ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வீடு, சில சிறிய எந்திரங்கள், ஆர்.எஸ்.ஸ்பிரிட், பாட்டிலிங், பேக்கிங், மிக்சிங் உபகரணங்கள் ஆகியவை இருந்தால் போதும்... ஒரு போலி மதுபான தொழிற்சாலையே ஆரம்பிக்கப்பட்டு விடுகிறது புதுவை மாநிலம் காரைக்காலில்.
காரைக்காலின் பல இடங்களில் போலி மது கன ஜோராக உற்பத்தி செய்யப்பட்டு. தமிழகப் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றது. மீன் வண்டி, ஆம்புலன்ஸ், பால் வண்டி, காய்கறி வண்டி, பார்சல் சர்வீஸ் வண்டிகள் மூலமாக போலி மது பாட்டில்கள் பாதுகாப்பாக கடத்திவரப்பட்டு, தமிழக எல்லை சோதனைச்சாவடிக்கு அப்பால் ஒப்படைக்கப்படுகின்றன. உடனடி ரொக்கமும் கைக்கு வந்து விடுகிறது.
எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் அரசுக்கு வரிகள் எதுவும் கட்டாமல் கொள்ளை லாபம் பார்த்துவிடலாம் என்பதால், இத்தொழிலில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுமே ஈடுபட்டிருக்கின்றனர்.
விழிதீயூர், காக்கமொழி, அன்ன வாசல். நல்லாத்தூர். பூவம், வரிச்சிக்குடி, ஊழியபத்து, அம்பகரத்தூர், நெடுங்காடு, குரும்பாகரம், வாஞ்சூர், போலகம், நிரவி, பேட்டை, அம்மையார் நகர், மானாம்பேட்டை, போலகம், பசும்பொன் நகர் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் போலி மது உற்பத்தி ஆலைகள் இயங்குவதாக இந்த விவரங்களை நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், “இந்த போலி மது ஆலைகளுக்கு தமிழக மாவட்டங்களுக்கு எவ்வளவு சரக்கு தேவை என ஆர்டர்களும் முன்பே தரப்படுகின்றன. விலை குறைவு என்பதால் திருவிழா, திருமணம், கட்சி நிகழ்ச்சிகளில் இம் மது வகைகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு தயாராகும் போலி மது ரகங்களில் 824 வகைகள் இருக்கின்றன. உள்ளூர் சரக்கிலிருந்து பீர், ஒயின், வோட்கா வகைகளும் கிடைக்கிறது. காரைக்கால் மாவட்டத்தைச் சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளில் உள்ள சில டாஸ்மாக் கடைகளிலும் கூட இந்த மது வகைகள் விற்கப்படுகிறது. பண ஆசை, மது ஆசை அதிகமுள்ள இளைஞர்களின் உதவியோடு இந்த போலி மது கடத்தப்படுகிறது.
காரைக்காலிலிருந்து தமிழகப் பகுதிக்குள் மது கடத்தும் கும்பல் நுழைய, 10-க்கும் மேற்பட்ட நுழைவுச் சாலைகள் இருக்கின்றன. ஆனால் தமிழக போலீசார், 6 இடங்களில் மட்டுமே செக் போஸ்ட் அமைத்திருக்கிறார்கள். அதனால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக எளிதாக கள்ள மது கடத்தப்படுகிறது. தமிழக எல்லைக்குள் வண்டி நுழைந்ததும் உடனடியாக பணம் கிடைத்து விடுகிறது. அதனால், புதுச்சேரி - தமிழக செக் போஸ்ட்களை இக்கடத்தல் வாகனங்கள் எளிதாக கடந்து போகின்றன.
இதில் நல்ல வருமானம் கிடைப்பதால், நன்கு படித்த இளைஞர்களே பணத்துக்கு ஆசைப்பட்டு பைக்குகள், கார்களில் போலி மதுவை கடத்துகின்றனர். பலநேரங்களில் காரைக்கால் மாவட்டத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்ட போலீசாரிடம் சிக்கி சிறைக்கும் செல்கின்றனர். இதனால், ஏராளமான குடும்பங்கள் நலிந்துபோயுள்ளன” என்று வேதனைப்படுகின்றனர்.
இதுநாள் வரை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காரைக்கால் மாவட்ட போலீஸார், இப்போது சுறுசுறுப்பாகி உள்ளனர். காரைக்கால் எஸ்.பி-யான வீரவல்லபன், போலி மதுபான தொழிற்சாலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகளில் தீவிரம்காட்டி வருகிறார்.
அவரிடம் இதுகுறித்துப் பேசினோம். “போலி மதுபான தொழிற்சாலையாக எங்கும் இல்லை. சில இடங்களில் பாட்டிலிங் செய்தார்கள். அதையெல்லாம் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 30 இடங்களில் போலி ஆலைகள் இருக்கிறது என்பதெல்லாம் தவறான தகவல். அதுகுறித்த விவரங்களை கொடுத்தால், அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயார்.
கடத்தலில் ஈடுபட்ட ஏராளமான நபர்களையும், வாகனங் களையும் பிடித்து வழக்கு போட்டு வருகிறோம். மதுகடத்தலை முற்றிலுமாக தடுக்கும்வரை எங்களது பணிகள் ஓயாது. காரைக்கால் பகுதி இளைஞர்கள் யாரும் இப்படிப்பட்ட கடத்தலில் ஈடுபடுவதில்லை. தமிழகப் பகுதியில் உள்ளவர்கள் தான் இப்படி செய்கிறார்கள். அதனால் எல்லைகளில் சோதனைகளை கடுமையாக்கி இருக்கிறோம்” என்றார் அவர்.