தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதம் ஒன்றில் பங்கேற்ற பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, “தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சவாடிகள் செயல்படுகின்றன. சாலை கட்டுமானத்திற்காக செலவிட்ட தொகையை எடுப்பதற்காக முதல் 15 ஆண்டுகள் முழு சுங்க கட்டணமும், அதன் பிறகு சுங்கக் கட்டணத்தில் 45 சதவிகிதமும் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று விதியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் கந்துவட்டிக்காரர்களைவிட மோசமாக சுங்கம் வசூலிக்கப்படுகிறது" என்று குற்றம்சாட்டினார்.
அதற்குப் பதிலளித்த தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, "நகர, மாநகர எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுங்கம் வசூலிக்கக்கூடாது என்று விதி இருப்பதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். கேரளாவிலும் முன்பு அதிக சுங்கச்சாவடிகள் இருந்தன. இப்போது வெறும் 3 மட்டுமே இருக்கின்றன. 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிப்படி, தமிழகத்தில் மொத்தமே 16 சுங்கச்சாவடிகள்தான் இருக்க வேண்டும். எஞ்சியவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
அமைச்சர் கூறியபடி கேரளாவில் மொத்தமே 3 சுங்கச்சாவடிகள்தான் இருக்கின்றனவா என்று விசாரித்தபோது, “இல்லை, மொத்தம் 7 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. வயலார் வடக்கன்சேரி சாலை, எடப்பாலி அரூர் சாலை, குண்டனூர் சாலை, திருச்சூர் எடப்பாலி சாலை, கலமச்சேரி வல்லார்படம் சாலை, வரபுழா பாலம், தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆரூர் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன" என்றனர்.
கேரள அரசு சில சுங்கச்சாவடிகளை மூடியதாகச் சொல்கிறார்களே என்று கேட்டபோது, "மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த சுங்கச்சாவடிகளில் 14 சுங்கச்சாவடிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன" என்றனர். இந்தத் தகவலை கேரள மாநிலத்துக்கான நமது சிறப்புச் செய்தியாளர் என்.சுவாமிநாதனும் உறுதி செய்தார்.
மூடப்படுமா?
தமிழகத்தில் மிக அதிகமாக சுங்கச்சாவடிகள் இருப்பது தென்மாவட்டங்களில்தான். அதுவும் சென்னை அருகே உள்ள சுங்கச்சாவடியுடன் ஒப்பிட்டால், இங்கே 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக சென்னையை ஒட்டியுள்ள திருமண்துறை சுங்கச்சாவடியில், காருக்கான கட்டணமாக ரூ.55 வசூலிக்கப்படுகிறது. ஆனால், சாலைப்புதூரில் ரூ.105 வசூலிக்கிறார்கள். எனவே, தமிழக அரசு, தென்மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.