ஐடியா வொர்க் அவுட் ஆயிருச்சு!


ஆபீசுக்கு நண்பரோட கார்ல போவுறதால டூ வீலர், ஷெட்லயே ஓரமா ரெஸ்ட் எடுக்கும். எங்க அபார்ட்மென்ட்காரவுங்களுக்கு இது நல்லாத் தெரியும். அவங்க இஷ்டத்துக்கு என் வண்டியை நவுத்தி வச்சுட்டு அவங்க வண்டியை வச்சுருவாங்க.

லோக்கல்ல எப்பவாச்சும் போவணும்னா வண்டியை எடுக்கப் போவேன். ஏழு கடல் ஏழு மலை தாண்டுறாப்ல இருக்கும். பெரிய பைக்கை நவுத்தினாத் தான் என் வண்டியை வெளியே எடுக்கலாம்.

அம்மிணியை வண்டில வச்சு கூட்டிக்கிட்டுப் போவணும்னா நான் நின்னுக்கிட்டுத்தான் வண்டி ஓட்ட வேண்டி வரும். “ஒக்காரு”ன்னு சொன்னதும் என்னை ஒரு தள்ளு தள்ளிட்டு ஒக்காருவாங்களா. வண்டியை போட்டுக்கிட்டு விழாம சமாளிக்கிறதே பெரிய ரிஸ்க்கா இருக்கும். அதனாலேயே ஆட்டோல போவலாமான்னு நைசா டபாய்ச்சிருவேன்.

மகனார் பைக் வச்சிருக்காரு. அது ஒரு டிசைனா இருக்கும். தெரியாத்தனமா ஒரு தடவை என்னை பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு போவுறியான்னு கேட்டுட்டேன். பில்லியன்ல ஒக்கார காலைத் தூக்கறேன்... தூக்கறேன்... அதுக்கு மேல முடியல. பால்கனில நின்னுகிட்டு அம்மிணி எட்டிப் பார்த்து சத்தமா கமென்ட். “வண்டில ஒக்காரக் கூடத் தெரியல”ன்னு. “போடா... நான் நடந்தே போயிக்கிறேன்”னு விருட்டுன்னு கிளம்பிட்டேன் அன்னிக்கு.

இன்னிக்கு கடைத் தெரு வரைக்கும் போவணும்னு வண்டியை எடுக்கப் போனா, அதிசயத்திலும் அதிசயமா ஷெட்டே காலியாக் கெடந்துச்சு. என் வண்டி மட்டும் ஒத்தைல நின்னுச்சு. கண்ணு கலங்கிருச்சு எனக்கு. இவ்ளோ பெரிய அதிர்ஷ்டமா எனக்குன்னு விசிலடிச்சுக்கிட்டே வண்டியை வெளியே கொண்டு வந்து ஸ்டார்ட் செஞ்சா, அம்மிணியைக் கூப்பிட்டா கண்டுக்காம இருப்பாங்களே, அது மாதிரி கம்முனு இருந்துச்சு.

தெருவுல அக்கம்பக்க வீட்டு வாசல்ல நின்னவங்க எல்லாம் நாசுக்கா முதல்ல லுக் விட்டுட்டு, அப்புறம் நேரடியாவே என்னை வேடிக்கை பாத்தாங்க. உன் உதை என் உதை இல்ல, அத்தனை உதை உதைச்சாலும் வண்டி கிளம்புவேனான்னு ஸ்ட்ரைக் பண்ணுச்சு. எங்க அபார்ட்மென்ட்ல ஒருத்தர் வந்து “என்ன சார் ஆச்சு”ன்னு துக்கம் விசாரிச்சாரு. “எடுத்து ரொம்ப நாளாச்சுல்ல... அதான்”னு சமாளிச்சு மறுபடி உதைச்சேன். “பெட்ரோல் இருக்கா...”ன்னு அறிவுபூர்வமா கேட்டாரு. டேங்க்கை தொறந்து காட்டுனதும் என்னையும் வண்டியையும் சுத்திச் சுத்தி வந்தாரு.

“நான் வேணா மிதிச்சுப் பாக்கவா”ன்னு கேட்டாரு. எனக்கு வண்டியே ஓட்டத் தெரியாதுன்னு கேலி பண்றாரோன்னு ஒரு டவுட் வந்தாலும் அவருக்கும் ஒரு சான்ஸ் கொடுப்போம்னு கொடுத்தேன். நாலு உதை உதைச்சுட்டு மூச்சு வாங்குனாரு. என்னோட கேலிச் சிரிப்பைப் பாத்துட்டு, யாரோ கூப்பிடறாப்ல, “இதா வரேன்”னு ஓடிட்டாரு.

எங்க தெருவுலயே ஒரு மெக்கானிக் ஷாப் இருக்கு. அங்கேதான் சர்வீசுக்கு விடுவேன். போன் அடிச்சதும் அவர் வந்தாரு. “ரொம்ப நாளா எடுக்கல போலிருக்கே”ன்னு சூப்பரா கேட்டாரு.

“ஒரு தேவைக்கு எடுக்கிறதுதான்”னு சமாளிச்சேன். “எடுத்துக்கிட்டுப் போகவா”ன்னு கேட்டாரு. “எப்போ கிடைக்கும்”னு கேட்டா சிரிச்சாரு. “ரெண்டு நாள் ஆவும். ஏற்கெனவே ஒத்துக்கிட்டதே நிறைய இருக்கு.”

நாலு நாள் கழிச்சு அந்தப் பக்கமா போனா என் வண்டி காயலாங்கடைல போட்டாப்ல அனாதையா நின்னுச்சு. என்னைப் பார்த்து கண்ணீர் விட்டாப்ல ஒரு ஃபீலிங்ஸ். “ஷெட்ல எவ்ளோ பாதுகாப்பா இருந்தேன். என்னைய கொண்டு வந்து இப்படி ரோட்டுல நிக்க வச்சுட்டியே”ன்னு சொல்ற பிரமை.

ஒரு பொண்ணு நின்னுச்சு. “அண்ணே இல்லியா...”ன்னு கேட்டா, “அப்பா வெளியே போயிருக்காரு”ன்னுச்சு. எப்போ வருவாருன்னு தெரியாதாம்.

அம்மிணி தான் படுத்தி எடுத்துட்டாங்க. “நீங்க விசாரிக்கலன்னா வண்டியை அப்படியே போட்டுட்டு இன்னும் செலவுக் கணக்கை ஏத்தி விட்டுருவாங்க”ன்னு.

அதை எப்பவாச்சும் எடுக்கறதால அசால்ட்டா இருக்கலாம்னா, இவுங்க தெனம் ஒரு பீதியைக் கிளப்பினாங்க. “நம்ம வண்டி மாதிரியே இருந்துச்சு. அந்த மெக்கானிக் மதியம் ஓட்டிக்கிட்டுப் போனாரு.”

“அப்படில்லாம் செய்ய மாட்டாங்க”ன்னு சொன்னாலும் உள் மனசுல ஒரு ஒதைப்பு. ஒரு வேளை, வண்டி சர்வீஸ் முடிச்சுட்டு ட்ரையல் பார்த்துருப்பாரோன்னு.

கடைக்குப் போனேன். அதே இடத்துல என் வண்டி அப்படியே நின்னுச்சு. என் வண்டி மேல கிழிச கைலி ஒண்ணு போட்டுருந்ததுல முதல்ல கண்டுபிடிக்க முடியல. அப்புறம் நம்பர் ப்ளேட்டை வச்சு பிடிச்சுட்டேன்.

“அண்ணன்... அப்பா இல்லியா”ன்னு அங்கே நின்ன பொண்ணுக்கிட்ட கேட்டேன். அது சைக்கிளுக்குக் காத்து அடிக்க வந்த பொண்ணாம். முறைச்சுட்டுப் போச்சு.

“அண்ணே... அண்ணே...”ன்னு என் தம்பி வயசு மெக்கானிக்கைக் கூப்பிட்டேன். வெளியே வந்தவரு என்னைப் பார்த்து ஷாக் ஆயிட்டாரு. சமாளிச்சுக்கிட்டு,

“இன்னிக்கு முடிஞ்சுரும்”னு மையமாச் சொன்னாரு.

“ரொம்ப லேட் ஆயிருச்சு”ன்னு அரை சவுண்டு விட்டேன். ஓங்கிக் கேட்டா வேற ஏதாச்சும் கோளாறு செஞ்சுருவாரோன்னு ஒரு பயம்.

“மூத்தவளைக் கட்டிக் கொடுத்திருந்தேன்ல... வேலைக்குப் போவ வண்டி இல்லாம கஷ்டப்படுது. செகண்ட்ல ஏதாச்சும் வந்தா கொடுக்கலாம்னு பார்த்தா சரியாவே அமையல”ன்னு புலம்புனாரு.

“சரி. இன்னிக்கு கொடுத்துருங்க”ன்னு சொல்லலாம்னு நினைச்சப்ப குயுக்தியா ஒரு ஐடியா வந்துச்சு.

“என் வண்டி என்ன ரேட்ல போகும்”னு கேட்டேன்.

“கிலோ மீட்டர் ஓடுனது ரொம்பக் கம்மி. வருசம் தான் ஆச்சு. நல்லா சர்வீஸ் செஞ்சுட்டா சூப்பரா இருக்கும். நல்ல ரேட் கிடைக்கும்”னு சொன்னாரு.

வீட்டுக்கு வந்தா அம்மிணி விசாரணை.

“என்னாச்சு... வண்டி ரெடியா?”

“இன்னிக்கு ஈவ்னிங் கிடைச்சுரும்”னு கெத்தா பதில் சொன்னேன். புரியாம முழிச்சுட்டு ஏதோ உளர்றேன்னு போயிட்டாங்க.

ஈவ்னிங் வண்டி வந்துருச்சு. வழக்கமா சர்வீசுக்கு விட்டா இருக்கிற கண்டிஷனை விட, புது வண்டி கணக்கா ஜம்னு இருந்துச்சு.

“ஞாபகம் வச்சுக்குங்க”ன்னு மெக்கானிக் சொல்லிட்டுப் போனாரு. “என்னவாம்...”னு அம்மிணி கேட்டாங்க.

ஹேப்பியா சிரிச்சுக்கிட்டேன்.

மெக்கானிக் கிட்ட காலைல என்ன சொல்லிட்டு வந்தேன்னா...

“சர்வீஸ் செஞ்சதுக்கு ஒரு மாசம் வச்சுக்கிட்டு ரேட் சுமாரா வந்தாக்கூட தள்ளி விட்டுரலாம்னு பார்க்கிறேன். அப்படியே போட்டு வைக்கிறதுக்கு கொடுத்துட்டா யூஸ் ஆவும்ல”னு போட்டு விட்டேன். வொர்க் அவுட் ஆயிருச்சு !

x