டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இருப்பதற்கு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இத்தகைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் அவர் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘ராஃபியா ஒரு சிவில் டிஃபென்ஸ் அதிகாரி. அவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு, தொண்டை அறுக்கப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது.
இவர் டெல்லி லாஜ்பத்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றினார். அங்கு நடக்கும் ஊழலை அவர் வெளிக்கொண்டு வராமல் தடுக்கவே இப்படி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தக் கொடூரமான குற்றவாளிகள் உடனடியாக விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு ஆரம்பக் கல்வி முதலே பெண்கள் சமத்துவம், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை ஆகியவை குறித்தும், பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றியும் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும்.
இத்தகைய குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும்.
சமூகம் இதுபோன்ற ஆபத்தான நபர்களை புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும்’
இவ்வாறு ஜோதிமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.