சிறகை விரி உலகை அறி - 14


வளாகத்தில் உள்ள டாங்குகள்

பரிவும் பாசமும் சூழ்ந்தது இவ்வுலகு! துன்புறும் உள்ளங்களின் துடிப்பறிந்து அது துணிவுகொள்ளும், மொழி இனம் கடந்து எளியவர்களுக்காகக் குரல் எழுப்பும், வடிந்த இரத்தத்தின் மீது அமைதிக்கான உயில் எழுதும். வியட்நாமுக்கும் அதுதான் நிகழ்ந்தது. தீரத்துடன் போரிட்ட வியட்நாமியர்களின் உணர்வுகளை உலகம் உணர்ந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் வியட்நாமுக்குத் துணை நின்றன.

அருங்காட்சியகத்தின் உள்ளே

போரின் மிச்சம்’ அருங்காட்சியகம்

மறுஒருங்கிணைப்பு அரண்மனையைப் பார்த்த பிறகு, அங்கிருந்து ‘அமெரிக்கர்களின் போர்க் குற்ற அருங்காட்சியகத்துக்கு’ (Museum of American War Crimes) வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்றார். போரின் பாதிப்பு, உலக நாடுகளின் உடனிருப்பு, போருக்குப் பிறகான பன்னாட்டு நீதிமன்ற விசாரணை என அனைத்தையும் ஆவணப்படுத்தி ‘போரின் மிச்சம்’ (War Remnants Museum) என இவ்விடத்தை வியட்நாமியர்கள் அழைக்கிறார்கள்.

காடுகளில் ஏஜென்ட் ஆரஞ்சு தெளிக்கப்படுகிறது.

அருங்காட்சியகத்தின் வளாகத்தில் இருக்கும் டாங்குகளும், போர் விமானங்களும், கட்டிடத்தின் உள்ளே உள்ள படங்களும், தகவல்களும், உயிரற்றவர்களின் உயிராக இன்றும் துடித்துக்கொண்டே இருக்கின்றன. ‘தேடிக் கண்டுபிடித்து அழி' (Search and destroy operation) எனும் திட்டத்தை 1968-ல் செயல்படுத்தி, ஆயிரக்கணக்கான பொதுமக்களை அமெரிக்கா அழித்ததன் சாட்சியாகப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட வியட்நாம் வீரர்களின் முகங்களைத் துணிகளால் மூடி, முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி (Water torture) மூச்சுவிட முடியாமல் செய்து கொன்றழித்ததன் சாட்சியங்கள் பதறச் செய்கின்றன. வேதிமருந்துகளைத் தெளித்த அமெரிக்கர்கள், தங்களைக் காத்துக்கொள்ள அணிந்திருந்த முகக் கவசங்களை இங்கு சேகரித்து வைத்துள்ளார்கள். முகக் கவசம் அணிந்திருந்தாலும் போரில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய, நியூசிலாந்து வீரர்களும், 26 லட்சம் அமெரிக்க வீரர்களும், 3 லட்சம் வரையிலான கொரிய வீரர்களும் பாதிப்புக்குள்ளான தகவலும் இருக்கிறது.

கிம் ஃபுக் பாங் டி புகைப்படம்

1972 ஜுன் 8-ம் தேதி அமெரிக்கப் படைகள் ட்ராங் பாங் மாவட்டத்தில் வீசிய நேபாம் குண்டுகள் அங்கிருந்த வீடுகள், பண்ணைகள், மனிதர்கள் என எல்லாவற்றையும் அழித்தது. அவ்வேளையில், தீப்பற்றிய ஆடையை அவிழ்த்துவிட்டு இரண்டு கைகளையும் விரித்தபடி கிம் ஃபுக் பாங் டி எனும் 9 வயது சிறுமி நிர்வாணமாக ஓடினார். அத்துயரக் காட்சியைப் பத்திரிகையாளர் கிம் காங் அட் படம் பிடித்தார். புலிட்சர் விருது பெற்ற அந்தப் படம், கொலம்பிய பல்கலைக்கழகம் நடத்திய, ‘20-ம் நூற்றாண்டின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய படம்’ எனும் ஆய்வில் 41-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2013-ல், இந்த அருங்காட்சியகத்துக்குக் கிம் காங் வழங்கிய அப்படம் சுவரில் தொங்குகிறது. போரின் பாதிப்பால் சிதிலமடைந்த கட்டிடங்களின் உடைந்த இரும்பு மற்றும் பிற துண்டுகளைச் சேகரித்து, குவன் ஹாங் குய் (Nguyen Hoang Huy) செய்த ‘தாய்’ சிலை தேசத்தின் மொத்தத் துயரத்தையும் பறைசாற்றுகிறது.

ஜுய் குனோசின்

மாவீரர் ஜுய் குனோசின்

2009 ஜனவரி 29 அன்று முத்துக்குமார் என்கிற இளைஞன் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும்படி நீண்ட கடிதம் ஒன்றை எழுதிவிட்டு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் தனக்குத்தானே தீயிட்டு இறந்தார். அதேபோல வியட்நாம் மீதான அமெரிக்காவின் கொடூரமான போருக்கு எதிராகக் கடிதம் எழுதிவிட்டு, ஜப்பானியப் பிரதமரின் அரண்மனை முன்பாக 1967 நவம்பர் 11 அன்று ஜுய் குனோசின் (Jui Cunosin) தீயின் நாக்குகளுக்குத் தன்னைப் பலிகொடுத்தார். அவர் ஒரு ஜப்பானியர் என்பது குறிப்பிடத்தக்கது.

முகக் கவசங்கள்

“என்னதான் கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து தெற்கு வியட்நாமியர்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு அமெரிக்கா குண்டுகளை வீசினாலும், அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்நாம் படையினரின் குண்டுவீச்சில் பலியான, காயமடைந்த அப்பாவி முதியவர்களாலும் குழந்தைகளாலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. விவசாயிகளின் நெல் வயல்கள் முழுவதுமாகக் கைப்பற்றப்பட்டுவிட்டன. செய்தித்தாளில் சொல்லப்படுவதைவிட கொடூரம் அங்கு நிகழ்கிறது. உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி குண்டு போடுவதை அமெரிக்கா நிறுத்துவதுதான் வியட்நாமியர்களைக் காப்பாற்ற ஒரே வழி. இன்னொரு நாட்டுக் குடிமகன், தன்னையே எரித்துக்கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதைப் பார்த்து மற்றவர்கள் என்னை விமர்சிக்கலாம். ஆனாலும், வியட்நாமிலும் உலகம் முழுவதும் உண்மையான அமைதியை விரும்பும் எவரும் நிச்சயமாக என் இறப்பு வீணானதல்ல என்பதைப் புரிந்துகொள்வார்கள்” என ஜப்பானியப் பிரதமருக்கு குனோசின் எழுதிய கடிதத்தின் பிரதியைக் கண்டேன். அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் இருந்த 1,000 பேராசிரியர்கள் போருக்கு எதிராகக் கையெழுத்திட்டு, 1965 மே 13-ல் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தித்தாளில் வெளியான அறிக்கையையும் பார்த்தேன்.

முகத்தை மூடிவிட்டு தண்ணீர் ஊற்றி கொல்லுதல்

போர்க் குற்ற விசாரணைகள்

அமெரிக்காவின் போர்க் குற்றம் தொடர்பான விசாரணை பல கட்டங்களாக நடந்தது. “வியட்நாமில் நடைபெறும் சூழ்நிலை தீவிரமான அறநெறிச் சிக்கல்களைக் காட்டுகிறது. இது எவ்வகையிலும் நாடுகளுக்கு இடையேயான ஆட்சித் திறனுக்குரியதோ தந்திரமானதோ அல்ல. கொடூரமான போரைத் தொடங்கிவைப்பது என்பது பன்னாட்டு குற்றம் மட்டும் அல்ல, உச்சபட்சப் பன்னாட்டுக் குற்றம் (Supreme international crime). மற்ற போர்க் குற்றங்களுடன் ஒப்பிடுகையில், இது தன்னளவிலேயே ஒட்டுமொத்த தீமையையும் எண்ணத்தையும் குவித்துள்ளது” என நூரம்பெர்க் பன்னாட்டு ராணுவத் தீர்ப்பாயம், 1946 அக்டோபர் முதல் தேதி குறிப்பிட்டுள்ள தகவல் இங்கிருக்கிறது.

ட்ரான் தி ஹோன் - படமும் கடிதமும்

போர்க் குற்றம் தொடர்பான பெட்ரண்ட் ரசல் தீர்ப்பாயம் (Bertrand Russell Tribunal), “அமெரிக்கா, வியட்நாமுக்கு எதிராகக் கொடூரமான குற்றத்தையும், அமைதிக்கு எதிரான குற்றத்தையும் செய்துள்ளது. தீவிரமான குண்டுமழை பொழிந்தும் போர் விதிமுறைகளுக்குப் புறம்பான ஆயுதங்களை (நேபாம், பாஸ்பரஸ் குண்டுகள், நச்சு வாயுக்கள், வேதியியல் பொடிகள், கொத்துக் குண்டுகள்) பயன்படுத்தியுள்ளது. அமெரிக்க வீரர்களால் கைதுசெய்யப்பட்ட வியட்நாம் போர் கைதிகள், போர் சட்ட முறைமைகளுக்குப் புறம்பாக நடத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குடிமக்களைப் பன்னாட்டு சட்டங்களுக்குப் புறம்பாக, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியுள்ளார்கள். வியட்நாமியர்களின் மீது இன அழிப்பு குற்றம் புரிந்த நாடு அமெரிக்கா” எனச் சொன்ன தகவலும் உள்ளது.

அமெரிக்க அதிபருக்கு ஒரு கடிதம்

இடது கை பாதியும், இரண்டு கால்களும் இல்லாமல் 1986-ல் பிறந்த ட்ரான் தி ஹோன் (Tran Thi Hoan) அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 2009 மார்ச் 19 தேதியிட்ட அக்கடிதத்தின் நகல் இங்குள்ளது. அதில், “ஏஜென்ட் ஆரஞ்ச் வேதிமருந்தால் பாதிக்கப்பட்டவர்களின் இரண்டாவது தலைமுறை நான். அந்த வேதிமருந்தானது, போர் நடந்தபோது வாழ்ந்த மக்களை மட்டும் கொல்லவில்லை. மாறாக அவர்களின் பல்வேறு தலைமுறைகளின் குழந்தைகளையும் மெல்ல மெல்ல கொல்கிறது. என்னைப் பாதித்துள்ளது போலவே, என் நாட்டிலும் மற்ற நாடுகளிலும் கற்பனைக்கு எட்டாத வகையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் மகள்கள் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் மற்ற நாட்டு குழந்தைகளின் மீது நீங்கள் காணும் கனவையும் பார்த்து மிகவும் வியந்து மகிழ்கிறேன். வியட்நாமில் உள்ள குழந்தைகளையும் நீங்கள் அதில் சேர்த்துக்கொள்ளுமாறு நான் கனவு காண்கிறேன். டையாக்சின் வேதிமருந்தால் மெல்லக் கொல்லப்படும் குழந்தைகளையும் அவர்களின் துயரங்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நான் கனவு காண்கிறேன். படிக்கவும், கனவு காணவும், வளரவும் உங்கள் மகள்களைப் போலவே ஒவ்வொரு குழந்தையும் சமமான வாய்ப்புகளைப் பெறுவதற்கு எப்படியெல்லாம் உதவலாம் என்கிற நல்லெண்ணம் உங்கள் மனதில் இருக்கிறது என நான் கனவு காண்கிறேன்.

உங்கள் நாடு சந்திக்கும் அவசர காரியங்களில் நீங்கள் ஓய்வில்லாமல் பரபரப்பாக இருப்பீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஏஜென்ட் ஆரஞ்சால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அது ஏற்படுத்திய விளைவுகளையும் அதே முக்கியத்துவத்துடன் அணுகுவீர்கள் என நம்புகிறேன். ஏனென்றால், எதிர்கால மனித குலத்துக்கு ஒவ்வோர் உயிருமே முக்கியமானதாகும்” என ட்ரான் அக்கடிதத்தில் உருக்கமாக எழுதியிருக்கிறார்.

ஒவ்வொன்றையும் வாசித்துவிட்டு, வியட்நாமியர்களை மனதுக்குள் ஆரத்தழுவிக்கொண்டு அடுத்த இடத்துக்குப் புறப்பட்டேன்.

(பாதை நீளும்)

தாய் சிலை

பெட்டிச் செய்தி

தன்னம்பிக்கை ‘பரிசு’

அருங்காட்சியகத்தின் மற்றொரு தளத்தில், கால்கள் முழுவதும் அல்லது பாதி இல்லாமல், கைகள் இல்லாமல், விரல்கள் இல்லாமல் என எப்படியெல்லாம் ஒரு மனித உடல் இருக்கக் கூடாது என நினைக்கிறோமோ அப்படியெல்லாம் சிலர் இருந்தார்கள். தாங்கள் செய்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்து தன்னம்பிக்கையைப் பரிசளித்தார்கள். பாசியால் செய்யப்பட்ட ஒரு கைப்பையை அவர்களிடம் வாங்கினேன். 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. பல்வேறு நிகழ்வுகளுக்கு எடுத்துச்சென்ற பிறகும், பாசியின் தோல் இன்றும் பிரியாமல் அப்படியே இருக்கிறது. வியட்நாமியர்களின் நம்பிக்கையும் உயிர்ப்புடன் இருக்கிறது.

x