இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் தீரட்டும்!


தமிழகத்தின் முகாம்களில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களுக்குப் பல்வேறு உதவிகளை வழங்க அரசு முன்வந்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. அகதிகள் முகாம், இனி ‘இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்’ என அழைக்கப்படும் என்றும் அவர்கள் அநாதைகள் அல்ல என்றும் பேரவையிலேயே அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

புதிய வீடுகள், குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி என 317 கோடி ரூபாய்க்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகளை வரவேற்பதுடன், இன்னும் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

சேறும் சகதியுமான இடங்களில், அடிப்படை வசதிகள் இல்லாத குடியிருப்புகளில்தான் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் இங்குள்ள முகாம்களில் வாழ்கிறார்கள். போதுமான குடிநீர், மின் விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட அவர்களுக்குக் கிட்டுவதில்லை. குடியுரிமை இல்லாததால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடிவதில்லை. கல்வி கற்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அரசு வேலைகளுக்கு வாய்ப்பே இல்லை.

இலங்கைத் தமிழர்கள் குறித்த சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்படாத வரையில், தனியார் துறையிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, பெயின்ட் அடிப்பது, சுண்ணாம்பு அடிப்பது எனக் கூலி வேலைகள்தான் அவர்களுக்குக் கிடைக்கின்றன. முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள், உளவு அமைப்புகளின் அதீத கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பதிவுசெய்துவிட்டு வெளித் தங்கலில் இருக்கும் சிலரைத் தவிர, இந்திய மண்ணில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லி மாளாதவை.

இந்தச் சூழலில் தங்களுக்குக் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் கோரி இலங்கைத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். பெரும்பாலானோர் தமிழகத்திலேயே இருக்க விரும்புகின்றனர். நம் மண்ணில், நம்மை நம்பி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் இந்தக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு முன்வரும் என்று நம்புவோம்!

x