மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலரை உள்ளடக்கிய தமிழினி புலனத்தில் ’அந்த மனசுதான் சார் கடவுள்’ என்ற தலைப்பில் தங்களது அனுபவத்தை பகிர்ந்திருந்தனர். சிறந்தவற்றுக்கு பரிசும் அளிக்கப்பட்டிருந்தது. எந்த மனசெல்லாம் கடவுள் என்று அவற்றிலிருந்து நாமும் சிலவற்றை உணர்வோம்.
தாயும் தந்தையுமானவள் - புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கிராமநிர்வாக அலுவலர் அ. ஈடித் ரேனாவின் பதிவு:
நான் கிராம நிர்வாக அலுவலராக பெருங்களூர் கிராமத்தில் பணிபுரிந்தபோது, சந்தித்த ஒருவர்தான் லட்சுமி. கிராமத்துப் பெண்மணி. எழுதப்படிக்கத் தெரியாதவர். சிறுவயதிலேயே கணவனை இழந்தவர். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். அவரது மகன் மாற்றுத்திறனாளி காது கேட்காது. வாய் பேச இயலாது. தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்ற விரக்தியில் தந்தை வீட்டுக்கே வாழவந்தவருக்கு வந்த இடத்தில் இன்னும் ஓர் இடி. அவரது தம்பியின் மனைவி 2 பிள்ளைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.
தாயை இழந்த அந்த 2 சிறு பிள்ளைகளையும் அரவணைத்துக் கொண்டார்; தம்பிக்கு மறுமணம் செய்து வைத்தார். மறுமணத்தில் குழந்தைகள் பிறந்த பிறகு அவரது மனைவி மூத்த தாரத்து பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள முன்வரவில்லை. மேலும், தந்தையின் குடிப்பழக்கம் காரணமாகவும் இந்தப் பிள்ளைகளுக்கு பொருளாதார ரீதியாகவும் எந்த ஆதரவும் இல்லாமல் போயிற்று.
தான் வறுமையில் இருந்தாலும் வாழவழியின்றி இருந்தாலும் தன் பிள்ளைகளுக்கே சரியான சாப்பாடும் படிப்பும் கொடுக்க இயலாத நிலையிலும் தன் தம்பி பிள்ளைகளை தெருவில் விட்டு விடவில்லை லட்சுமி அம்மாள். மாற்றுத்திறனாளி மகனுக்கு ஏற்ற சிறப்பு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும் அளவுக்கு வசதியோ வாய்ப்போ விழிப்புணர்வோ அவருக்கு இல்லை. சுமாராக படித்த மகளை சிறுவயதிலேயே ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
தம்பியின் பிள்ளைகள் நன்றாக படித்தன. ஆட்டுக்குட்டிகளை மேய்த்து, கிடைத்த கூலி வேலைகளை செய்து பிள்ளைகளின் வயிறு காயாமல் பார்த்துக் கொண்டார். உள்ளூர் அரசு பள்ளியில் பிள்ளைகள் படிப்பு கெடாமல் தொடர வழிவகை செய்தார். பையன் நன்றாகவே படித்து தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தான். அரசுக் கல்லூரியில் மருத்துவம் படித்தாலும் படிக்கும் மாணவனுக்கு பல்வேறு செலவுகள் இருக்கும். கடன ஒடன வாங்கி அத்தைதான் சமாளித்தார்.
கல்வி உதவித்தொகை, கடனுதவி அத்தையின் உதவி என்று படிப்பை தொடர்ந்த அந்த மாணவன் இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தம்பியின் மகளை தனியார் கல்லூரியில் செவிலியர் பயிற்சிக்கும் லெட்சுமியே படிக்க வைத்தார். அவரே நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணமும் செய்து கொடுத்தார். தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் நடுரோட்டில் அநாதைகளாக நிற்க வேண்டிய பிள்ளைகளை இன்றைக்கு மருத்துவராகவும் செவிலியராகவும் ஒரு ஏழை விதவைத் தாய் மாற்றிக் காட்டியிருக்கிறார், என்றால் அந்த மனசு தான் சார் கடவுள்.
பாட்டியின் துக்கம் தீர்த்த மனசுதான் கடவுள் – அரசு மருத்துவர் வீ. சுபாஷ்காந்தியின் பதிவு
நான் அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த நாள் முதல் காலை 7: 25 மணிக்கு மருத்துவமனையில் இருப்பேன். அப்படி மருத்துவமனைக்கு வரும்போது தினமும் அமுல் டீக்கடையில் முருகேசன் தாத்தாவும் இலஞ்சியம் பாட்டியும் உட்கார்ந்து டீ குடிப்பார்கள். நான் அந்தக் கடையை கடக்கும் போதெல்லாம் அவர்கள் எனக்கு கும்பிடு போடுவார்கள். அது எனக்கு சற்று கூச்சமாக இருந்தாலும் பழக்கமாகி விட்டது.
அன்றும் அது போலவே கும்பிட்டார்கள். அன்று எனக்கு 24 மணி நேர டூட்டி. வழக்கம்போல நோயாளிகளைப் பார்த்து வந்தேன். காலை 9 மணி இருக்கும் முருகேசன் தாத்தாவை தூக்கி வந்தனர், உடன் இலஞ்சியம் பாட்டியும் சுருக்குப் பையுடன் வந்தார். முருகேசன் தாத்தா ஆஸ்துமா நோயாளி என்பதால் மூச்சுத்திணறல் அடிக்கடி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருவது வழக்கமானது என்றாலும் இன்று சற்று தீவிரமாக பாதிப்பு இருந்தது தெரிந்தது. அனைத்து மருத்துவ சேவைகளும் அதிவிரைவாக செய்யப்பட்டு உள்நோயாளி வார்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார் தாத்தா
முருகேசன் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது மதியம் 12 மணி போல மீண்டும் வார்டுக்குச் சென்றேன். அப்போது இலஞ்சியம் பாட்டி, சுருக்குப் பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்துக்காட்டினார் வெட்கத்துடன். என்ன பாட்டி யார் இது ?என்றேன். நானும் அவங்களும் கல்யாணமான புதுசுல எடுத்த போட்டோ என்றார். ரெண்டு பேரும் சூப்பரா இருக்கீங்க என்று சொன்னேன். ஒரே சிரிப்பு. அந்த போட்டோவை பேசிக்கொண்டே தாத்தாவின் தலையணைக்கு உள்ளாக சொருகி வைத்தார் பாட்டி.
எனது பணிகளை தொடர்ந்தேன்... இரவு 11 மணி இருக்கும் முருகேசன் தாத்தாவின் உயிர் பிரிந்தது என்று செவிலியர் ஓடி வந்து சொன்னார்.உடனே வார்டுக்கு சென்று பார்த்தேன். பாட்டி கைகளைப் பிடித்துக் கதறினார். ‘நீயும் என்ன சாமி பண்ணுவ அந்த மனுஷனுக்கு ஆயுசு அவ்வளவுதான்' என்றார். நான் தாத்தா உடலை வீட்டுக்கு தூக்கிட்டுப் போறேன். ஆனா ஒரு சின்ன ஆசை சாமி, காலையில் உங்ககிட்ட காட்டின போட்டோவ தலையணை உறை மாத்தும்போது அதுல கொண்டு போயிட்டாங்க... அப்ப நான் டீ வாங்கப் போயிருந்தேன். இப்ப அந்த போட்டோவை நர்சு அம்மாட்ட கேட்டேன். சலவைக்காரர் எடுத்துட்டு போயிட்டாருன்னு சொல்றாங்கப்பா. அந்த போட்டோ கிடைச்சா அதபார்த்துகிட்டே மிச்ச காலத்தையும் கழிச்சுடுவேன் என்றார்.
மருத்துவமனை ஊழியர் மாரிமுத்துவிடம் விபரத்தைச் சொன்னேன். அந்த நேரத்தில் அவர் அலுத்துக்கொள்ளவில்லை. உடனடியாக சலவைக்காரர் வீட்டுக்குப் போய் அவரை எழுப்பி, அழுக்குத்துணிகளையெல்லாம் புரட்டியெடுத்து ஒருவழியாக அந்த போட்டோவை கண்டறிந்து எடுத்துக்கொண்டு, இரவு 12 மணிக்கு திரும்பினார். இலஞ்சியம் பாட்டியிடம் போட்டோவை கொடுத்தேன். அந்த சோகத்திலும் பாட்டி போட்டோவைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்! தாத்தாவின் ஆன்மாவுக்கும், பாட்டியின் துக்கத்துக்கும் ஆறுதல் அளிக்கக்கூடிய அருமருந்தான அந்த போட்டோவை மீட்டுத்தந்த, மருத்துவமனை பணியாளர் மாரிமுத்துவின் அந்த மனசு தான் சார் கடவுள். சில நேரங்களில் மருத்துவம் தோற்றாலும்... மனிதநேயம் தோற்பதில்லை!
பெருச்சாளிக்கும் இறங்கிய பெரியமனது – திரைப்பட நடிகர் ரவிமரியாவின் பதிவு
அவர் ஒரு கான்ஸ்டபிள். எனது மனைவியின் ஊரில் நான் கட்டியிருக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர். பொதுவாகவே பலருக்கும் உதவுவதுதான் அவரது குணம். ஆனால், ஒருநாள் அவர் செய்த காரியம் தான், இப்படியெல்லாம்கூட மனிதர்கள் இருப்பார்களா என்று இன்றும் என்னை கேட்க வைக்கிறது.
அவரது வீட்டில் மரப்பெட்டியில் மாட்டிக்கொண்ட பெருச்சாளியை பெட்டியுடன் கையில் வைத்து நின்றிருந்தார். அவரைச் சுற்றி அவரது பிள்ளைகளும் பக்கத்துவீட்டுக்காரர்களும் நின்றுகொண்டு பார்த்துக்கொண்டு நின்றனர். ஊரில் அப்படித்தான். எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பார்கள். அவரது மனைவி கோணிப்பை ஒன்றை கொண்டு வர, அதில் பெருச்சாளியை போகவிட்டு கப்பென்று கோணியின் வாயை மூடிக்கொண்டார். என்னை பார்த்தவர் "2 மாசமா வீட்டுக்கு பின்னால எல்லா இடத்தையும் நோண்டி வச்சிடுச்சி சார். காம்பவுண்ட் சுவரு வீக்காயிடுமேன்னு ஒரு வாரமாக பெட்டியில தேங்காத் துண்ட வச்சேன். இன்னைக்கு மாட்டிக்கிட்டாரு... இருங்க வந்திர்றேன்." என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்து அதன் மீது பெருச்சாளி இருக்கும் கோணிப்பையை வைத்து கிளம்பிப் போனார்.
10 நிமிடம் கழித்து திரும்பிவந்தார். “சார் பெருச்சாளியை முடிச்சிட்டீங்களா என்றேன்...?” அவரோ மிகவும் யதார்த்த தொணியில் "இல்லையே மலையில் விட்டுட்டு வந்திட்டேன்" என்றார். நான் குழம்பியபடி "விட்டுட்டு வந்தீங்களா... நீங்க கொன்னுருப்பீங்கன்னு நினைச்சேன்" என்றேன். அவரோ, "கொல்றதா, அது என்ன சார் பண்ணிச்சி, பாவத்திலேயே பெரிய பாவம் சாப்பாடு வச்சிக் கொல்றதுதான். நம்ம வீட்ட நாசம் பண்ணி விளையாண்டுக்கிட்டு இருந்துச்சி. தூரமாய் போய் விளையாடுன்னு 2 மைல் தள்ளியிருக்கிற மலையில் விட்டுட்டு வந்துட்டேன். அங்க அது ஜாலியா இருக்கும் சார்"என்று போய்விட்டார்.
நான் மெய்சிலிர்த்துப் போனேன். இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமல்ல மற்ற உயிரினங்களுக்கும் சேர்த்து படைக்கப்பட்டது என்கிற மாபெரும் உண்மையை என்னால் உணரமுடிந்தது. வளர்ப்பு நாய் தவறு செய்தால் கொன்றா விடுவோம். அது போலத்தானே பெருச்சாளியும். அதை மட்டும் ஏன் கொல்லவேண்டும்? இது கடவுள் மனிதனுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. மனிதனே மனிதனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறான். அந்த மனசுதான் சார் கடவுள் .