கவி மனம், புரட்சிகரச் சிந்தனை, பொதுநல நோக்கு போன்ற அம்சங்களை இயல்பிலேயே கொண்டவர்கள் வாழ்க்கையில் எந்த விதத்திலும் தோற்பதில்லை. இதே சிந்தனைகளைக் கொண்டவர்கள் மணவாழ்வில் இணைந்தால், அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகமும் மாற்றங்களைப் பெறும். இ.எம்.எஸ்.கலைவாணன் - லதா தம்பதியினரின் வாழ்க்கையே அதற்கு உதாரணம்!
சாதி எல்லைகளைத் தகர்த்தவர்கள்
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட கலைவாணன் - லதா தம்பதியினர், தங்களின் வாரிசுகளுக்கும் அதேபாதையில் புரட்சிகரத் திருமணத்தை நடத்தியவர்கள். அன்பு மட்டும்தான் இவர்களது குடும்பத்தின் அடிநாதம். வாழ்க்கைப்பாடுகளின் சுமைகளை வார்த்தைகளில் ஏற்றும் திறன்கொண்ட கவிஞரான கலைவாணன், ’மயிரு’ எனும் பெயரில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்திவருபவர். ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’ எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் பரவலாகக் கவனம் பெற்றவர்!
நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த கலைவாணன், கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த லதாவைக் காதலித்துக் கைப்பிடித்தார். ஆனால், இவர்கள் இருவருக்குமே இது 2-வது திருமணம்தான். அந்தக் காதலுக்குள் ஒரு பொதுநோக்கும் இருந்தது.
அதைப் பற்றிப் பேசத் தொடங்கினார் கலைவாணன். “இப்போது எனக்கு 60 வயது ஆகிறது. எனது வாழ்நாளில் எத்தனையோ வேலைகளைச் செய்திருக்கிறேன். நான் நாகர்கோவில் அலெக்சந்திரா பிரஸ் சாலையில் பிளாட்பாரத்தில் துணி வியாபாரம் செய்துவந்தேன். திருமணம் முடிந்திருந்தாலும் மனைவியைப் பிரிந்து பெரும்போக்கான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். மதுவும், மாதுவுமாகச் சுற்றித் திரிந்துகொண்டிருந்த காலம் அது. ஆனாலும் எனக்குள் பொதுவாழ்வில் நாட்டம் அதிகம். குடிக்காத நாள்களில் ரத்ததானம் செய்வேன். சமூகசேவகி லதாவுக்கு இதெல்லாம் தான் என் மேல் ஈர்ப்பைக் கொடுத்தது” என்று சொல்லிக்கொண்டே மனைவியை நிமிர்ந்து பார்க்கிறார் கலைவாணன்.
கலைவாணன் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார் லதா. “இவர் முன்பெல்லாம் பெருங்குடிகாரர்தான். அன்றைய நாள்களில் மிகவும் மோசமானவராகவும் இருந்தார். ஆனால், இவருக்குள் மிதமிஞ்சிய சமூக அக்கறை இருந்தது. அன்று, அந்தச் சாலையில் நடைமேடையில்தான் கடை போட்டிருந்தார். ஆனால் பெரிய, பெரிய கடை ஓனர்களையெல்லாம் கூட்டு சேர்த்துக்கொண்டு சுதந்திர தினம், குடியரசுத் தினத்திற்கு அந்தச் சாலையில் கொடியேற்றுவார். இதையெல்லாம் பார்த்தபோது, ‘இவர்தான் எனது மீள்வாழ்க்கைக்கு உற்ற துணையாக இருப்பார்’ எனத் தோன்றியது” என்கிறார் லதா.
எதிர்ப்புகளைக் கடந்த இல்லற வாழ்க்கை
ஆனால், ஒரேநாளில் இந்த மாற்றங்கள் நடந்துவிடவில்லை. மிதமிஞ்சிக் குடித்துவிட்டு ஒரு சிமென்ட் கடை வாசலில் விழுந்து கிடந்த கலைவாணனை, ஆட்டோ பிடித்து அழைத்துவந்து அறிவுரை சொல்லிப் படிப்படியாக மாற்றியிருக்கிறார் லதா. பெருங்குடிகாரர், பொறுக்கி என்றெல்லாம் பெயர் எடுத்திருந்த கலைவாணனை மணந்துகொண்டதால், லதாவையும் அதே பார்வையில் பார்த்தனர் கலைவாணன் குடும்பத்தினர். மதம், சாதி மாறி திருமணம் செய்ததால் லதா வீட்டிலும் இவர்களை ஏற்கவில்லை.
கலைவாணனுக்கு வாழ்வில் முன்னேற வேண்டும் எனும் பிடிப்பு லதாவை திருமணம் செய்த பின்பு உருவானது. சென்னையில் சைக்கிளுக்கு டிரைவராக(!) வேலை செய்தது தொடங்கி, கட்டிட வேலை, பெயின்டிங், சலூன் கடை என 57 வேலைகளை இதுவரை செய்திருக்கிறார்.
கடைசியில் தனக்குள்ளும், தன் மனைவிக்குள்ளும் வியாபித்திருக்கும் பொதுச்சேவைக்கு உரமிடும் வகையில் ‘சினேகம் பெற்றோர் இல்லம்’ எனும் முதியோர் இல்லத்தை நடத்தி வருகிறார். வசதியானவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, இல்லாதோருக்கு இலவச சேவை செய்யும் இல்லம் இது.
வீட்டிலேயே சமத்துவபுரம்
திமுக மீது ஆழ்ந்த பிடிப்பு கொண்ட கலைவாணன் - லதா தம்பதியினர், கருணாநிதியின் சமத்துவபுரத்தை வீட்டிலேயே மலரச் செய்தவர்கள்.
அதைப் பற்றி குறிப்பிட்ட கலைவாணன், “நான் நாவிதர் சமூகம். என் மனைவி கிறிஸ்தவ நாடார் சமூகம். எங்களுக்கு 5 மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் 5 பேருக்குத் திருமணம் முடிந்துவிட்டது. இதில் 4 மகன்களுக்குக் காதல் கல்யாணம். கவுண்டர், நாயர், வெள்ளாளர், ஆசாரி என வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த மருமகள்கள் என் வீட்டில் இருக்கிறார்கள்.
மகன்கள் காதலைப் பெண்ணிடம் சொல்வதற்கும் முன்பே எங்களிடம் சொல்லிவிடுவார்கள். என் ஒவ்வொரு மகனும், தன் அன்புக்குரிய பெண்ணிடம் எங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லிவிடுவான். அந்தப் பெண் ஒரு வருடம் எங்கள் குடும்பத்தைக் கண்காணிப்பார். அடிக்கடி இங்கு வருவார். அந்த ஒரு ஆண்டு காலத்தில் சாதி, மதம் கடந்த இந்த சமத்துவ இல்லம் அவருக்குப் பிடித்திருந்தால் மட்டும் திருமணம் நோக்கி நகரலாம். அப்படித்தான் எங்கள் 4 மகன்களுக்கும் திருமணம் நடந்தது.
அதேபோல், என் மகளை சலூன் கடை வைத்திருக்கும் மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக்கொடுத்தேன். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்தபோது, இங்கு 40 ஆயிரம் நாவிதர்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் இப்போது ‘நாவிதர்’ என்னும் அடையாளத்தைப் பலரும் துறந்துவிட்டனர். உண்மையில் சவரத்தொழில் நல்ல தொழில்தான். அதை உயர்வாகக் காட்டவே என் பெண்ணை சலூன் கடை நடத்தும் பையனுக்கு மணம் செய்துகொடுத்தேன். பொதுவாகவே சலூன் கடை வைத்திருப்பவர்கள் மனைவியிடமும், குடும்பத்திடமும் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். வார விடுமுறை நாளை முழுதாகக் குடும்பத்துடன் செலவு செய்வார்கள். ஒருமுறை நானும் சலூன் கடை நடத்தியிருக்கிறேன் என்றாலும், எனக்கு ஒழுங்காக முடிவெட்டத் தெரியாது” என்கிறார்.
காதலுக்கு மரியாதை செய்யும் குடும்பம்
தன் கவிதைத் தொகுப்புக்கும் ‘மயிரு’ என்ற வார்த்தையைக் கொண்டே தலைப்பிட்ட கலைவாணன், “இருபது ஆண்டுகளுக்கு முன்பு மயிரு எனப் பொதுவெளியில் பேச முடியாது. இப்போது நாம் அதையெல்லாம் பேச வேண்டிய நேரத்தில் இருக்கிறோம்” எனச் சொல்கிறார்.
தொடர்ந்து பேசிய லதா, “வீட்டில் 5 திருமணங்களை நடத்திவிட்டோம். மருமகள்களிடம் வரதட்சணையே வாங்கவில்லை. ஒவ்வொருவரின் காதல் கதையுமே சுவாரசியமானது. ஒருமுறை, எங்கள் வீட்டில் காய்த்த பலாப்பழத்தை எங்கள் பெற்றோர் இல்லத்தில் வேலைசெய்த ஒரு அம்மாவுக்கு கொடுத்துவரச் சொல்லி எங்கள் மகன் ஒருவனை அனுப்பினோம். அங்கே போய்வந்தவன் அந்த வீட்டில் இருக்கும் பெண்ணைப் பிடித்திருப்பதாகச் சொன்னான். அடுத்த சில வாரங்களில் அந்தப் பெண்ணையே காதலிப்பதாக எங்களிடம் அறிமுகப்படுத்தினான்.
முதல் இரண்டு மகன்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் வைத்திருந்தோம். அழைப்பிதழைக் கொடுக்க மூன்றாவது மகனோடு நானும், என் வீட்டுக்காரரும் போயிருந்தோம். அப்போது வழியில் ஒரு பெண்ணைப் பார்த்தோம். ‘இந்தப் பெண் நான் வேலைசெய்யும் பள்ளியில்தான் வேலைசெய்கிறாள்’ என எங்கள் மகன் பொதுவாகச் சொன்னான். உடனே என் வீட்டுக்காரரும் , ‘இந்தப் பெண் அழகாக இருக்கிறாள். இவள் நம் வீட்டுக்கு மருமகளாக வந்தால் நன்றாக இருக்கும்’ என யதார்த்தமாகச் சொன்னார். அதையே வாக்காக எடுத்துக்கொண்டு அதே பெண்ணைக் காதலிப்பதாக அழைத்துவந்து நின்றான் மகன்” என்று சொல்லிச் சிரிக்கிறார்.
“முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துட்டேன்...” என்றவாறே மீண்டும் தொடங்கிய கலைவாணன், “இதுபோக குடும்பமாகச் சேர்ந்து இசைக்குழுவும் நடத்துகிறோம். சம்பாத்தியத்தைச் சேமிக்கிற பழக்கம் இல்லை. சொந்தமாக வீடு கட்டுவது இல்லைன்னும் கொள்கை வைத்திருக்கிறேன். உயிரோடு இருக்கும்போதே எழுப்பும் கல்லறைதான் வீடு. அதேமாதிரி வங்கிக் கணக்கிலும் எதுவும் வைத்திருக்கமாட்டேன். இன்சூரன்ஸ் போடும் பழக்கமும் இல்லை. சொத்து, பணம் இருந்துவிட்டால் நம் காலத்திற்குப் பிறகு, பிள்ளைகளிடம் ஒற்றுமை இருக்காது” என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார்.
“கேடுகெட்ட நிலையில் இருந்து மது, மாதுவில் இருந்து... நான் மீண்டுவந்து இன்று பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக இருப்பதைச் சொல்லும் சுயசரிதை நாவலையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘திருடனைப் போல வந்த அடையாளம் தெரியாமல் இறந்துவிடாதே’ என மேத்தா சொல்வதைப்போல், என் அடையாளத்தைப் பதிக்க முற்படுகிறேன்’’ என்று கலைவாணன் சொல்ல, பெருமிதத்துடன் கணவரைப் பார்க்கிறார் லதா.
நல்ல மனம் வாழ்க!