வகுப்புரிமை இட ஒதுக்கீட்டுக்கான முதல் அரசாணை வெளியிடப்பட்டதன் நூற்றாண்டை, திமுக ஆட்சி தற்போது கொண்டாடுகிறது. நீதிக்கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த பனகல் அரசர், பிராமணர் அல்லாதோருக்கும் அரசு வேலைவாய்ப்பில் இடம் கிடைக்கவேண்டும் என்பதற்காக 16.09.1921-ல் வகுப்புரிமை ஆணையை பிறப்பித்தார். அதன் நூற்றாண்டைத்தான் தற்போதைய தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
ஆனால், அது அப்போது செயல்படுத்தப்படவில்லை, அதற்குப் பின்னால் முதல்வராக வந்த சுப்பராயன் ஆட்சியில்தான் புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்தது என்பதைச் சுட்டிக்காட்டும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தமிழரான முதல்வர் சுப்பராயனையும், அவரது அரசில் அமைச்சராக இருந்து ஆணையை நடைமுறைப்படுத்திய முத்தையா முதலியாரையும் தமிழக அரசு மறந்து விட்டதா.. அல்லது மறைத்துவிட்டதா? என்று இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இயக்கத்தின் முகநூல் மற்றும் சுட்டுரையில் எழுதியுள்ளதாவது: ‘நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி சமூக நீதி உரிமைக்காக எடுத்த அந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால், அந்த அரசாணை செயல்படுத்தப் படவில்லை என்ற உண்மையை முதல்வர் ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை. (முரசொலி -17.9.2021)
உண்மையில், வகுப்புரிமைக்குப் புதிய அரசாணை பிறப்பித்து, அதை முதன்முதலில் செயல்படுத்தத் தொடங்கியது தமிழரான முதலமைச்சர் சுப்பராயன் ஆட்சியில்தான். அமைச்சர் முத்தையா முதலியார் தமது துறையில் அதை முதலில் செயல்படுத்தினார். இந்த உண்மையைச் சொல்லி இவர்களுக்குத் தனிச் சிறப்பான பாராட்டை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்க வேண்டும்.
1926-ல், நடந்த சட்டமன்றத் தேர்தலில் பனகல் அரசர் ராமராயநிங்காரின் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் தோற்றுவிட்டது. 21 உறுப்பினர்கள் மட்டுமே நீதிக்கட்சியில் வென்றனர். ஆனால், தனிப்பெரும் கட்சியாய் (காங்கிரசு) சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களில் வென்றிருந்தனர். ஆனாலும் அவர்கள் ஆட்சி அமைக்க மறுத்து விட்டனர். அப்போது சென்னை மாகாண ஆளுநர், கட்சி சார்பற்ற சுயேச்சையான சுப்பராயனை (மோகன் குமாரமங்கலம்-பார்வதி தந்தையார்) ஆட்சி அமைக்க அழைத்தார்.
சுப்பராயன் அமைச்சரவையில் அவருடன் முத்தையா முதலியார், ஏ.ரெங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார், எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். சுப்பராயன் அமைச்சரவைக்கு வலுசேர்க்க ஆளுநர் தனக்கு இருந்த அதிகாரப்படி 34 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்தார். இவர்கள் சுப்பராயன் அமைச்சரவையை ஆதரித்தனர்.
நீதிக்கட்சி சுப்பராயன் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், வாக்கெடுப்பில் அது தோற்றுப்போனது. முத்தையா முதலியார் காங்கிரசுக்காரர். ஆனால், அவர் பிராமண ஆதிக்க எதிர்ப்பாளர். 1916-ல், நீதிக்கட்சி அமைப்பதற்காக நடந்த பிராமணரல்லாதார் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர். எனவே, காங்கிரசு சுயராஜ்ஜிய கட்சியின் முடிவை மீறி, சுப்பராயன் அமைச்சரவையில் முத்தையா முதலியார் சேர்ந்தார்.
சுப்பராயன் அமைச்சரவை 4.11.1927-ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் புதிய வகுப்புரிமை அரசாணையை பிறப்பித்தது. (G.O.M.S.No.1021) இந்தப் புதிய ஆணையை 1928-ல் முத்தையா முதலியார் தமது துறையில் முதல் முதலாகச் செயல்படுத்தினார். (ராமராய நிங்கார் கொண்டுவந்த வகுப்பரிமை ஆணை செயல்பாட்டிற்கு வராமலே காலாவதி ஆகிவிட்டது.)
உண்மையில் வகுப்புரிமை வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டுமானால், சுப்பராயன்- முத்தையா முதலியார் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட அரசாணை எண் 1021 செயலுக்கு வந்ததைத்தான் கொண்டாட வேண்டும்.
சுப்பராயன் அமைச்சரவை 1927-ல் கொண்டு வந்த வகுப்பரிமை இடஒதுக்கீடு விவரம்:
வேலை வாய்ப்பில் வேலை வழங்கப்பட வேண்டிய இடங்கள் மொத்தம் 12 என்று கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த 12-ல், பிராமணர் அல்லாத இந்துகளுக்கு 5 இடம்; பிராமணர்களுக்கு 2 இடம், முகமதியர்களுக்கு 2 இடம்; ஆங்கிலோ இந்தியர் உட்பட கிறித்தவர்களுக்கு 2 இடம்; பட்டியல் வகுப்பார்க்கு 1 இடம்: (மொத்தம் 12 இடம்)
மொத்தம் எத்தனை இடங்கள் வேலைக்கு நிரப்பப்பட்டாலும் மேற்கண்ட விகிதத்தில் நிரப்ப வேண்டும் என்பதே அந்த ஆணை.
1948-ல், அப்போதைய காங்கிரசு முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் புதிதாக, பின் தங்கிய வகுப்பார் என்று ஒரு பிரிவை உருவாக்கி, சுப்பராயன் ஆணையில் திருத்தம் கொண்டுவந்தார். மொத்தம் 12 இடங்கள் என்று இருந்ததை 14 இடங்கள் என்று உயர்த்தி, புதிதாக 2 இடங்களை பின் தங்கிய வகுப்பார்க்கு வழங்கினார் ஓமந்தூரார்.
சுப்பராயன் அமைச்சரவை செயல்படுத்தி, அதில் ஓமந்தூராரல் புதிய சேர்க்கை உருவாக்கப்பட்ட அதே அரசாணை 1021 (G.O.M.S. No. 1021) - ஐத்தான் 1950-ல் உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது.
வகுப்புரிமை பற்றிப் பேசும் போதெல்லாம் திக-வினரும் திமுக-வினரும் பனகல் அரசர், நீதிக்கட்சி என்று பேசுகின்றனர். புதிய ஆணை போட்டு உண்மையில் செயல்படுத்திய முதலமைச்சர் சுப்பராயன் பெயரை அவர்கள் சொல்வதே இல்லை. சுப்பராயன் திராவிடர் அல்லாதவர்; தமிழர் என்பதால் புறக்கணிப்பா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கடலூர் ஏ.சுப்பராயலு பெயர் இருக்கிறது. ஆனால், சுப்பராயன் பெயர் இல்லை. அவர் ஆட்சியில் வகுப்புரிமை ஆணை புதிதாகப் போடப்பட்டு முதல் முதலாக செயல்படுத்தப்பட்ட செய்தியும் இல்லை.
சமூக நீதி உணர்வாளர்கள் வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொண்டு, சமூக நீதிக்கு, வகுப்புரிமைக்கு சுப்பராயன், முத்தையா முதலியார், ஓமந்தூரார் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதே வேளையில், நீதிக்கட்சி வகுப்புரிமைக்காக எடுத்த முன்முயற்சியையும் பாராட்ட வேண்டும்’
இவ்வாறு பெ.மணியரசன் எழுதியுள்ளார்.