ஹாட் லீக்ஸ்


வானதி சீனிவாசன்

பாஜகவை சமாளிக்க பலே கூட்டு!

வானதி சீனிவாசன் இம்முறை எம்எல்ஏ-வாக இருப்பதால், கோவை மாநகராட்சி தேர்தலில் கூட்டணிக்குள் குடைச்சல் கொடுப்பார் என அதிமுக தலைகள் ஆருடம் கணித்திருக்கிறார்கள். இதனால், பல இடங்களில் இப்போதே திமுகவினருடன் அதிமுகவினர் டீலா நோ டீலா பேசி வருகிறார்கள். கோவை தெற்கு தொகுதிக்குள் வரும் வார்டுகளுக்குள், எக்காரணத்தைக் கொண்டும் பாஜகவுக்கு இடம்கொடுத்துவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கும் அதிமுக, திமுக வட்டச் செயலர்கள், இது தொடர்பாக தங்களுக்குள் சில சமரசங்களையும் செய்துகொள்ள ஆயத்தமாக இருக்கிறார்களாம்.

அதிமுகவை அலறவிடும் அக்கா விஜிலா!

அண்மையில் திமுகவில் ஐக்கியமான அதிமுக முன்னாள் எம்பி-யான விஜிலா சத்யானந்த், நெல்லை மண்டல அதிமுக மகளிர் அணியை ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு இழுக்கும் வகையில் கங்கணம்கட்டி களத்தில் நிற்கிறார். அதன்படி முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமியை இழுத்துப் பார்த்தார்; அவர் நகரவில்லை. அப்படியும் அசராதவர் சங்கரன்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வான முத்துச்செல்விக்கு, சங்கரன்கோவில் சேர்மன் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி திமுகவின் பக்கம் சாய்த்துவிட்டார். இத்தனைக்கும் பரிசாக நெல்லை மேயர் சீட்டைக் கேட்கிறாராம் விஜிலா. இவரது அதிரடிகளைப் பார்த்து அரண்டு போன அதிமுக தலைமை, முன்னாள் அமைச்சர் வளர்மதியை அனுப்பி, நெல்லை மண்டல அதிமுக மகளிரணியைக் கரையாமல் காப்பாற்றும் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறது.

மாநிலங்களவைக்கு மருகமள் சிபாரிசு!

சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியை யார் யாரெல்லாமோ எதிர்பார்த்து காத்திருக்க, முதல்வர் ஸ்டாலினின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தியைப் பிடித்து சீட் வாங்கி வந்தார் முத்துராஜா. அதேபோல் தற்போது, உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா மூலமாக மாநிலங்களவைக்குச் செல்கிறார் புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா. “இப்படி தலைவர் குடும்பத்தில் ஆளாளுக்கு ஒருத்தரைப் பிடிச்சி சீட்டு வாங்கிட்டு வந்துட்டா, காலங்காலமா கட்சிக்கு உழைச்சவனெல்லாம் என்ன பண்றது” என்று புலம்புகிறது புதுக்கோட்டை மாவட்ட திமுக முகாம். அதேநேரம், “வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலமாக கட்சிக்கு ஏகப்பட்ட நிதியை சேகரித்துத் தந்தவர் அப்துல்லா. அவருக்கு இல்லாம வேற யாருக்கு பதவி தருவாங்களாம்” என்று சிலர் தன்னிலை விளக்கமும் தருகிறார்கள்.

சமத்தா இல்லியே சமது!

திருச்சி கிழக்கில் உதயசூரியனில் வென்ற கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜை, வெளியூர்க்காரர் என்று ஆரம்பத்தில் தூற்றினார்கள். அந்தச் சாயலைப் போக்கி, மக்களுக்காக செயலாற்றும் எம்எல்ஏ என்ற பெயரை தனது செயல்பாடுகளால் சீக்கிரமே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் இனிகோ. இவரைப் போலத்தான், மணப்பாறை தொகுதி மமக எம்எல்ஏ-வான அப்துல் சமதுக்கு எதிராகவும் வெளியூர்க்காரர் என்று வில்லங்கம் கிளப்பினார்கள். ஆனால், இனிகோ சம்பாதித்த நற்பெயரை சமதுவால் சம்பாதிக்க முடியவில்லை. தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தைத் திறக்கவே சமதுக்கு 100 நாள் ஆகிவிட்டதாக அலுத்துக் கொள்ளும் மணப்பாறை மக்கள், “மணப்பாறைக்கு ஒரு அரசு கல்லூரியைக்கூட கேட்டுவாங்க முடியாத இவர், இந்தத் தொகுதிக்கு பெருசா என்னத்த சாதிக்கப் போறார்னு தெரியலை” என்கிறார்கள்.

அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்ட மோடி!

இதுவரை மத்திய அமைச்சர்கள், தங்களுக்குத் தோதான அரசு அதிகாரிகளை தங்களுக்கு உதவியாளர்களாக அமர்த்திக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. இந்த வழக்கத்தால் விசுவாச அதிகாரிகளை வைத்துக் கொண்டு, ‘வேண்டிய காரியங்களை’ எல்லாம் வெளியில் தெரியாமல் சாதித்துக் கொண்டார்களாம் சில மத்திய அமைச்சர்கள். இதனால் அரசுக்கு தேவையற்ற சிக்கல் வரலாம் என ஊகித்த பிரதமர் மோடி, அமைச்சர்களுக்கு அழகாய் கடிவாளம் போட்டுவிட்டார். இனிமேல், அமைச்சர்களின் உதவியாளர்களை பிரதமர் அலுவலகமே நியமிக்கும் என்பதே அந்தக் கடிவாளம். கட்டுக்குள் வராத மத்திய அமைச்சர்களை உளவுபார்ப்பதற்கும் வசதியாக இருக்கும் என்பதால், இந்தச் சிறப்பு ஏற்பாடாம்!

ஐயாக்களை விசாரிக்க குழு வந்துருக்காம்!

கே.டி.ராகவனை வில்லங்க வீடியோவில் சிக்க வைத்ததன் பின்னணியில், பாஜகவின் பலமான கைகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள். மத்திய அமைச்சர் ஒருவருடன் அண்மைக்காலமாக மிகவும் நெருக்கமாக இருந்தாராம் ராகவன். இதைத் தாங்கமாட்டாத பாஜக புள்ளிகள், அவரது செல்வாக்கைச் சரிக்கவே இந்த சதிவேலையில் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள். இந்தச் சம்பவத்தையொட்டி பாஜக தேசிய தலைமை, ரகசிய விசாரணை ஒன்றை முடுக்கிவிட்டிருக்கிறது. அது, ராகவனை வீழ்த்தியவர்கள் யார் என்பதைப் பற்றி அல்ல... தமிழக பாஜகவில் இருக்கும் முக்கிய தலைகளில், இன்னும் யார் யாரெல்லாம் வில்லங்க நடவடிக்கையில் ஈடுபட்டு கட்சிக்கு களங்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் முழுமையாக விசாரிக்கவாம்.

திருமணம் திருவண்ணாமலையில் எதற்காக?

தனது மகள் ஜெயஹரினி சம்பந்தப்பட்ட சுபகாரியங்களை திருவண்ணாமலையில் தான் நடத்துவது என, அந்தக் குழந்தை பிறந்தபோதே வேண்டிக் கொண்டாராம் டிடிவி தினகரன். அதன்படி ஒரு வயதில், அண்ணாமலையார் வாசலிலேயே மகளுக்கு காதணி விழாவை நடத்தினார். ஜெயலலிதாவின் மடியில் வைத்துத்தான் ஜெயஹரினிக்கு காதுகுத்தினார்கள். அதேபோல், இப்போது மகளின் திருமணத்தையும் திருவண்ணாமலையில் நடத்த முடிவெடுத்திருக்கிறார் தினகரன். கரோனா முடக்கம் காரணமாக, ஒன்றுக்கு இரண்டு முறை திருமண தேதி தள்ளிவைக்கப் பட்டாலும் திருவண்ணாமலையில் தான் திருமணம் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதன்படி செப்டம்பர் 16-ல், திருவண்ணாமலையில் தினகரன் மகளுக்கு திருமணம் நடக்கிறது. அண்ணாமலையார் கோயிலிலேயே திருமணத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். ஒருவேளை, கரோனா விதிகளைக் காட்டி அனுமதி மறுக்கப்பட்டால் கோயிலுக்கு வெளியே மண்டபத்தில் திருமணத்தை நடத்தும் பிளானிலும் இருக்கிறாராம் தினகரன்.

தப்பிக்கப் பார்க்கும் தாமரை

அதிமுக ஆட்சியில் அதிரடிப் புள்ளியாக வலம் வந்த அரசுக் கொறடா தாமரை ராஜேந்திரன், தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் கூட அவ்வளவாக தலைகாட்டாமல் முடங்கிக்கிடக்கிறார். மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கட்சித் தலைமை கொடுத்து வைத்திருந்த பெருந்தொகை மாயமான விவகாரத்தில், தாமரை மீதும் தலைமைக்கு சந்தேகக் கண் இருந்ததாம். தன்மீதே சந்தேகப்பட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் தாமரை, கட்சி நடவடிக்கைகளை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் காரணம் சொல்கிறார்கள். ஆனால் எதிர்தரப்போ, “அதெல்லாம் ஒன்றுமில்லை... அதிகாரத்தில் இருந்தபோது தாமரையும் ஏகப்பட்ட தகிடு தத்தங்களைச் செய்திருக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடவடிக்கைகள் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வண்டியை நம்ம வீட்டுப் பக்கமும் திருப்பிவிடக் கூடாது என்பதால் தான் தாமரை ராஜேந்திரன் அடக்கி வாசிக்கிறார்” என்கிறார்கள்.

சசிகலா ஆறுதல் சொன்னபோது...

பன்னீர் விட்ட கண்ணீர்!

தனது மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா வந்தபோது, அடக்கமுடியாமல் கண்ணீரைக் கொட்டிவிட்டாராம் ஓபிஎஸ். துண்டால் துடைக்கத் துடைக்க கண்ணீர் நிற்கவில்லையாம். அறைக்குள் இருந்த மீடியாக்களை எல்லாம் வெளியே போகச் சொல்லிவிட்டு, ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்குமாரிடம் மட்டும் தனியாகச் சில வார்த்தைகள் பேசினாராம் சசிகலா. அப்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் உடனிருந்தாராம். அந்த சமயத்தில் பக்கத்து அறையில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தார்கள். சசிகலாவுடன் ஜெயா டிவி எம்டி-யான விவேக் ஜெயராமனும் வந்திருந்தார். இதையெல்லாம் பார்த்துவிட்டு, தென் மாவட்ட நிகழ்ச்சிகளில் இருந்த டிடிவி தினகரனும் புதன் கிழமை இரவு 11.30 மணிக்கே, பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்ஸின் வீட்டுக்கு வந்து அவருக்கு ஆறுதல் சொன்னார். விஜயலட்சுமியின் இறுதி ஊர்வலத்தை, ஜெயா ப்ளஸ் டிவி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

x