மனநலம் பாதிக்கப்பட்டதால், வீட்டைவிட்டு வெளியேறி மனம் போன போக்கில் சுற்றித் திரிந்த ஜார்கண்ட் மாநில இளைஞரை மீட்டு, அவரது தந்தையிடம் பத்திரமாய் ஒப்படைத்துள்ளனர் திருச்சி ரயில்வே போலீஸார்.
ஜார்கண்ட் மாநிலம், தடா மாவட்ட சிற்றூரைச் சேர்ந்தவர் சுனில்தாஸ். 24 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது. அதனால் தன்னிலை மறந்து வீட்டையும், சொந்த ஊரையும் விட்டு வெளியேறியவர் கால் போனபோக்கில் அலைந்து திரிந்திருக்கிறார்.
இப்படியே அலைந்து திரிந்தவர், ரயில் மூலம் கடந்த வாரம் திருச்சி வந்து சேர்ந்திருக்கிறார். நடைமேடையில் அலைந்து திரிந்த அவரைப் பார்த்த திருச்சி ரயில்வே போலீஸார், அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
சுனில்தாஸிடம் விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பேசினாலும் சில வார்த்தைகளை தெளிவாக பேசியிருக்கிறார். அதில் அவரது மாவட்டத்தையும் சொந்த ஊரையும் தெரிந்துகொண்ட மனநல காப்பகத்தினர், அந்தத் தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்தனர். அதைவைத்து ஜார்கண்ட் மாநில போலீஸாரைத் தொடர்புகொண்ட திருச்சி ரயில்வே போலீஸார், அங்குள்ள சுனில்தாஸின் தந்தை ஹீராலாலை தொடர்புகொண்டு அவரது மகன் இங்கிருக்கும் விஷயத்தை சொல்லி இருக்கின்றனர்.
மகன் கிடைத்துவிட்ட செய்தி கேட்டு மகிழ்ந்த ஹீராலால், தன்னுடன் உறவினர் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொண்டு உடனடியாக திருச்சிக்கு வந்தார். நேற்று மாலை அவரிடம் சுனில்தாஸை திருச்சி ரயில்வே போலீஸார் பத்திரமாக ஒப்படைத்தனர். 8 மாதங்களுக்குப் பிறகு மகனைக் கண்ட ஹீராலால் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
சுனில்தாஸை அவரது தந்தையிடம் ஒப்படைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொண்ட திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் தெய்வேந்திரன், உதவி ஆய்வாளர் செல்வராஜா ஆகியோருக்கு ரயில்வே காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.