சேலம் அருகே, அதிபயங்கர விபத்தில் சிக்கிய நிலையிலும்கூட அதிர்ந்துபோய்விடாமல் தனது கடமையைச் செய்துகொண்டிருந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை, மக்கள் ஆச்சர்யத்துடன் பாராட்டுகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சிவராசு. இவர், மக்களிடம் நெருங்கிப்பழகுவதன் மூலம் மக்கள் மனதிலும் அன்பானவராக இடம் பிடித்திருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதுநாள் வரையிலும் மொத்தம் ரூ.700 கோடி மதிப்பிலான திட்டங்கள் திருச்சிக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, இவரும் ஒரு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் திருமணம், இன்று சேலத்தில் நடந்தது. பகலில் மாவட்டத்தில் தனது பணிகளை கவனிக்க வேண்டும் என்பதால், நேற்று இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, இரவு 10 மணி அளவில் திருச்சிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். காரை சீனிவாசன் என்பவர் ஓட்டினார். ஆட்சியருடன் அவரது உதவியாளர் பெரியண்ணசாமி என்பவரும் உடனிருந்தார்.
அப்பகுதியில் நல்லமழை பெய்துகொண்டிருந்தது. சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து நாமக்கல் நோக்கி கார் வந்து கொண்டிருந்தபோது, தாசநாயக்கன்பட்டி என்ற இடத்தின் அருகே எதிர்திசையில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி ஒன்று, மழையினால் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதை எதிர்பார்க்காத ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்த முயன்றார். ஆனாலும் கட்டுப்பாட்டை இழந்த கார், விபத்திற்குள்ளான லாரி மீது அதிவேகமாக மோதியது.
இதில், காரின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. எனினும், காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த ஆட்சியர் சிவராசு சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்கள் ஏதுமின்றி உயிர்த்தப்பினார். கார் ஓட்டுநர் சீனிவாசன், உதவியாளர் பெரியண்ணசாமி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்குவந்த போலீசார், மற்றொரு கார் ஏற்பாடு செய்து அதில் ஆட்சியரை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியரின் கார் விபத்துக்குள்ளாகிவிட்டது என்ற செய்தி திருச்சியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து நடந்தது இரவு 10.30 மணிக்கு என்பதால், மேற்கொண்டு தகவல்கள் எதையும் பெறமுடியாமல் அதிகாரிகளும், செய்தியாளர்களும் தவித்திருந்தனர். ஆனால், 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் திருச்சி கோவிட் குழு என்ற வாட்ஸ் அப் குழுவில், ஆட்சியர் சிவராசு பதிவு போட்டுக்கொண்டிருந்தார்.
அதில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து எதையும் காட்டிக்கொள்ளாத ஆட்சியர், நாளை எங்கெங்கு தடுப்பூசி முகாம்கள், எவ்வளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்ற விபரங்களை மட்டும் அதில் பதிவிட்டார். அதைப் பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஆட்சியர் நலமோடு இருப்பதையும், விபத்தைப் பொருட்படுத்தாமல் அந்த நேரத்திலும் பணியில் கவனத்தைச் செலுத்தியதையும் கண்டு வியந்தனர்.
இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கியவர் இரவே திருச்சி திரும்பிவிட்டார். விபத்தை நினைத்து கொஞ்சம்கூட அசந்துவிடாமல், இன்று காலையிலிருந்து தனது வழக்கமான பணிகளைத் தொடர்கிறார். அவரை ஆச்சர்யத்துடனும், வியப்புடனும் பார்க்கிறார்கள் திருச்சி மாவட்ட மக்கள்.
அதிகாரிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, ஆட்சியர் சிவராசுவும் ஒரு சிறந்த உதாரணம்தான்.