வாசிக்காத புத்தகத்தின் வாசனை!


கொ.மா.கோ.இளங்கோ
kelango_rahul@yahoo.com

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனிகல் எல்லையில் உள்ள ஒரு மலைக்கிராமம் சம் ஏரோ கியே. 10 கி.மீ பயணித்தால், காம்பியாவுக்குள் நுழைந்துவிடலாம். இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த காடுகளுக்கு நடுவில் உள்ளது அந்தக் கிராமம். காடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான செம்மரங்கள் வளர்ந்திருப்பதைக் காணலாம்.

சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல், வியர்வை சொட்டச்சொட்ட ஒரு செம்மரத்தை அறுத்துச் சாய்ப்பதில் தீவிரமாக இருந்த அப்பாவைத் திகைப்போடு பார்க்கிறான் அக்கான். அவரது கையில் வைத்திருந்த இயந்திர ரம்பம் எழுப்பிய ‘கிர்ர்ர்ர்...’ என்ற இரைச்சல் சத்தம் காதுகளைக் கிழித்துக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் மரத்தைச் சாய்த்த களைப்பு. ரம்பத்தைக் கீழே வைத்துவிட்டு தண்ணீர் குடிக்கக் கிளம்பிய பம்பா பலடே, “அடிமரத்தைச் சுற்றி சிதறியிருக்கும் மரத்தூளை சாக்குப்பையில் சேகரித்து வை” என்று மகனிடம் கண்டிப்புடன் சொன்னார்.

எப்போதும் அவர், ஒரு கையடக்க வானொலிப் பெட்டியை உடன் எடுத்துச் செல்வது வழக்கம். தொலைக்காட்சி ஒளிபரப்பு வந்துசேராத கிராமங்களுக்கு இன்றும் உயிர் கொடுத்துக்கொண்டிருப்பவை வானொலிப் பெட்டிகள்தான். வழக்கம்போல, அது உள்ளூர்த் தலைவரின் புகழ் பாடிக்கொண்டே இருக்கிறது.

ஆசையோடு அதை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு, அப்பா சொன்ன வேலையைச் செய்து முடிப்பதில் கவனம் செலுத்திய அக்கானுக்கு ஒரே ஆச்சரியம். வானொலியைக் காதோரம் வைத்துக் கேட்டான். ஒரு நேர்காணல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அது வியப்பான அனுபவத்தைத் தந்தது. அக்கான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

“புத்தகங்களுக்கு உயிர் உண்டு. அவை பேசும். புத்தகம், ஒரு பொருள் மட்டுமே அல்ல என்ற மாக்சிம் கார்க்கியின் வரிகளை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். இந்த உலகில் ஓசையின்றி நடக்கும் மிகச் சிறந்த கொண்டாட்டம் புத்தக வாசிப்பு. ஆமாம், நண்பர்களே! அண்மையில் உலகம் முழுவதிலும் உள்ள வாசகர்கள் இணையத்தில் கூடி ஒரு புத்தகத்தைப் பற்றி நாள் முழுவதும் விவாதித்தார்கள். அது என்ன புத்தகம், யார் எழுதியது என்று தெரிந்துகொள்வதற்கு முன்னால் வாசிப்பை நேசிக்கும் பலரின் அனுபவங்களைக் கேளுங்கள்” என்ற ஒரு பெண் தொகுப்பாளியின் இனிமையான குரல், அக்கானின் கவனத்தை ஈர்த்தது. மொத்த நிகழ்ச்சியும் அவனை வியப்புக்கு உள்ளாக்கியது. மனம் ஒன்றிக் கேட்டான்.

முதலில் ஒரு வாசகர் பேசத் தொடங்கினார். “நான், சுதுஷ். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இணைகிறேன். நான் பிறந்தது முதல் கண்பார்வை இல்லாதவன். இந்த வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு எவ்வளவு உடைந்துபோய் நின்றிருக்கிறேன் தெரியுமா? உங்களை என்னால் பார்க்கவே முடியாது. பெற்ற தாய் தந்தையைப் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம். ஆற்றுப்படுத்த முடியாத கவலைகள். இதையெல்லாம் ஒரு நொடியில் மறக்கச் செய்து என்னை மாற்றியது ஒரு புத்தகம்.

மாற்றுத் திறனாளியான என்னைக் கைப்பிடித்துக் கூட்டிச்செல்ல உதவும் என் தம்பி எனக்குக் கடவுள். அவன் எனக்கு ஓர் உதவியாளன் மட்டும் இல்லை, உயிர் தந்தவன். அப்படி என்ன செய்தான் என்றுதானே கேட்கிறீர்கள்? அவன் எனக்கு ஒரு புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தான். அதுதான் ‘உயிர் தரும் மரம்’ (Life Giving Tree).

தினமும் காலை, எனக்காக அவன் மறக்காமல் அந்தக் கதையை வாசித்துக் காட்டி உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறான். நான் மாற்றுத்திறனாளியாக உணரவில்லை. ஷெல் சில்வர்ஸ்டைன் எனக்குப் பார்வை தந்துவிட்டார். சேவை உள்ளத்தோடு பிறருக்கு உதவுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் அன்பான மனிதர்களைப் பார்ப்பதற்கு, அந்த மரம் எனக்கு ஒற்றைக் கண்ணைத் தந்திருக்கிறது தெரியுமா?” என்று சிலாகித்தார் அந்த வாசகர்.

அக்கானுக்கு அழுகை வந்தது. சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்களை அறுத்து கடத்தல்காரர்களிடம் அப்பா விற்கிறார் என்ற உண்மை அவனுக்கு அரசல் புரசலாகத் தெரியும். இன்னும் கொஞ்ச நேரத்தில், ஒரு சரக்கு லாரி அங்கு வந்து சேரும். அப்பா அறுத்துவைத்த மரங்களை, பாரந்தூக்கியால் எடுத்துவைத்துக்கொண்டு திரும்பிவிடும். தொடக்கக் காலத்தில் இருந்த அச்சம் இப்போது அவனிடம் இல்லை. இதயம் படபடத்துக் கொள்வதில்லை. நொறுங்கிப் போவதாக உணர்வதும் இல்லை. சில நாட்களில் எல்லாமே பழகிவிட்டன.

சிறிதுநேர இடைவெளியில் மடியிலிருந்த வானொலிப் பெட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்த அலகராஷை அறிமுகம் செய்தது.
“எனக்கு ஒரு வயது இருக்கும்போது என் அம்மா இந்தப் புத்தகத்தை எனக்கு வாங்கித் தந்தார். எனக்கு மகன் பிறந்தவுடன் அதே புத்தகத்தை அவனுக்கு வாங்கித் தந்தார். வாழ்க்கை முழுவதும் அந்தப் புத்தகத்தோடு உடன் இருந்தார் அல்லது அந்தப் புத்தகம் அவருடன் இருந்தது. அந்தப் புத்தகத்தின் பல பிரதிகள் எங்கள் வீட்டில் மூலைமுடுக்கெல்லாம் கொட்டிக் கிடக்கின்றன. அம்மாவுக்கு அந்தப் புத்தகம்தான் உயிர். அவரின் சொத்து. தோட்டத்தில் வேலை செய்யும்போதுகூட அந்தப் புத்தகத்தை அவர் கையில் வைத்திருப்பார். கதை வாசிப்பார். கதை கேட்கும் பூக்கள் சிரிக்கும். நான் பலமுறை அதைப் பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் அம்மா இறந்துபோனார். மரப்பெட்டியில் படுத்திருந்த அம்மாவின் கையில் ‘உயிர் தரும் மரம்’ புத்தகத்தை வைத்து அடக்கம் செய்தோம். அவரைப் புதைத்த இடத்துக்கு அருகில் ஒரு செடியை நட்டுவைத்தோம். இன்று அது, மரமாக வளர்ந்திருக்கிறது. இப்போதும் என் அம்மா ஒரு மரமாக என்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அது, எனக்கு உயிர் தரும் மரம்” என்றார் அலகராஷ்.
இப்படிப் பலர் தங்களது நினைவுகளை உருக்கமான பதிவுகளாகப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். மறுபடியும் அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், “புத்தகங்கள் வாய்திறந்து பேசுவதில்லைதான். ஆனாலும் நம் கண்கள் வழியே நுழைந்து இதயத்தோடு மட்டும் உறவாடிவிட்டு வருவது தெரிகிறதா? இந்தக் கதையில் ஒரு மரம், தன் சின்னஞ்சிறு நண்பனுக்கு இலை, பழம் என ஒவ்வொன்றாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. பாருங்களேன்! அந்தப் பையன்தான் எவ்வளவு சுயநலக்காரன்? வயதான பிறகும்கூட மரத்திற்குத் திருப்பிக்கொடுக்க அவனிடம் எதுவுமே இல்லை. அன்புகூட...

பல ஆண்டுகள் உயிர் நண்பனாகப் பழகிய மரம், கடைசி வரையிலும் எதையாவது கொடுத்துக்கொண்டிருந்தது. வெட்டிச் சாய்த்த பிறகும்கூட வயதான நண்பனை அரவணைத்து அடிமரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்த மரத்துக்குக் கைமாறாக அவன் செய்ததென்ன? அவன் செய்திருக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இதுநாள்வரை மரத்தில் இருந்து பறித்துச் சாப்பிட்ட ஆப்பிள் விதைகளை, காடு முழுவதும் விதைத்திருக்கலாம். தன் அருகில் துளிர்க்கும் சிறுசிறு செடிகளைப் பார்த்துத் தாய்மரம் சந்தோஷப்பட்டு இருக்காதா? வாழ்நாள் முழுவதும் அவனை வாழ்த்தி இருக்குமே. சுயநலக்காரனாக மாறிய மனிதன் கருணை, உதவி என்ற வார்த்தைகளை மறந்தே போனான். பூவுலகில் அழிவுக்குக் காரணாமாகிப் போனான்” என்றார்.

அவரை ஆமோதித்துப் பேசிய காதிர் , “பாட்டி, அம்மா, நான், என் மகள் என நான்கு தலைமுறையினருக்கும் பிடித்த ஒரே புத்தகம் இது. அந்தப் புத்தகத்துக்கு இப்போது 50 வயதுக்கு மேலாகிறது. ஆனால், அதில் உள்ள கதைக்கு மட்டும் என்றும் வயதாவதே இல்லை. தவழும் வயதுப் பிள்ளைகளுடன் இந்தப் புத்தகம் தவழ்கிறது. முதியவர்களுக்கு ஆறுதலாகவும் ஆசுவாசம் தருவதாகவும் இருக்கிறது. இறுக்கமான மனநிலையில் உள்ளவர்களை மீட்டு, நம்பிக்கை ஒளிகாட்டும் ஒரு மந்திரச்சாவியை அந்தப் புத்தகம் தந்து செல்கிறது” என்றார்.

அதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அக்கான், சீக்கிரமே ‘உயிர் தரும் மரம்’ புத்தகத்தை வாசிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். காடுகளை ஒட்டிய மலைக்கிராமத்தில் யாரிடம் சொல்லி அந்தப் புத்தகத்தை வாங்குவது? யோசனை செய்த அக்கான், மடியில் இருந்த வானொலிப் பெட்டியைப் பார்த்துக் கேட்டான். “உங்கள்ல யாராவது ஒருத்தர், எங்க ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு அந்தப் புத்தகத்தை அனுப்பி வைகக்க முடியுமா?” என்றான். பல தடவை கெஞ்சிப் பார்த்தான். நேரலை நிகழ்ச்சியில் பங்கெடுத்த யாரிடமிருந்தும் பதில் இல்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு அக்கான் அமைதியானான். வானொலிப் பெட்டியிடம் பேச முடியாது என்ற உண்மை கடைசியில் புரிந்தது.

அடுத்த சில நிமிடங்களில், கிறிஸ்டி ரேயன் என்பவர் அமெரிக்காவிலிருந்து பேசினார், “என் அப்பா ஒரு கிறிஸ்தவ போதகர். தேவாலயத்துக்குச் சொந்தமாக ஒரு மருத்துவமனை இருக்கிறது. தினமும் அங்கே பிரார்த்தனைக் கூட்டங்கள் நடப்பதுண்டு. என் அப்பா நோயாளிகளுக்கு, ‘உயிர்தரும் மரம்’ கதை சொல்வார். நானும் அப்பாவின் எல்லா நிகழ்விலும் கலந்துகொள்வேன். நாளொன்றுக்கு 22 பேரிடமாவது அந்தக் கதையைச் சொல்வேன். அந்தக் கதை ஆப்பிளைவிட பல மடங்கு அதிகமான சுவையை வாழ்வில் பரிசளித்திருக்கிறது. இன்னும் என் பழைய தொப்பிக்கு அடியில் ஒரு தங்க இலையைப்போல அதைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இந்த வாழ்வின் ஆதாரமான மகிழ்ச்சியைத் தருவது ‘உயிர் தரும் மரம்’. ஆமாம்! அந்தப் புத்தகம் இன்னும் நூற்றாண்டு காலம் வாசிப்பின் சுவையை விதைத்துக்கொண்டே இருக்கும்” என்றார்.

மலைச்சரிவில் உருண்டு ஓடும் ஒரு முட்டைக்கோசு போல இப்போதே பாய்ந்து ஓட வேண்டும். வகுப்பாசிரியரைச் சந்தித்து புத்தகத்தை வாங்கித் தரும்படி வேண்டுகோள் வைக்க விரும்பினான் அக்கான். யோசனையில் ஆழ்ந்திருந்த அக்கானின் முகத்தை மறைத்தது, ‘பொட்... பொட்... பொட்...’ என்ற இரைச்சல் சத்தத்துடன் வந்துசேர்ந்த சரக்கு லாரி கக்கிய கரும்புகை. லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஒரு செம்மரத்துக்குப் பின்னால் ஓடி அவன் மறைந்துகொண்டான்.

அவன் கண் திறந்து பார்த்தபோது, அப்பாவும் லாரி ஓட்டுநரும் சற்று தொலைவில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். உடன்வந்தவர் பாரந்தூக்கியால் ஒவ்வொரு மரமாக வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார். அக்கானின் கண்கள் குளமாயின. மனம் நொறுங்கிப்போனது. அங்கிருந்தவர்களில் ஒருவர்கூட அவனை ஆற்றுப்படுத்த முன்வரவில்லை; ஒரு மரத்தின் வலியை அவர்கள் அறிந்திருக்கவில்லை; சிறுவர் உலகைப் புரிந்துகொண்டதில்லை; கண்ணீர் சிந்தியது இல்லை. அவர்களின் ரத்தம் சிவப்பு இல்லை. அவர்களின் இதயம் மரம் அறுக்கும் இயந்திரத்தைப் போல மிகவும் கோரமானது என்று உணர்ந்த அக்கான், மரத்தூள் சேகரித்த சாக்குமூட்டையில் சாய்ந்து உட்கார்ந்து உடைந்து அழுதான்.

மரங்களை ஏற்றிக்கொண்ட சரக்கு லாரி புகையைக் கக்கியபடி இயக்கத்துக்கு வந்தது. அக்கானுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. குழப்பத்தில் இருந்தான். சரக்கு லாரி, கரடு முரடான காட்டுப் பாதையில் குலுங்கிக் குலுங்கி நகர்ந்தது. நத்தையைவிட மெதுவாக ஊர்ந்தது. அதற்குள் வானொலிப் பெட்டி அப்பாவின் கைக்கு மாறியிருந்தது.

திடீரென்று அங்கிருந்து எழுந்து ஓடிய அக்கான், ஓர் உயரமான செம்மரத்தில் இருந்த மரப்பிசினை பிய்த்து எடுத்தான். சரக்கு லாரியின் பக்கம் திரும்பி ஓடியவன் கையிலிருந்த பசையைக் கொண்டு லாரி முகப்பில் ‘உயிர் தரும் மரம்’ (Life Giving Tree) என்று குண்டு எழுத்துக்களால் எழுதினான். பிறகு நீண்ட பெருமூச்சு விட்டான். அவனது உள்ளங்கைகளில் வாசிக்காத புத்தகத்தின் வாசனை வீசியது.

x