வாய்த்துடுக்கு தங்கத்துக்கு வாய்ப்பூட்டு!


தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவுக்குத் தாவும் வந்தேறிகளுக்கு, கட்சிப் பதவியிலிருந்து அமைச்சர் பதவி வரைக்கும் கொடுத்து அழகு பார்க்கிறார் மு.க.ஸ்டாலின். இது மாற்றுக் கட்சியினரை வளைக்கும் தந்திரம்தான் என்றாலும் பல இடங்களில் வந்தேறிகளின் ஆதிக்கத்தால், ஏற்கெனவே காலம் காலமாய் கட்சியில் இருப்பவர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கட்சியின் அடித்தளம் கலகலத்துக் கொண்டிருக்கிறது. போடி ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான லட்சுமணன் சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என தவமிருந்தார். ஆனால், அவரை ஒதுக்கிவிட்டு திடீர் வரவான தங்க தமிழ்ச்செல்வனுக்கு சீட் கொடுத்தது தலைமை. இந்த நிலையில், தேர்தலில் தனக்கு எதிராக வேலை பார்த்தார் என்று சொல்லி லட்சுமணனை கட்சியிலிருந்து நீக்க பரிந்துரைக் கடிதம் கொடுத்திருக்கிறாராம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர், “யாரை நீக்க யார் பரிந்துரை செய்வது என்ற விவஸ்தை இல்லையா?” என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்களாம். வாய்த்துடுக்காய் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்று திமுக தலைமையும் தங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருக்கிறதாம். இதையெல்லாம் தெரிந்து தற்காலிகமாக வாய்க்கு பூட்டுப் போட்டிருக்கிறாராம் தங்கம்.

x