காந்தி ஜெயந்தி முதல் தொடர் உண்ணாவிரதம்!


கல்லார் காடர்கள்

வால்பாறை, கல்லார் கிராமத்தில் வசிக்கும் பூர்வகுடிகள் காடர்கள். இவர்கள், வரும் காந்திஜெயந்தி முதல் தொடர் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று, ஊர் மூப்பன் நாராயணன், சக்திவேல், கனகராஜ், ராஜலெட்சுமி, பழங்குடி இனத் தலைவர் தங்கசாமி, பழங்குடிகள் உரிமைக்கான செயல்பாட்டாளர் தனராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வால்பாறையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது, காடர் பழங்குடி கிராமம். இவர்கள் இங்கே பூர்வகுடிகளாக தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வருகின்றனர். மொத்தம் 23 குடும்பங்கள் இங்கு உள்ளன. 2018-ம் ஆண்டு பெய்த கடும் மழையில் கிராமத்தின் பெருமளவு வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமுற்றன. இந்த கிராமத்துக்குச் செல்லும் வழி நெடுகிலும் பெருமளவு நிலச்சரிவும் ஏற்பட்டதால் காவல் துறைக்கும், வனத் துறைக்கும் நேரில் சென்று தகவல் அளித்துவிட்டு, ஊரைவிட்டு சற்று மேலே தாய்முடி வரும் வழியில் பாதுகாப்பான இடத்தில் 7 குடிசைகளை அமைத்தனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய வனத் துறையினர், பக்கத்தில் உள்ள தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தங்க வைத்தனர். அப்போது 10 நாட்களில் மாற்று இடம் தருவதாகச் சொன்னவர்கள் 3 ஆண்டுகளாகியும் மாற்று இடம் தரவில்லை. இதனிடையே, பக்கத்தில் தெப்பகுளமேடு என்ற இடத்தில், ஓராண்டுக்கு முன்பு இவர்களுக்காக நில அளவை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்தை தர வனத் துறை சம்மதிக்கவில்லை. இதைக் கண்டித்துதான் இந்த உண்ணாவிரத போராட்ட முடிவை எடுத்துள்ளார்கள்.

இதுகுறித்து ஊர் மூப்பன் நாராயணன் கூறியதாவது:

“எங்கள் கிராமம் இடமலை ஆற்றின் மேலே அந்தரங்கத்தில் தொங்கும் நிலையில் 3 பக்கமும் பள்ளத்தாக்கும், நீர்நிலையும் கொண்டது. ஏற்கெனவே, எங்கள் ஊருக்கு கிழக்குப்புறமும், தெற்குப்புறமும் சுமார் 5 ஏக்கர் நிலத்தை இதுபோன்ற நிலச் சரிவு ஏற்பட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டோம். ஊரின் நடுப்பகுதியிலும், வீட்டின் தளங்களிலும் நில வெடிப்புகளும், சேதமும் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் எங்களது ஊரில் தங்கவே முடியாது. நீரின் இரைச்சல் சத்தமும், எந்நேரத்திலும் இடிந்து விழும் தன்மை உடையதாக உள்ள மண் அமைப்பும் இருப்பதால், இரவில் குழந்தைகள் பெண்கள் யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஊருக்கு செல்வதற்கு பாதையும் இல்லை. இதனால் இருசக்கர வாகனம், மருத்துவ ஆம்புலன்ஸ், உள்ளிட்ட எந்த வண்டியும் கிராமத்திற்கு சென்று வர இயலாது.

3 வருடங்களாக தற்காலிக குடியிருப்பில் அவதிப்பட்டு வருவதால் எங்களுடைய பாரம்பரிய வாழ்வும், சடங்கு, வழிபாட்டு முறைகளும் தடைப்பட்டு உள்ளது. மருத்துவ வசதி பெற முடியாமல் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட ராமராஜ் என்பவர் 2 மாதத்திற்கு முன்னர் இறந்து போனார். திருமணங்கள் ஊரில் நடத்த முடியாமல், அருகே உள்ள கிராமத்தில் 2 திருமணங்களை நடத்தி உள்ளோம். ஒரு சில திருமணம் தடைபட்டும் உள்ளது.

தேயிலை தோட்ட தற்காலிக குடியிருப்பிலும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 வீடுகளும் பழுதான வீடுகளாகவே வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக தெப்பகுள மேடு பகுதியில் எங்களுக்கு இடம் ஒதுக்க முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அதை தரவிடாமல் திட்டமிட்டு அரசையும், எங்களையும் திசை திருப்புகிறது வனத் துறை. ஆகவேதான், நாங்கள் உயிர் வாழும் பொருட்டு எங்கள் தலைமுறைகள், சந்ததியினர் வாழவேண்டி இந்த அறவழிப் போராட்டத்தை நடத்த உள்ளோம்” என்று நாராயணன் தெரிவித்தார்.

x