‘குடும்பத்தோடு கட்டாயம் வாங்க!’


அழைப்பிதழ்

தமிழகமெங்கும் நாளை மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருக்கின்றன. இதற்காக அரசின் சார்பில் விரிவான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு பொதுமருத்துவமனை சார்பில், நாளைய சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு மக்களை வரவழைக்க, வித்தியாசமான முறையை தேர்ந்தெடுத் திருக்கிறார்கள். திருமண அழைப்பிதழ் போலவே அழைப்பிதழ் தயார் செய்து, அதை அனைத்து வாட் அப்ஸ் குழுக்கள் மூலம் அனைவருக்கும் அனுப்பி வருகின்றனர்.

மகாத்மா காந்தி மருத்துவமனை

அந்த அழைப்பிதழில் ‘அன்புடையீர் வணக்கம்’ எனத்தொடங்கி, ’நிகழும் மங்களகரமான ஸ்ரீபிலவ வருடம் புரட்டாசி மாதம் 3-ம் நாள் (19.9.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் உங்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மாபெரும் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளது. எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தங்களது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கரோனா தடுப்பூசி திருவிழாவிற்கு வருகை புரிந்து தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி!

இப்படிக்கு முதல்வர்,

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை

திருச்சிராப்பள்ளி’ என்று எழுதப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா

இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா, ”இதுவரை தடுப்பூசி போடாதவர்களை போட்டுக் கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ளும் முதல் 50 நபர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். தடுப்பூசி போட வருகிறவர்களுக்காக அதிர்ஷ்டப் பெட்டி ஒன்றும் வைக்கப்பட உள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் அங்கு தரப்படும் கூப்பன்களை எழுதி அதிர்ஷ்டப் பெட்டியில் போடவேண்டும். அவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிக்கு இரத்த அழுத்தமானி பரிசாக வழங்கப்படும். கரோனா தடுப்பூசி அதிக உறுப்பினர்கள் செலுத்திக் கொள்ளும் சமூகநல அமைப்பு ஒன்று தேர்வு செய்யப்பட்டு அதற்கு பாராட்டு கோப்பை வழங்கப்படும்” என்றார்.

கரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இப்படி அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்தால், நிச்சயம் கரோனாவை வென்றுவிடலாம்.

x