின் மூலம் பரவும் ஜிகா வைரஸும் இன்னொரு பக்கம் நிம்மதியைக் குலைக்கிறது. இதற்கு மத்தியில் கேரளத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட ‘நிபா’ வைரஸ் திடீரென விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்துவந்த சவால்கள்
இந்தியாவிலேயே முதன்முதலில் கரோனா வைரஸ் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டது கேரளத்தில்தான். சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படித்துவந்த கேரள மாணவி ஒருவருக்குத்தான், முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், அப்போதே கேரளம் விழித்துக்கொண்டு கரோனா வைரஸ் தொற்றுப்பரவலைத் தடுப்பதில் சிறப்பாகச் செயலாற்றியது. இதனால், முந்தைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சைலஜா தேசிய அளவில் கவனம் குவித்தார். அவர் அமைச்சராக இருந்த காலத்திலேயே நிபா வைரஸ் தாக்குதலும் தொடங்கியது. அதையும் மிகச் சிறப்பாகவே எதிர்கொண்டார் சைலஜா.
இந்தத் தேர்தலிலும் சைலஜா வென்றிருந்தாலும், ஏற்கெனவே அமைச்சராக இருந்தவர்களுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் இல்லை என இடதுசாரிகள் கட்சி மட்டத்தில் எடுத்த முடிவால், அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. இளையவரான வீணா ஜார்ஜுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் தன் பங்குக்கு, முடிந்தவரை செயலாற்றிவருகிறார். எனினும், சுகாதார ரீதியான அச்சுறுத்தல்கள் அதிகரித்துக்கொண்டே செல்வதுதான் கேரள அரசுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
கேரளத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா பரவல், இப்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. சோதனை செய்யப்படும் 100 பேரில் 11 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்படுகிறது. இந்தச் சூழலில் நிபா வைரஸின் மிரட்டலும் தொடங்கியிருக்கிறது. சூழலைச் சமாளிப்பதில் வீணா ஜார்ஜ் திணறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
முதல் பலி
கேரள மாநிலம், கோழிக்கோடைச் சேர்ந்த 12 வயது சிறுவன் 4 நாட்கள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டான். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுவனுக்கு ஒரு கட்டத்தில் கடுமையான உடல்சோர்வு ஏற்பட்டது. செப்டம்பர் 5-ல் அந்தச் சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.
சிறுவனிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியில் அவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. உடனே அவனது வீட்டைச் சுற்றி, 3 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அடங்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. உயிரிழந்த சிறுவனோடு மிகவும் நெருக்கத்தில் இருந்தவர்கள் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். இதேபோல், அவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், மேலும் 6 பேருக்கு லேசான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
நிபா வைரஸுக்கு எதிரான கேரள அரசின் பணிகளைப் பார்வையிட மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளும், புணேயில் உள்ள தேசிய வைராலஜி துறைப் பேராசிரியர்களும் அம்மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். கரோனா, ஜிகா, நிபா என தொடர்ந்து அச்சுறுத்தும் வைரஸ்களால் கேரளத்தின் பொருளாதாரம் வெகுவாகச் சரிந்துள்ளது. கேரளத்தில் கொடிகட்டிப் பறந்த சுற்றுலாத் தொழில் இப்போது பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
ரம்புட்டான் பழத்தைத் தவிர்க்க வேண்டும்
இந்நிலையில், கேரளத்தின் இன்றைய சூழல் குறித்து, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் ‘காமதேனு’ மின்னிதழுக்காகப் பேசினோம்.
“சில தினங்களுக்கு முன்பு கேரளத்தில் ஜிகா வைரஸ் பரவியது. நெய்யாற்றங்கரையில் ஒரு பெண்மணிக்கு முதன்முதலில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதுமே உஷாரானோம். ஜிகா வைரஸ் சாதாரண மனிதர்களைவிட கர்ப்பிணிகளைத் தாக்கும்போது பேராபத்து ஏற்படுத்தக்கூடியது. காரணம், ஜிகா கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். அதை இரண்டே வாரத்தில் கட்டுப்படுத்திக் காட்டினோம். இப்போது கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளியே இல்லை” என்றவர், நிபா வைரஸ் பரவல் குறித்தும் விளக்கமளித்தார்.
“கடந்த 2018-ம் ஆண்டு முதன்முதலில் கேரளத்தில் நிபா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் நேரடியாக மனிதர்களைத் தாக்கவில்லை. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. அதிலும் 2018-ல், வெளவால்கள் கடித்த மாம்பழத்திலிருந்துதான் இந்த நோய் பரவியது. ஆனால் இந்த முறை நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சிறுவனுக்கு ரம்புட்டான் பழத்திலிருந்துதான் நிபா வைரஸ் பரவியிருக்கிறது. சிறுவனின் குடும்பத்தினர் கொடுத்த தகவலின்படி, கீழே விழுந்த பழங்களைச் சிறுவன் எடுத்துச் சாப்பிடவில்லை. சந்தைக்கு வந்த ரம்புட்டான் பழத்தில்தான் வெளவால் கடித்திருக்கிறது என்று சந்தேகிக்கிறோம். பழந்தின்னி வெளவால் இனமே நிபா வைரஸ் பரவலுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்கள்” என்றார் வீணா ஜார்ஜ்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நிபா வைரஸ் தொற்றின் தொடக்கத்திலேயே அதைக் கட்டுப்படுத்தும் பணியை முடுக்கிவிட்டோம். கேரளம் முழுவதிலும் உள்ள சந்தைகளில், அதிலும் குறிப்பாக, உயிரிழந்த சிறுவனின் அருகமைப் பகுதிகளில் வசிப்பவர்கள் பறவைகளால் கடிக்கப்பட்டிருக்கும் ரம்புட்டான் பழத்தைச் சாப்பிட வேண்டாம் எனவும் அரசு சார்பில் எச்சரிக்கை செய்தோம். கரோனா தொற்றுக்கு வார்டு ஒதுக்கியதைப் போலவே நிபா வைரஸ் தொற்றுக்கும் அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு ஒதுக்கியுள்ளோம்.
தற்போது, பாதி கடித்த நிலையில் கீழே கிடக்கும் பழங்களை சாப்பிட வேண்டாம் என மாநிலம் முழுவதும் மக்களை உஷார் படுத்தியுள்ளோம். குறிப்பாக, மலையோரப் பகுதிகளில் இருப்போர் இதில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறோம். கேரளத்தில் கோவிட் தடுப்பூசிகளும் மிக அதிகளவில் போட்டுவருகிறோம். பழங்குடி மலைகிராமங்களில்கூட நூறு சதவீதத் தடுப்பூசி இலக்கை எட்டியிருக்கிறோம். கரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இருந்தாலும், இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறோம். 2018-ல் நிபா வைரஸ் பாதிப்பால் கேரளத்தில் 17 பேர் உயிரிழந்தார்கள். அதிலிருந்து கற்ற பாடத்தால் நிபாவையும் எதிர்க்கொள்ளும் ஆற்றல் கேரள சுகாதாரத் துறைக்கு இருக்கிறது. நிபா என்னும் இடைக்கால சவாலையும் விரைவிலேயே வெல்வோம்” என்று சொன்னார்.
நிபாவுக்கு மருந்து இல்லை
கேரளத்தில் நிபா வைரஸைக் கட்டுப்படுத்தும்வகையில் 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. வைரஸ்கள் குறித்து தொடர் ஆய்வில் ஈடுபட்ட கேரள சுகாதாரத் துறையினர் இதுகுறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், நிபா வைரஸ் மனித உடலுக்குள் புகுந்த பின்னர், குறைந்தபட்சம் 4-வது நாளிலிருந்து அதிகபட்சம் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். ரத்தம், சிறுநீரிலிருந்து பெறப்படும் மாதிரிகளிலிருந்தும், கரோனா வைரஸைப் போலவே மூக்கு, தொண்டையில் இருந்து பெறப்படும் சளி மாதிரிகளிலிருந்தும் நிபா வைரஸை உறுதிசெய்யலாம். காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு எனக் கரோனா வைரஸ் பாதிப்புக்குரிய அறிகுறிகளே இதிலும் காணப்படும். நிபா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் என்ன குறைபாடு இருக்கிறதோ, அதற்கான மருத்துவம் மட்டுமே பார்க்கப்படுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் மட்டுமல்லாது, பன்றிகளும் நிபா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பழங்களை நன்றாகத் தண்ணீரில் கழுவி அதன்பின்பே உண்ணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைகள் கடித்துப் போட்ட பழங்கள் ருசியாக இருக்கும் என பொதுவாகவே கிராமப் பகுதிகளில் சொல்லப்படுவதுண்டு. அந்த ருசிக்குள் இருக்கும் இந்தப் பேராபத்து குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டியது அவசியம்.
குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளம் எதிர்கொண்டுவரும் இந்த இன்னல்கள் குறித்த விழிப்புணர்வு தமிழகத்திலும் உருவாக வேண்டியது இன்னும் அவசியம்!