தருமபுரியில் தங்கையை தோற்கடித்து, கடலூரில் அண்ணனை வெற்றிபெறச் செய்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!


விருத்தாசலம்: வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடலூர் தொகுதி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டு, விஷ்ணுபிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி களமிறங்கினார்.

கடலூர் மக்களவைத் தொகுதியை உள்ளடக்கிய கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 தொகுதிகளில், கடலூர் கிழக்கு மாவட்டத்தை உள்ளடக்கிய கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், எஞ்சிய 4 தொகுதிகளுக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வெ.கணேசனும் தேர்தல் பணிகளை மேற்கொண்டனர்.

அதேபோன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி ஆகிய 3 தொகுதிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளுக்கு அமைச்சர் சிவசங் கரனும் தேர்தல் பணியாற்றினர்.

இதில் கடலூர் மக்களவைத் தொகுதியில் விஷ்ணுபிரசாத் 1,85,896 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறார். சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடலூர் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளான கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகள் கடலூரில் 76,762, குறிஞ்சிப்பாடியில் 86,835, பண்ருட்டியில் 84,693, நெய்வேலியில் 55,219, விருத்தாசலத்தில் 77,115, திட்டக்குடியில் 69,777 வாக்குகளை பெற்றிருந்தார். இதில் அமைச்சர் எம்.ஆர்.கே,பன்னீர்செல்வத்தின் தொகுதியான குறிஞ்சிப்பாடியில் அதிகபட்ச வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று தருமபுரி நட்சத்திர தொகுதியாக மாறிய நிலையில், அங்கு மும்முனைபோட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை யில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த சவுமியா, மாலையில் அரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பின்னடைவை சந்தித்தார்.

தருமபுரியில் 13,525 வாக்குகள் வித்தியாசத்திலும், பாப்பிரெட்டிபட்டியில் 8,374 வாக்குகள் வித்தியாசத்திலும், பென்னாகரத்தில் 11,585 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னணியில் இருந்த வந்த சவுமியா, அரூரில் 38,209 வாக்குகள் வித்தியாசத்தில் மேட்டூரில் 1,559 வாக்குகள் வித்தியாசத்தில், பாலக்கோட்டில் 10,466 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறார்.

இதேபோன்று சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத் தொகுதிகளான அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகள் திருமாவளவனுக்குப் பின்னடவை ஏற்படுத்தியிருந்த போதிலும், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடலூர் கிழக்கு மாவட்டத் தொகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் புவனகிரி ஆகிய 3 தொகுதிகள் தான் திருமாவளவன் அதிகபட்ச வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

இரு நட்சத்திர தொகுதிகளுடன், தனது மாவட்டத்தை உள்ளடக்கிய இரு தொகுதியிலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததோடு, பாமகவின் வலுவான வாக்கு வங்கியாக கருதப்படும் தருமபுரி தொகுதியிலும் தேர்தல் பணியாற்றி திமுக வெற்றிக்கு வியூகம் அமைத்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தேர்தல் பணியையே திமுக தலைமை மிகுந்த கவனத்தில் கொண்டுள்ளதாக பேசப்படுகிறது.

கடலூரில் போட்டியிட்ட அண்ணனை (விஷ்ணு பிரசாத்) வெற்றிபெறச் செய்து, தருமபுரியில் போட்டியிட்ட அவரது தங்கையை (சவுமியா அன்புமணி) தோல்வியடையச் செய்து, சிதம்பரத்தில் திருமாவளவனின் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்துடன் கூடிய வெற்றிக்கும் வழிவகுத்து, தலைமையின் விசுவாசத்துக்குரியவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

x