சீனாவுக்கு வைக்கப்படும் செக்!- இந்தியப் படைத்தளமாகும் அகலேகா தீவு


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

மொரிஷியஸ் நாட்டின் அகலேகா தீவில், இந்தியாவின் படைத்தளம் அமைக்கும் பணிகள் துரிதமாகி வருகின்றன. இதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் வாலாட்டும் சீனாவுக்கு இந்தியா சாதுரியமாக ‘செக்’ வைத்திருக்கிறது.

தொல்லையாகும் எல்லைப் பாதுகாப்பு

உலக வல்லரசாக அமெரிக்காவுக்குச் சவால்விடும் சீனா, மறுபுறம் தனது பிரதான பிராந்தியப் போட்டியாளராக இந்தியாவைக் கருதுகிறது. இமயத்தையும், ஆழ்கடல்களையும் இயற்கை அரண்களாக இந்தியா பெற்றிருப்பினும், நவீன போர் வியூகங்களின் முன் அவை பொருட்டில்லாது போகின்றன. அதற்கேற்ப சீனாவுடனான பனிமலையை மையமாகக் கொண்ட எல்லைத் தகராறுகள் விபரீதமெடுத்து வருகின்றன. இந்தியாவின் இதர கடல் எல்லைகளிலும் சீனா வாலாட்டப் பார்க்கிறது. ஒரு சுயாட்சி மாகாணத்துக்கு இணையாக இலங்கையின் கொழும்பு துறைமுக நகரத்தை வளைத்திருப்பது சீனாவின் அண்மைக் கால சாதனை. இவற்றுக்குப் பதிலடியாக, இந்தியப் பெருங்கடலில் 15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா தொடங்கிய அகலேகா தீவு திட்டம் தற்போது கனிந்துள்ளது.

அகலிகை விமோசனத்தில் அகலேகா

மொரிஷியஸ் தீவுக் கூட்டத்தில் ஒன்றாக, அதன் பிரதான தீவிலிருந்து இந்திய திசையில் சுமார் 1,050 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது அகலேகா தீவு. விமானப் பார்வையில் வடக்கு, தெற்கு என 2 தீவுகளாக அகலேகா புலப்படும். வடக்குத் தீவு உலர்ந்த தைல இலை போலிருக்க, அதிலிருந்து துளிர்க்கும் அளவில் பெரிய தைலத் துளி போல தெற்குத் தீவு தோற்றமளிக்கும். சுமார் 300 பழங்குடி இன மக்கள் மட்டுமே வசிக்கும் அகலேகா, இந்தியாவுக்குக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது. கல்லிலிருந்து உயிர்த்தெழுந்த அகலிகை கதை போல, இந்தியா காலடி வைத்த பிறகு அகலேகா மட்டுமன்றி ஒட்டுமொத்த மொரிஷியஸ் தேசமும் புத்துயிர் பெற்றிருக்கிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட கட்டுமானங்கள், ராணுவப் பயிற்சி என அனுகூலங்களை மொரிஷியஸுக்கு அள்ளித் தந்திருக்கிறது இந்தியா. நீண்ட இழுபறிக்குப் பின்னரே இதுவும் சாத்தியமானது. மொரிஷியஸின் வரிக் கொள்கை இந்த இழுபறிக்கு காரணமானது.

குட்டி நாடுகளின் விநோத வரிக் கொள்கை

மொரிஷியஸ், பகாமா, சைப்ரஸ், கேமன் தீவு உள்ளிட்ட சிறிய நாடுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காகவும், முதலீடுகளை ஈர்க்கவும் வரி விதிப்பில் பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகின்றன. இந்தச் சலுகைகளுக்காக அங்கு பெயரளவில் நிறுவனங்களைத் தொடங்கும் தொழிலதிபர்கள், அதன் வாயிலாகப் பிற நாடுகளில் முதலீடு செய்யும்போது மூலதன லாப வரி, ஈவுத் தொகை மீதான வரி போன்றவற்றில் லாபமடைகின்றனர். இந்த வகையில் வளர்ந்த நாடுகள் மற்றும் சர்வதேசக் கறுப்புப் பண முதலைகள் தங்களது முதலீடுகளை இந்த தேசங்களின் வாயிலாக இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்து நோகாது லாபம் பார்க்கின்றன. நிறுவனம் தொடங்குவதற்கான சேவை வரி உள்ளிட்ட கணிசமான வருவாய்களே இந்தக் குட்டி நாடுகளுக்குப் போதுமானதாக இருக்கின்றன.

வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க வாசல்

1983-ல் மொரிஷியஸ் - இந்தியா இடையில் கையெழுத்தான நல்லிணக்க ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில், அங்கிருந்து இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளுக்கு இந்தியாவில் மூலதன லாப வரி கிடையாது. மேலும், மொரிஷியஸில் அந்த வரி நடைமுறையே கிடையாது என்பதால், முதலீட்டாளர்களுக்கு வரி செலவினத்தில் இரட்டை லாபம். இதனால் ஏகப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மொரிஷியஸில் குவிந்தன. சுற்றுலாவை மட்டுமே நம்பியிருந்த மொரிஷியஸ், இந்தப் புதிய அணுகுமுறையால் பொருளாதாரத்திலும் வளர்ந்தது. அந்நிய முதலீடுகள் என்ற போர்வையில், இந்தியக் கறுப்புப் பணம் மொரிஷியஸ் மார்க்கமாக மீண்டும் இந்தியாவில் வெள்ளையாகும் முறைகேடுகள் அதிகரித்தன.

இதற்கு முடிவுகட்ட இந்தியா முயலும்போதெல்லாம் பெரு நிறுவனங்களின் அழுத்தத்தால் மொரிஷியஸ், இந்தியாவிடம் குழைவு காட்டும். வரி ஒப்பந்தத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் பலவிதங்களிலும் இறங்கும். அதை இந்தியா சரியாகப் பிடித்துக் கொண்டதன் பலனாக, 2006-ல் அகலேகா குத்தகை சாத்தியமானது. சுற்றுலா அல்லது ராணுவத் தேவைகளுக்காக இந்தியப் பயன்பாட்டுக்கு இப்படித்தான் அகலேகா திறந்துவிடப்பட்டது.

முகம் மாறும் அகலேகா

பாஜக அரியணை ஏறியதும் எல்லைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டதில், அகலேகா தீவும் அவற்றில் இணைந்தது. 2015-ல் அங்கு சென்ற பிரதமர் மோடி, பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி வடக்குத் தீவின் 1.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட பழைய விமான ஓடுபாதை, பெரிய விமானங்கள் தரையிறங்கத் தோதாக 3 கிலோமீட்டர் நீளத்துக்குப் புதுப்பிக்கப்பட்டது. வடக்குக் கரையில் ராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகள், பயிற்சிக் கூடங்கள், மைதானம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. நவீன கண்காணிப்புக்கான ரேடார்கள், எரிபொருள் கிடங்குகள் ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகின்றன. கடற்படைத் தளம் மற்றும் கப்பல்கள் வந்து செல்ல உதவியாய் துறைமுக இறங்கு துறைகள் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. போர்க் கப்பல்கள், வேவு விமானங்கள், போர் விமானங்கள் வந்து செல்லவும் பிராந்தியப் பாதுகாப்புக்கும் அகலேகா கண்காணிப்பு உறுதுணையாக இருக்கும். இந்தியப் பெருங்கடலை மேற்கில் கடக்கும் கப்பல்களையும் நீர்மூழ்கிகளையும் கண்காணிப்பது, அவற்றின் சிக்னல்களை வழிமறித்து உளவறிவது உள்ளிட்ட பல ராணுவ பாதுகாப்புகளுக்கும் இந்தத் தளம் உதவியாக இருக்கும்.

இதன் கட்டுமானப் பணிகளுக்காக 87 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா ஒதுக்கி உள்ளது. இது, ஒட்டுமொத்தமாய் 250 மில்லியன் வரை எகிறும் என்கிறார்கள். இந்தப் படைத்தளம் குறித்து இந்திய அரசோ, ராணுவமோ இதுவரை அதிகாரபூர்வமாக வாய் திறக்கவில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு, அகலேகா பழங்குடிகளுக்குப் பாதிப்பு என ஆரம்பத்தில் எழுந்த எதிர்ப்புகளும் இப்போது இல்லை.

இந்தியப் பெருங்கடலில் விரியும் பாதுகாப்பு

இது தவிர்த்து, இந்தியப் பெருங்கடலின் வடகிழக்குப் பாதுகாப்புக்காக அந்தமான் நிகோபர் தீவுகளிலும் இதுபோன்ற பாதுகாப்பு தளங்கள் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதே வரிசையில் செஷல்ஸ் தீவு மற்றும் மாலத்தீவில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் சீனாவின் அழுத்தம் காரணமாகப் பின்னடைவைச் சந்தித்தன. ஒரு வழியாக அகலேகா மூலம் முக்கிய நகர்வினைச் சாதித்திருக்கிறது இந்தியா.

தொலைநோக்குப் பார்வையில் பிராந்தியக் கண்காணிப்பு, தேசப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இந்தத் தீவின் படைத்தளம் பெரும் உதவியாக இருக்கும். சீனாவின் இந்தியப் பெருங்கடல் வாலாட்டலைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உதவும். பிரிட்டன் - அமெரிக்கக் கூட்டு முயற்சியிலான சாகோஸ் தீவுக்கூட்டத்தின் டியகோ கார்சியா தீவு படைத்தளமும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளின் மறைமுக ஆதரவும் கூடுதலாக இந்தியாவின் பக்கம் உள்ளன. மொரிஷியஸின் தற்போதைய பிரதமரான பிரவிந்த் குமார் ஜுகநாத்தும், இந்தியாவுடன் கூடுதல் இணக்கமாகவே உள்ளார்.

பொருளாதார பாதிப்பு

இந்திய எல்லைகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் அதேவேளையில், பொருளாதார உறுதியில் எல்லைக்குள் இந்திய அரசு கோட்டை விட்டிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அகலேகா தீவு சமரசத்தால், மொரிஷியஸ் மார்க்கமாக எல்லை தாண்டி வரும் கறுப்புப் பணத்தை முடக்குவதற்கு இந்தியாவிடம் இப்போதைக்குத் திட்டங்கள் இல்லை. இந்த விபரீதப் போக்கு தொடர்ந்தால், தொலைநோக்கு அடிப்படையில் தேசத்தின் பொருளாதாரம் சீரழிய வாய்ப்பாகும். எனவே, எல்லைப் பாதுகாப்புக்கு நிகராகப் பொருளாதாரக் கோட்டைகளின் ஓட்டைகளை அடைப்பதும் இப்போது அவசியம்.

x