கரு.முத்து
muthu.k@kamadenu.in
அஞ்சல் தலைகள், நாணயங்கள் போன்றவற்றைச் சேகரிப்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் தீப்பெட்டி அட்டைகளைச் சேகரிப்பவர்களும் இருக்கிறார்கள் தெரியுமா? ஆம், ‘பிலுமெனிஸ்டுகள்’ என்று அழைக்கப்படும் இவர்கள், விதவிதமான தீப்பெட்டிகளைச் சேகரிப்பதில் தனித்த ஆர்வம் கொண்டவர்கள்.
உலக அளவில் ஏராளமான பிலுமெனிஸ்டுகள் உண்டு. தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்கவர்களாகத் திருச்சியைச் சேர்ந்த விஜயகுமார் - சித்ரா தம்பதியைச் சொல்லலாம். தேசம் முழுதும் தேடித்தேடி, 5 ஆயிரம் தீப்பெட்டி அட்டைகளைச் சேகரித்து அசத்தி வருபவர்கள் இவர்கள். தீப்பெட்டிகளுடன் ஏராளமான பழம்பொருட்களும் இவர்களது சேகரத்தில் உண்டு என்பது இன்னொரு சிறப்பு!
விஜயகுமார் அடிப்படையில் ஒரு யோகா மாஸ்டர். இவரது மனைவி சித்ரா வழக்கறிஞர். இருவரும் தங்கள் தொழில் நேரம் போக மீதி நேரமெல்லாம் தீப்பெட்டி சேகரிப்பில்தான் தீவிர கவனம் செலுத்துகிறார்கள். இவர்களின் மகள் கீர்த்தனா ப்ளஸ் 2 படிக்கிறார். தாய், தந்தைக்கு உதவியாக அவரும் அரிய பொருட்கள் சேகரிப்பில் அர்ப்பணிப்பு காட்டிவருகிறார்.
அறிவுத் தாகம் தீர்க்கும் இல்லம்
திருச்சி புத்தூரில் உள்ள இவர்களின் வீட்டுக்குச் சென்றால், முதலில் வரவேற்பது கால்நடைகளுக்கான தண்ணீர்த் தொட்டிகள்தான். பறவைகளும் இங்குவந்து தாகம் தீர்த்துச் செல்கின்றன. மனிதர்களின் தாகம் தீர்க்க இடப்பக்கம் மண்பானை காத்திருக்கிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால், சுமார் 5 ஆயிரம் நூல்களைக் கொண்ட அற்புதமான நூலகம் நம்மை வரவேற்கிறது. அதற்கும் அப்பால் கல்திருகை, உரல், உலக்கை என்று நம் பாரம்பரியத்தைப் போற்றும் கல் உபயோகப் பொருட்கள், ஏர்கலப்பை உள்ளிட்ட உழவுக்கருவிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. அஞ்சல் தலைகள், உறைகள், நாணயங்கள், கரன்ஸி நோட்டுகள், ஸ்டாம்புகள், ஸ்டாம்ப் பேப்பர்கள், செல்போன் ரீசார்ஜ் அட்டைகள், கைக்கடிகாரங்கள், சிற்றிதழ்கள் என்று இவர்களது சேகரத்தில் ஒரு காலச் சுரங்கமே கொட்டிக்கிடக்கிறது. அதையும் தாண்டி சமூக சேவைகளையும் செய்துவருகிறார்கள்.
இவர்களின் ‘அமிர்தா அறக்கட்டளை’ சார்பில், திருச்சி நகரில் ஆதரவற்ற சடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. விஜயகுமாரால் செல்ல முடியாதபோது சித்ராவே சுடுகாட்டுக்கு நேரில் சென்று, இறுதிக் காரியங்களை நடத்தி அடக்கம் செய்கிறார். அறக்கட்டளை மூலமாகத் தினந்தோறும் 50 பேருக்கு அன்னதானமும் செய்யப்படுகிறது. கைவிடப்பட்ட வளர்ப்புப் பிராணிகளை விலங்கின ஆர்வலர்களிடம் ஒப்படைத்து, அவர்கள் மூலம் பராமரிக்க ஏற்பாடு செய்கிறார்கள் இவர்கள்.
தீப்பெட்டி வரலாறு
தீப்பெட்டி அட்டைச் சேகரிப்பில் மட்டுமல்ல, தீப்பெட்டி வரலாற்றிலும் தேர்ந்தவர்கள் இந்தத் தம்பதியினர். அது தொடர்பாக ஏகப்பட்ட தகவல்களைக் கொட்டுகிறார்கள்.
“தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜான் வாக்கர். 1827-ல் தான் உருவாக்கிய வேதியியல் கலவை, தரையில் உரசி எரிவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அவர், ஆன்டிமோனி சல்பைடு, பொட்டாசியம் குளோரேட்டு, கோந்து மற்றும் ஸ்டார்ச் ஆகிய மாவுப்பொருட்களைச் சேர்த்து, சொரசொரப்பான தளத்தில் தேய்த்தால் தீப்பற்றும் என்பதைக் கண்டுபிடித்தார்...” என்று தொடங்கி, உலகுக்குத் தீப்பெட்டி அறிமுகமான கதையை விரிவாகச் சொல்லிக்கொண்டே சென்றவர்களை இடைமறித்து நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்தேன்.
“தீப்பெட்டி அட்டைகள் சேகரிப்பில் இப்படி ஒரு ஆர்வம் எப்படி வந்தது?” என்ற கேள்விக்கு விஜயகுமார் பதில் சொன்னார்.
“எல்லோரையும்போல எனக்கும் அஞ்சல் தலைகள் சேகரிப்பில்தான் முதலில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும்போதே அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்படியே கரன்ஸி நோட்டுகள், நாணயங்கள் என்று ஆரம்பித்து எதெல்லாம் கிடைக்கிறதோ அதையெல்லாம் சேகரித்தேன். அது வரலாற்றை அறிந்துகொள்ளும் ஒரு தேடலாக மாறியது. அந்த ஆர்வம்தான் வரலாற்றை ஆவணப்படுத்தும் அக்கறையாக இப்போது மாறியிருக்கிறது.
தீப்பெட்டி அட்டைகள் நம்முடைய கலாச்சாரத்தின் குறியீடாக மாறியிருக்கின்றன எனலாம். மலர்கள், விலங்குகள், உழவு, நெசவு, ஜல்லிக்கட்டு, பழக்கவழக்கம் என்று எல்லாவற்றையும் அவை நமக்குக் காட்சிப்படுத்திக் காட்டுகின்றன. தீப்பெட்டி அட்டை ஒரு விளம்பர சாதனமாகவும் பயன்படுகிறது. இப்போதுகூட கொக்கோ கோலா போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளின் விளம்பரங்களும் தீப்பெட்டிகளில் வருகின்றன. இப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப தீப்பெட்டி அட்டைகள் நமது கலாச்சாரத்தைத் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டே வருகின்றன. அவற்றைக் காலமுறைப்படுத்தி வரிசைப்படுத்தும்போது பல கதைகள் நமக்குக் கிடைக்கின்றன” என்றார் விஜயகுமார்.
தொடர்ந்து தங்களது சேகரத்தின் சிறப்புகளை அடுக்கிய அவர், “70 வருடங்களாக வந்த 5,000 தீப்பெட்டி அட்டைகள் மற்றும் லேபிள்கள் எங்களிடம் உள்ளன. 15 இந்திய மொழிகள், பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் அச்சிடப்பட்ட தீப்பெட்டி அட்டைகளை வைத்திருக்கிறோம். முதலில் வந்த லேபிள்களில் ஆரம்பித்து இப்போதுள்ள வேக்ஸ் வரையிலும் எல்லாவிதமானவையும் இருக்கின்றன. பண்டிகைக் காலங்களுக்கும் தனிப்பெட்டிகள் இருக்கின்றன. மதுக்கூடங்கள், ஹோட்டல்கள், கடைகளுக் கென்றும்கூட தனியாகத் தீப்பெட்டிகள் உண்டு.
இந்தியாவில் தீப்பெட்டி வடிவம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் வெளிநாடுகளில், வெவ்வேறு வடிவங்களில் தீப்பெட்டிகள் வந்திருக்கின்றன. என்னதான் விதவிதமான லைட்டர்கள் வந்துவிட்டாலும் உலகெங்கும் தீப்பெட்டிக்கென்று தனி மவுசு இருக்கிறது.
தீப்பெட்டிகள் மட்டுமல்லாது நமது முன்னோர் பயன்படுத்திய மரபுப் பொருட்களையும் சேகரித்து வைத்திருக்கிறோம். சேர, சோழ, பாண்டிய, பல்லவர் காலத்து நாணயங்கள் உட்பட ஏராளமான பழங்கால நாணயங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றில் தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு நாணயங்களும் ஓட்டைக்காசுகளும் அடக்கம். பஸ் டிக்கெட்டுகள், ட்ரெயின் டிக்கெட்டுகள், லாட்டரி சீட்டுகளையும்கூட சேகரித்து வைத்திருக்கிறோம். அதில் எம்ஜிஆர் கையெழுத்து போட்ட லாட்டரி சீட்டும் இருக்கிறது” என்று சொன்னார்.
“ஒருபக்கம் கலைப்பொருட்கள் சேகரிப்பு, இன்னொரு பக்கம் பல்வேறு சமூக சேவைகள் செய்கிறீர்கள். இதற்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?” என்று கேட்டோம்.
“சேகரிப்பும் சேவையும் எங்கள் இரு கண்கள். யோகா கற்றுத்தருவதன் மூலம் எனக்கு ஓரளவு வருவாய் கிடைக்கிறது. என் மனைவி வழக்கறிஞர் என்பதால் அதிலும் போதிய வருமானம் வருகிறது. எங்களுக்கென்று பூர்விகச் சொத்தும் இருக்கிறது. அதையெல்லாம் வைத்துத்தான் செலவுகளைச் சமாளிக்கிறோம். திருமண வீடுகள், உணவகங்களில் மீதமிருக்கிற உணவை வாங்கிவந்து வறியவர்களுக்கு வழங்குகிறோம். ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்வதிலும் பெரிய அளவில் செலவாகாது. கால்நடைகள், பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வழங்குவதை எங்கள் ஆத்ம திருப்திக்காகச் செய்கிறோம்.
எல்லாவற்றுக்கும் பணம்தான் தேவையென்று இல்லை. மனம் இருந்தாலே போதும், மார்க்கம் கிட்டும். தீப்பெட்டி அட்டைச் சேகரிப்பில் உலக சாதனை புரிய வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்” என்று சொல்லி விடை கொடுத்தார்கள் விஜயகுமார் - சித்ரா தம்பதியினர்.
சக உயிரினங்கள் மீது அன்பும், அரிய பொருட்கள் சேகரிப்பில் அக்கறையும் கொண்ட இவர்களுக்கு வெற்றிகள் குவியட்டும்!