கோவையில் நட்சத்திர வேட்பாளர்கள் தொடர்ந்து தோற்பது ஏன்? - ஒரு பார்வை


ஆர்.நல்லகண்ணு, கமல், அண்ணாமலை

கோவை: கோவை மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட ஆர்.நல்லகண்ணு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய நட்சத்திர வேட்பாளர்கள் தோற்றது ஏன் என்பது அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு 13 மாதங்களில் கவிழ்ந்த நிலையில், கோவையில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு 1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு செல்வாக்கு மிகுந்த கோவையில் பொதுவாழ்வில் நேர்மையானவர், எளிமையானவர் என அறியப்படும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணு இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் தனித்து போட்டியிட்டார். ஆனால் அதிமுக கூட்டணியில் களம் இறங்கிய வானதி சீனிவாசன் 1728 வாக்கு வித்தியாசத்தில் கமலை தோற்கடித்தார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கூறிவந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடைசி நேரத்தில் கோவை தொகுதியில் களம் இறக்கப்பட்டார். முடிவில், 4.50 லட்சம் வாக்குகள் பெற்று 2-ம் இடத்தையே பிடித்தார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5.68 லட்சம் வாக்குகள் பெற்று எம்.பி. ஆனார்.

கோவை மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வெளியூர்களை சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் தொடர் தோல்வியையே சந்தித்து வருகின்றனர். மாறாக உள்ளூரை சேர்ந்த வேட்பாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். இதனால் வரும் காலங்களில் நட்சத்திர வேட்பாளர்கள் கோவையில் போட்டியிட தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: ஜாதி பின்னணி கொண்ட, ஜாதி பின்னணி ஏதுமில்லாத நட்சத்திர வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் இறங்கி தோற்பது கோவையில் ஆடு புலி ஆட்டமாக தொடர்கிறது.

தேர்தல் அரசியலை பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியில் வசிக்கும் பெரும்பான்மைசமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதான வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் விதிவிலக்கானவர்கள். அவர்கள் யாரை நிறுத்துகிறார்களோ அவர்கள் வெற்றி பெறும் சூழல் இருந்தது. ஆனால் ஆளுமைமிக்க தலைவர்களே, தென்மாவட்டங்கள் மற்றும்மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு தேர்தலில் அதிக வாய்ப்பு வழங்கியது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

ஆர்.நல்லகண்ணு, நடிகர் கமல், அண்ணாமலை ஆகியோர் தேர்தல் களத்தில் அதிகமாக பணியாற்றியும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் உள்ளூர்காரர்கள் என்பதாலும், கட்சியிலும் அடிமட்ட நிலை வரை இணைப்பு இருந்ததாலும் வெற்றிபெற்றுள்ளனர்.எனவே, நட்சத்திர வேட்பாளர்களாக களம் இறங்கினாலும் வெளியூர்காரர்களை கோவை மக்கள் அங்கீகரிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

x