விடைபெற்றார் நைட்டி மாமா


நைட்டி மாமா

கேரளம் முழுவதும் ‘நைட்டிமாமா’ என்ற பெயரால் அறியப்பட்ட யெகியா இன்று காலையில் மரணமடைந்தார். காவல்துறையின் அடாவடிக்கு எதிராக நைட்டி, பாதி தலைமுடி, பாதி மீசையுடன் கொள்கைப் பிடிப்போடு வலம் வந்தவர் யெகியா.

கேரளத்தின் கடைக்கல் அருகே உள்ள முக்குன்னம் பகுதியில் ஆர்.எம்.எஸ் என்னும் உணவகத்தை நடத்திவந்தவர் யெகியா. 80 வயதாகும் யெகியாவின் வாழ்க்கையை மையப்படுத்தி 'ஒரு சாயாக்கடைக்காரன்ட பான் கீ பாத்' என்னும் ஆவணப்படத்தை எடுத்திருந்தார் பத்திரிகையாளரான சனு கும்மில். 2018-ம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்படமாக கேரள திரைப்படவிழாவில் இது தேர்வானதோடு, மாநில அரசின் 1 லட்ச ரூபாய் பரிசையும் பெற்றது. பரிசை கேரள முதல்வர் பினராயி விஜயனே வழங்கினார். அப்படி மனம் திறந்து ஒரு டீக்கடைக்காரர் பேச என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு யெகியாவின் வாழ்க்கையே விடை. முன்பொருமுறை காமதேனு நேர்காணலுக்காக யெகியாவை சந்தித்தேன்.

நைட்டியோடும், பாதி மீசை, தலைமுடியோடும் வலம்வருவது ஏன் எனக் கேட்டபோது, ”தள்ளுவண்டிக் கடை போட்டிருந்தேன். தோசையும், கோழிக்கறியும் வியாபாரம். 16 வருசத்துக்கு முன்னாடி ஒருநாளு ரோட்ல நின்னு வியாபாரம் செஞ்சுட்டு இருந்தேன். அந்த வழியாக வந்த எஸ்.ஐ. திடீர்ன்னு கன்னத்துல பளார்ன்னு அறை கொடுத்தார். நான் அப்போ கைலியை மடிச்சுகட்டி இருந்திருக்கேன். ’போலீஸ்காரனை பார்த்தா கைலியை இறக்கி விடணும்ன்னு தெரியாதா?’ன்னு சத்தம் போட்டார். எனக்கு ஒரே அசிங்கம் ஆகிடுச்சு. ஊர்ல இருந்த சொந்தக்காரங்க இனி தள்ளுவண்டிக் கடையை விட்டுவிட்டுக் கடை எடுத்து ஹோட்டல் போட சொன்னாங்க. அப்புறம்தான் சொந்தமாக ஹோட்டல் ஆரம்பிச்சேன்.

ஆனாலும் போலீஸையே கவனிக்காத நான், கைலியை இறக்கி விடாதது அவ்வளவு பெரிய குத்தமான்னு எனக்குள்ள ஒரு கேள்வி துரத்திட்டே இருந்துச்சு. அப்போதான் இனி நைட்டி போட்டுக்குறதுன்னு முடிவெடுத்தேன். நைட்டி போடும்போது மடிச்சு கட்டவே வேண்டாம். ரிலாக்ஸ்டாவும் இருக்கும். அந்த போலீஸ்காரருக்கும்தான் இதனால அசிங்கம். என்னை அடிச்ச எஸ்.ஐ. சக்கரபாணி இப்போ உசுரோடவும் இல்லை. ஆனாலும் இன்னிக்கும் நான் நைட்டிதான் போட்டுக்குறேன். வீட்டுல 12 நைட்டி வைச்சுருக்கேன். ஓணம் தோறும் புதுசா 6 நைட்டி எடுப்பேன். என் கொள்கை பிடிச்சுப்போய் என்னை பார்க்க வர்ற சிலரும் நைட்டி எடுத்துட்டு வந்து தருவாங்க’’ என்று நினைவுகூர்ந்திருந்தார்.

மத்திய அரசு, உயர் மதிப்புடைய பணத்தாள்களை ஒழித்தபோது வரிசையில் நின்று வங்கியில் மயங்கி விழுந்தார் யெகியா. இந்த கோபத்தில் தன்னிடம் இருந்த பழைய ரூபாய் தாள்களை எரிந்துவிட்ட கோபக்காரர். தன் கடையில் மத்திய அரசு புதிதாக அறிவித்த 500, 2000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்திருந்தார். குறைவான கட்டணத்தில் உணவகத்தில் தாராளமாக உணவு வழங்கினார். அதேநேரம் சாப்பாட்டை மிச்சம் வைத்தால் அபராத முறையும் வைத்திருந்தார். தன் வாழ்வின் கடைசி நொடிவரை நைட்டியோடும், தான் கொண்ட கொள்கையோடும் வாழ்ந்து வந்த யெகியா கடந்த சில நாட்களாகவே உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருந்தார். இன்று காலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

x