பணம் பறிக்கும் பாலியல் மிரட்டல்கள்!


பெருந்தொற்று காலத்தில் கரோனா பரவலுக்கு நிகராக, இணைய வெளியை மையமாகக் கொண்ட பாலியல் மிரட்டல்களும் பணம் பறிப்புகளும் அதிகரித்துள்ளன. தனிநபர் அந்தரங்கத்தைப் பணயமாகக் கொண்ட இந்த ஆபாச மிரட்டல்களில் மிகப்பெரும் அரசியல்-அதிகார-தொழில் போட்டிகளில் தொடங்கி, தனிநபர்களைப் பாதிக்கும் பெருந்தொகை பேரம் வரை சகலமும் அடங்குகின்றன. பாலியல் அந்தரங்கங்களை முன்வைத்து நடக்கும் மெய்நிகர் உலகத்து மங்காத்தா ஆட்டங்களில், சாமானியர் அறிந்துகொள்வதற்கும் விஷயங்கள் உண்டு.

வீறுகண்ட ஆபாச சாகரம்

கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பெருந்தொற்றுப் பரவலின் பிடியில் சிக்குண்டு, பெரும்பாலான தொழில் துறைகள் நொடித்துப் போனது கண்கூடு. இவற்றின் மத்தியில் முடக்க காலத்தைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டிய ஒரு துறை(!) உண்டெனில், அது ஆபாச வலைதள உலகம் மட்டும்தான். உலகம் முழுவதும், ஆபாசத்துக்கு என்றே சுமார் 3 கோடி வலைதளங்கள் இயங்குகின்றன. இவற்றின் சர்வதேசச் சந்தை மதிப்பு 65 லட்சம் கோடி ரூபாய் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

இந்திய அளவில் ஆபாசச் சந்தையின் மதிப்பு பெருந்தொற்றுக்கு முன்பு 3,500 கோடி ரூபாயாக இருந்தது, ஆபாச ஓடிடி-கள் வரவால், 2 ஆண்டுகளுக்குள் இது 10,800 கோடி ரூபாயாக எகிறியிருக்கிறது. 2030-ல் இதன் மதிப்பு 90,000 கோடியாக மாறும் என்றும் கணித்திருக்கிறார்கள். வெளியுலகு அறியாத ’டார்க் வெப்’ உலகத்தின் ஆழத்தில் புரளும் கோடிகள் தனி.

அதிகரிக்கும் பாலியல் மிரட்டல்கள்

இந்தப் பெருந்தொற்று காலத்தில், சத்தமில்லாது இன்னொரு அபாயமும் இவற்றின் மத்தியிலிருந்து தலையெடுத்தது. வழியை மறித்து மிரட்டிப் பணம் பறிப்பதை ‘எக்ஸ்டார்ஷன்’ (Extortion) என்பார்கள். அந்த வகையில் தனிநபரின் அந்தரங்கப் பதிவுகளை முன்வைத்து அதேபோல மிரட்டிப் பணம் பறிப்பதையோ, பாலியல் இச்சைகளுக்கு இணங்க கட்டாயப்படுத்துவதையோ குறிப்பதற்கு ‘செக்ஸ்டார்ஷன்’ (Sextortion) என்ற பதம் பிரபலமாகியிருக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு விளக்கம் தந்திருக்கும் இன்டர்போல், போதைப் பொருள் விற்பனைக்கு அடுத்தபடியாக கிரிப்டோ கரன்சி அதிகம் புரள்வது ‘செக்ஸ்டார்ஷன்’ மூலமே என எச்சரிக்கிறது.

மொபைல் போன், கம்ப்யூட்டர் என இணைய இணைப்பு கொண்ட மின்னணு சாதனங்கள் வழியாக ஊடுருவி அந்தரங்கப் பதிவுகளைக் களவாடும் கும்பல், பின்னர் பொதுவெளியில் அவற்றை வெளியிடப் போவதாக மிரட்டிப் பணம் பறிக்கும். கடந்த வருடங்களில் பிரபலமான ’ராண்ட்சம் வேர்’ என்ற மெய்நிகர் உலகத்து மிரட்டல்களில் வெளியில் சொல்லமுடியாத பலவும் இந்த ‘செக்ஸ்டார்ஷ’னில் சேரும். அது மட்டுமல்ல, மொபைல் மற்றும் கணினியில் அந்தரங்கப் பதிவுகளைச் சேமிக்காதவர்களும் இந்தப் பாலியல் மிரட்டல்களுக்கு ஆளாகின்றனர். ஆபாச தளங்களின் வழியாக இவர்களுக்கான பொறிகள் வைக்கப்படுகின்றன.

பிளாக் மிர்ரர் வலைத்தொடரில்...

அந்தரங்கம் விற்பனைக்கு

‘செக்ஸ்டார்ஷன்’ பயங்கரத்தின் வீரியத்தை உணர, நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘பிளாக் மிர்ரர்’ என்ற அறிவியல் புதின வலைத்தொடரின் S3:E3 அத்தியாயம் உதவும். பதின்மத்தின் தடுமாற்றங்களோடு வாழ்பவன் கென்னி. ஒரு நாள், வழக்கம்போல தனது லேப்டாப்பைத் திறந்து ஆபாச தளமொன்றில் சஞ்சரித்தபடி அந்தரங்க தினவைத் தணித்துக் கொள்கிறான். அவனது மடிக்கணினியில் ஊடுருவும் ‘மால்வேர்’ ஒன்று, கேமரா உட்பட ஒட்டுமொத்த லகானையும் எங்கோ இருக்கும் அநாமதேயர்களிடம் ஒப்படைக்கிறது. இப்படிப் பதிவான கென்னியின் அந்தரங்க சேட்டைகள் அடங்கிய வீடியோவை அவனுக்கே அனுப்பி, ‘சொல்வதைக் கேட்கிறாயா அல்லது இந்த வீடியோவை எல்லோருக்கும் அனுப்பட்டுமா?’ என்று மிரட்டல் படலத்தை அவர்கள் ஆரம்பிக்கிறார்கள். அவமானத்தில் குமையும் கென்னி அவர்கள் இடும் கட்டளைகளுக்கெல்லாம் அடிபணிகிறான். வங்கிக் கொள்ளை முதல் ஆள் கொலை வரை ஆணைக்கேற்ப ஒவ்வொன்றாக அவன் கடக்கும்போது, தன்போலவே சிக்கியவர்களைக் கொண்டு ஓர் இருட்டுலக வலைப்பின்னல் சாம்ராஜ்யமே இயங்குவதை அறிந்து அதிர்கிறான்.

இவற்றை அறிவியல் புதினத்தின் அதீத கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. சமீபத்தில் வடஇந்தியப் பெருநகரங்களின் பெருந்தன இளைஞர்கள் பலர், இணைய வழிப்பறிக்கு ஆளானதைக் கதைகதையாகக் காவல் துறையிடம் முறையிட்டனர். வெளிநாட்டு விபிஎன் அடையாளங்கள், கிரிப்டோகரன்சி பரிமாற்றம், டெலகிராம் தகவல் தொடர்புகள் என தொழில்நுட்பத்தில் தேறிய கும்பல் திட்டமிட்டு வெகுநுட்பமாக இயங்கியதில் காவல் துறை விசாரணை பாதியில் முடங்கியது.

வீடியோ அழைப்பில் காத்திருக்கும் வில்லங்கம்

அந்தரங்கப் பதிவுகள் ஏதும் சேமிப்பில் இல்லை, ஆபாச தளங்களில் எதையும் சொடுக்குவதில்லை என்பவர்களையும் இந்தப் பாலியல் மிரட்டல்கள் விட்டுவைப்பதில்லை. சமுதாயத்தில் மதிப்பானவர்கள், சற்று பசையுள்ளவர்களை சமூக ஊடகங்களில் துழாவி ஒரு கும்பல் பட்டியலிடுகிறது. தேர்வான பெரும்புள்ளியின் வாட்ஸ்-அப் தொடர்புக்கு, பெண் ஒருவரின் புரொஃபைல் படம் தாங்கிய எண்ணிலிருந்து ‘ஹாய்.. ஹலோ’ என நூல் விடுகிறார்கள். திடீரென்று அந்தப் பெண்ணிடமிருந்து வீடியோ அழைப்பு வரும். அழைப்பைத் திறந்தால் போச்சு! எதிர்முனையில் முகம் காட்டாத ஒரு பெண் ஏடாகூடமாய் காட்சியளிப்பார். நமது நண்பர் சபலத்தில் வீடியோ அழைப்பைத் தொடர்ந்தால் மட்டுமல்ல… சுதாரித்துக்கொண்டு துண்டித்தாலும் இணைய கிரிமினல்கள் குறைந்தது அரை நிமிட வீடியோவைத் தேற்றிவிடுவார்கள்.

முதல் போணியாக அதை அவருக்கே அனுப்பி அதிர வைப்பவர்கள். அடுத்தபடி இன்னாருக்கெல்லாம் அனுப்பட்டுமா என்று பேரத்தைத் தொடங்குவார்கள். அது, பணத்தில் தொடங்கி அதிகார துஷ்பிரயோகம் வரை ஆளுக்கேற்ப அமையும்.

தேன் தடவிய பொறிகள்

பாலியல் வலையில் விழவைத்து மிரட்டிச் சாதிக்கும் உத்திகள் வரலாறு நெடுக விதவிதமாய் கடந்து வந்திருக்கின்றன. எதிரி தேசத்தின் ரகசியங்களை ஒற்றறிய, முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களிடம் அழகான பெண்களைப் பழகவிட்டு காரியம் சாதித்திருக்கிறார்கள். அதையே, இன்றைய உளவு அமைப்புகள் முதல் பயங்கரவாதிகள் வரை பிரயோகித்துப் பலனடைகிறார்கள். இப்படி, அணு ஆயுத ரகசியங்கள் களவு போனது முதல் ஆட்சிகள் கவிழ்ந்தது வரை உலகமெங்கும் ‘ஹனி டிராப்’ எனப்படும் உத்தி வெகு பிரபலமானது.

இதன் எளிய வடிவமே தற்போது செல்போன் வழி வலையாக சாமானியர்களையும் கவிழ்த்து வருகிறது. பெருந்தொற்று பரவலில் வழிப்பறி கொள்ளைகளுக்கான வாய்ப்புகளும் குறைந்தன. எனவே, வீட்டிலிருந்தபடி இணையத்தில் பதுங்கியிருந்து தங்களுக்கான வழிப்பறியை நடத்தி வருகிறார்கள். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் புதிய கணக்குகளில் குறிப்பிட்ட நபரின் புகைப்படத்தைத் தரித்தபடி அவரது நண்பர்களிடம் சிறுதொகை உதவி கேட்பதில் தொடங்கி, வங்கி அல்லது காப்பீட்டு நிறுவன அழைப்பின் பெயரில் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து வங்கி இருப்பைத் துடைத்தெடுப்பது வரை விதவிதமான ஆன்லைன் வழிப்பறிகளை அறிந்திருப்போம். அவற்றின் அடுத்த கட்டமாக, பாலியலை முன்வைத்து வளர்ந்திருக்கும் இந்த ஆபத்துகளிலிருந்தும் எச்சரிக்கையாக தற்காத்துக்கொள்வது அவசியம்.

இணைய பாதுகாப்பில் கவனம்

அந்தரங்கப் பதிவுகளைக் களவாடுவது, ஆபாச தளங்களின் வழியே ஊடுருவி குந்தகம் செய்வது, ஆபாச வீடியோ அழைப்பில் சிக்கவைப்பது என்ற இம்மாதிரி இக்கட்டுகளின் வரிசையில் புதுசு புதுசாய் சிக்கல்கள் காத்திருக்கின்றன. அவற்றில் சிக்காதிருக்க அடிப்படையாய் என்ன செய்யலாம்? மொபைல், கணிப்பொறிகளின் ஆன்டிவைரஸ், ஃபயர் வால் பாதுகாப்புகளை உறுதிசெய்வது, இ-மெயில் தொடங்கி எஸ்எம்எஸ் வரை கண்சிமிட்டும் இணைப்புகளைச் சொடுக்காதிருப்பது, அநாமதேய வீடியோ அழைப்புகளைத் தவிர்ப்பது ஆகிய முன்னேற்பாடுகள் உதவும். படத்தில் காட்சியளிக்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் மடிக்கணினி போல அவசியமற்றபோது கேமரா கண்களை மறைப்பதும் உசிதம். கூடுதல் தேவைக்குப் பிரத்யேக கணினிப் பாதுகாப்பு வல்லுநர் மற்றும் சைபர் க்ரைம் போலீஸாரை நாடலாம்.

மறைப்பில் மார்க் ஸகர்பெர்க்...

இளையராஜா

பெட்டிச் செய்தி

அளவுகடந்தால் ஆபத்து

‘போர்ன் ஹப்’ என்ற முன்னணி ஆபாசத் தளத்தின் ஆய்வின்படி, பெருந்தொற்று காலத்து ஆன்லைன் ஆபாச நுகர்வில் இந்தியா மூன்றாவது இடம்பிடித்திருக்கிறது. வயதுவந்தோர் தங்களுக்கான தேடல்களில் ஒன்றாக ஆபாசத்தை அணுகுவதும், கடந்து செல்வதும் இயல்பாக நடப்பவை. ஆனால், இந்தியாவில் மட்டும் அது இயல்புக்கு மீறியதாக இருப்பதும் அதன் பின்னணியில் இருக்கும் பாலியல் வறட்சியும் கவலைக்குரியவை.

“பாலியல் தேவைக்கான வடிகாலாக இல்லற வாழ்க்கை அமைந்த பிறகும் பலர், ஆபாசத்தை நோக்கி அலைபாய்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முக்கியமானது ‘ஹைபர் செக்‌ஷூவலிட்டி’ எனப்படும் மிதமிஞ்சிய பாலியல் தேவை. இவர்களில் சிலர் இளமையில் தடம்புரண்டவர்களாக இருப்பார்கள். பிற்பாடு நல்ல வாழ்க்கை அமைந்த பிறகும் அதிலிருந்து விடுபட முடியாது தவிப்பார்கள். ஆன்லைன் உலாவல் தரும் சுதந்திரமும் அவர்களைக் கண்மூடித்தனமாய் இயங்க வைக்கும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகரான பா.இளையராஜா.

மேலும், “ஆபாசத்தை அளவுகடந்து ரசித்துப் பழகியவர்கள், நடைமுறை வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையிடம் ஏமாற்றத்தை உணரவும் வாய்ப்புகள் உண்டு. ஆபாசக் காட்சிகளை நிஜ வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி அவற்றை உள்வாங்குவதும், அவற்றின் நினைவாகவே உழல்வதும் இயல்பைக் கெடுத்துவிடும். மாற்றாக அதே இணையத்தில் பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு சார்ந்தவற்றைத் தேடி அறிந்துகொள்வது நம்மைப் பக்குவப்படுத்தும்” என்கிறார் இளையராஜா.

x