என்மீது யாரும் அனுதாபம் காட்டாதீர்கள்!


ஓவியர் சக்திராணி

“என்மீது யாரும் அனுதாபம் காட்டாதீர்கள். மாறாக என்னைப் பார்த்து தன்னம்பிக்கை கொள்ளுங்கள்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் ஓவியர் சக்திராணி.

தன்னிடம் பேசும் ஒவ்வொருவரிடமும் இந்தத் தூரிகைத் தோழி, ஆக்கபூர்வ எண்ணங்களை ஆழமாக விதைத்துவிடுகிறார். தனது ஓவியங்கள் மூலமாகவும், சரளமாக உரையாற்றும் திறனாலும் அனைவருக்குள்ளும் தன்னம்பிக்கை விதைகளைப் பயிரிடும் சக்திராணி, தனது மூன்றாவது வயதில் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் செயலிழந்துபோனவர்.

சக்திராணியின் ஓவியங்கள்..

தடைகளைத் தாண்டி...

கால்கள் செயலிழந்துபோனாலும் இவரது முயற்சிகளோ, செயல்களோ செயலிழக்கவில்லை. ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சக்திராணி, மனித உருவங்கள், இயற்கைக் காட்சிகள், அன்றாட வாழ்க்கைத் தருணங்கள் என எல்லாவற்றையும் தத்ரூபமாக வரைவதில் வல்லவர். கடைவீதிகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் என இவர் வரையும் காட்சிகளில்

அத்தனை உயிர்ப்பு. கரகம், சிலம்பம் போன்ற நமது பாரம்பரியக் கலைகளை ஓவியமாக வரைந்திருக்கிறார். பத்மா சுப்ரமணியத்தின் 108 தாண்டவங்களை ஆய்ந்து ஓவிய வடிவமாக்கியிருக்கிறார். தனது ஓவிய படைப்புக்களுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக ஓவியத் துறையின் விருது, தேசிய அளவில் தனியார்

அமைப்புகளின் விருதுகள் எனப் பல அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார் இவர்.

“எனக்கு நடனத்தின் மீது ரொம்ப ஆர்வம். என்னால் ஆட முடியவில்லையே என்று வருந்தாமல் கேன்வாஸில் அதனை ஆடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று சிரித்தபடி சொல்கிறார் சக்திராணி.

இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டாலும், எல்லோரையும்போல் பள்ளிக்குச் சென்று படித்த சக்திராணி, பள்ளி நாட்களிலேயே ஓவியத்தில் ஆர்வம் ஏற்பட, தானாகவே வரைந்து பார்க்க ஆரம்பித்தார். ஓவியம்தான் தனது வாழ்க்கை என முடிவுசெய்தார். எதிர்காலத்துக்கு உதவும் வகையில் பெண்ணுக்குத் தையல் கற்றுக்கொடுங்கள், பின்னலாடை நெய்யக் கற்றுக்கொடுங்கள் என்று மற்றவர்கள் சொன்னாலும் தந்தையோ மகளின் விருப்பத்தை நிறைவேற்றவே முடிவுசெய்தார். கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் இளங்கலை ஓவியத்தில் சக்திராணியைச் சேர்த்தார். அங்கேயே முதுகலை ஓவியமும் முடித்த சக்திராணி அன்றிலிருந்து ஓவியமே உயிர்மூச்சாய் வாழ்ந்துவருகிறார்.

குடும்பத்தினருடன்...

சக்திராணியின் ஓவியங்கள்..

காத்திருந்த காதல்

தற்போது சென்னை ஆதம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசிக்கிறார் சக்திராணி. இவரது அறை முழுவதும் வரைந்த, வரைந்து முடிய காத்திருக்கும் ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. மீதமுள்ள இடங்களில் எல்லாம் புத்தகங்கள்தான். கணவர் ஞானசேகரன், மகள் சாய்ரெய்மா என்று மகிழ்வான வாழ்க்கை. தனது வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் தனது தந்தையும், கணவரும்தான் என்கிறார் இந்தத் தன்னம்பிக்கைத் தோழி.

ஞானசேகரன் - சக்திராணி தம்பதியின் காதல் கதை இன்னும் சுவாரசியமானது. சக்திராணியின் ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட ஞானசேகரன் இவரது அன்பைப் பெற இரண்டு வருடங்கள் காத்திருந்தார். ஒருகட்டத்தில் காதல் மலர்ந்து, பிறகு திருமணத்தில் முடிந்திருக்கிறது. பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தக் காதலைக் குறையாமல் காத்துவருகிறார் ஞானசேகரன்.

ஊரடங்குக்கு நடுவே உற்சாகம்

திருமணமாகி, குழந்தை பிறந்து நான்கு வருடங்கள் வரை ஓவியம் வரையாமல் தடைபட்டது சக்திராணிக்கு வருத்தம் தந்தது. மீண்டும் தூரிகை பிடிக்கும் சூழல் உருவானதும், அதையெல்லாம் ஈடு செய்யும் விதமாக அதிக அளவில் வரைய ஆரம்பித்தார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான், இரண்டாவது தடையாகக் கரோனா காலம் வந்து சேர்ந்தது. இதனால், இவரது பல ஓவியப் படைப்புகள் கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாக முடங்கிக் கிடக்கின்றன. அவற்றைக் காட்சிப்படுத்தவோ விற்பனை செய்யவோ முடியாமல் தவிக்கிறார்.

ஆனாலும் அதற்காக முடங்கிவிடாமல் இணையவழி மூலமாக ஓவியப் பயிற்சி வகுப்புகளையும் உற்சாகமாக நடத்திவருகிறார். ஓவிய ஆசிரியராகி மாணவர்களுக்குத் தனது ஓவிய பாணியைக் கற்றுத்தர வேண்டும் என்பதே சக்திராணியின் விருப்பம். அதற்காக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார். 2017-ல் சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்துள்ள நிலையில், அரசுப் பணி வரும் என்று காத்திருந்தார்; கிடைக்கவில்லை. புதிய ஆட்சியில் தனக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

சக்திராணியின் ஓவியங்கள்..

சிறகை விரிக்கும் மனம்

சக்திராணியிடம் பேசினால் பிரவாகமாக வார்த்தைகள் வந்து விழுகின்றன. “என்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால், மனதளவில் பறந்துகொண்டேயிருப்பேன். எதையும் என்னால் முடியாது என்று நினைக்க மாட்டேன், முடியும் என்றுதான் நினைப்பேன். எனக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இருசக்கர வாகனம் மூலம் கடைகளுக்குப் போவது, மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, சமையல் செய்வது என்று அனைத்தையும் நானே பார்த்துக் கொள்வேன். அதுபோக மீதமுள்ள நேரத்தில்தான் ஓவியங்கள் வரைவேன்.

நான் படித்த படிப்பு பயனில்லாமல் போய்விடக் கூடாது என்பதுதான் எனது எண்ணம். கற்ற ஓவியக் கலையை மற்றவர்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும். அதற்காகத்தான் அரசு வேலையை எதிர்பார்த்திருக்கிறேன். அப்படி அரசுப் பணி கிடைக்கவில்லையென்றால் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. ‘ஜி.எஸ்.ஆர்ட் லேண்ட்’ என்ற பெயரில் அகாடமி ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். அதன்மூலம் அந்தப் பணியைச் செய்வதுதான் எதிர்காலத் திட்டம். அதன் முதல்படியாகத் தற்போது மாணவர்கள், இல்லத்தரசிகள் என்று 40 பேர்வரை இணையவழி மூலமாக என்னிடம் ஓவியப் பயிற்சி பெறுகிறார்கள்” என்கிறார் சக்திராணி.

சக்திராணியின் ஓவியங்கள்..

ஓவியர் எனச் சொன்னால் போதும்!

“யாரும் அனுதாபப்படுவதால் நமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஒரு நிமிடம் அனுதாபப்பட்டுவிட்டு அடுத்த நிமிடம் அவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். உங்களுக்கென்று ஒரு வழியை வகுத்துக்கொள்ளுங்கள். கல்வி, வேலை, திருமணம் என்று ஏதாவது ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். அது இருந்துவிட்டால், அடுத்து என்ன என்று தேங்கிப்போய் நிற்கும் சூழல் வராது. குறிப்பாக, பெண்கள் தங்கள் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படிப்பைத் தாண்டி எதையாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வாழ்க்கைக்கு உதவும்” என்று சொல்லும் சக்திராணி, “காற்றை சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாது. எனக்கு ஓவியமும் காற்றைப் போலத்தான். ஓவியம் வரையாமலும் என்னால் இருக்க முடியாது. உங்கள் எழுத்தில் என்னை ஓவியராக மட்டும் காட்டினால் போதும்” எனும் வேண்டுகோளுடன் விடைகொடுக்கிறார்!

தூரிகைத் தோழிக்கு மேலும் வெற்றிகள் கிட்டட்டும்!

கருணாநிதியின் ரசிகை

2002-ல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குறளோவியத்தை 32 ஓவியங்களாக வரைந்து கும்பகோணத்தில் காட்சிப்படுத்தினார் சக்திராணி. இந்தத் தகவல், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மூலம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் காதுக்குப் போனது. உடனே, சக்திராணியை கோபாலபுரம் வீட்டிற்கே வரவழைத்துப் பாராட்டினார் கருணாநிதி. அன்றிலிருந்து அவரது ரசிகையாகிவிட்ட சக்திராணி, தற்போது முதல்வர் ஸ்டாலினையும், அவரது மனைவி துர்காவையும் வரைந்திருக்கிறார். அதை அவர்களிடம் நேரில் கொடுக்க வேண்டும் என்று ஆவலாகக் காத்திருக்கிறார்.

x